search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99919"

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கார்த்தி சிதம்பரத்துக்கு, தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 
     
    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சொந்த அலுவல் காரணமாக இந்த மாதம் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதால் அனுமதி அளிக்கும்படி கூறியிருந்தார். 



    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அமர்வு, நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்திவிட்டு, அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அனுமதி அளித்தது. மேலும், ஏற்கனவே பிறப்பித்த நிபந்தனைகளை ஏற்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

    இதற்கிடையே, தான் ஏற்கனவே நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்திய பிணைத்தொகை 10 கோடி ரூபாயை திரும்ப தரவேண்டும் எனக்கோரி கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என கார்த்தி சிதம்பரத்துக்கு அறிவுரை வழங்கியதுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    தலைநகர் டெல்லியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான ஆட்சி 352 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, மோடி 30-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் முக்கிய பிரமுகர்களை கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.



    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், பாராளுமன்ற தேர்தலில் வென்று பிரதமராக மீண்டும் பொறுப்பேற்க உள்ள நிலையில், பிரணாப்ஜி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என பதிவிட்டுள்ளார்.
    டெல்லியில் இன்று தொடங்கிய காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மே மாதத்துக்குள் 2 டிஎம்சி நீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது. 4 மாநிலங்களும் இந்த இரு அமைப்புகளுக்கு தங்களது தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து உள்ளன. 

    காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 2 முறை கூடி இருக்கிறது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி கூடியது. ஒழுங்காற்று குழு கூட்டம் கடைசியாக 23-ம் தேதி நடைபெற்றது.



    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3-வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில், மேகதாது விவகாரம் குறித்த நிகழ்ச்சி நிரலை திரும்ப பெற வேண்டும். இனிவரும் காலங்களில் மேகதாது விவகாரத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கூடாது என தமிழக அரசு வலியுறுத்தியது.

    மேலும், மே மாதத்துக்குள் 2 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும் எனவும், ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய 9.2 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு விடுவிக்க ஆணையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
    சுதந்திரப் போராட்ட வீரரான வீர சவர்க்காருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    சுதந்திரப் போராட்ட வீரரான வீர சவர்க்காரின் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது சேவையை நினைவு கூரும் வகையில் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரரான வீர சவர்க்காருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் இன்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், வீர சவர்க்காரின் மன தைரியம், தேசப்பற்று மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை வலுவான இந்தியாவை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்துள்ளன. நிறைய பேருக்கு அவர் முன்னுதாரணமாக விளங்கி வருகிறார் என பதிவிட்டுள்ளார்.
    டெல்லியில் நடைபெற்ற பாஜக மற்றும் கூட்டணி எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, அரசியல் சாசன புத்தகத்தை வணங்கி, உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று நடைபெற்ற பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தில் பாராளுமன்ற பாஜக குழு தலைவாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராகவும் மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர், இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அவர் பேசியதாவது:-

    யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளனர். 2014 தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜக  25 சதவீதம் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. புதிய இந்தியாவை உருவாக்க இந்த தேர்தலில் மக்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். இந்த தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. என்னை நம்பிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், மக்களுக்கும் நன்றி.



    புதிய கடமைகளை முழுமையாக நிறைவேற்ற தயாராக உள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து புதிய இந்தியாவை கட்டமைப்போம் மாற்றுவோம். நான் உங்களில் ஒருவன், உங்களுக்கு சமமானவன். அனைவரின் ஆலோசனைகளை கேட்டறிந்து புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம். புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான எங்கள் பயணத்திற்கு புதிய பாதை கிடைத்துள்ளது.

    சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பாராளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர். இது பெண்களின் சக்தியால் சாத்தியமானது.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பாராளுமன்ற தேர்தலில் வென்றவர்களின் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று வழங்கினார்.
    புதுடெல்லி:

    ஏழு கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மை இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    இதையடுத்து, 16வது மக்களவையை கலைக்கும் தீர்மானம் அமைச்சரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மக்களவையை கலைத்து உத்தரவிட்டார்.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வென்ற எம்.பி.க்களின் பட்டியலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று வழங்கினார்.
    குஜராத்தை சேர்ந்த பாஜக வேட்பாளர் சி.ஆர்.பாட்டீல், பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

    இந்த தேர்தலில் நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை குஜராத் மாநில பாஜக வேட்பாளருக்கு கிடைத்துள்ளது. 

    குஜராத் மாநிலத்தின் நவ்சாரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சி.ஆர். பாட்டீல், 9,69,430 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தர்மேஷ்பாய் பீம்பாய் பட்டேல் 2,81,663 வாக்குகள் பெற்றார்.



    இதன்மூலம் சி.ஆர். பாட்டீல் 6 லட்சத்து 87 ஆயிரத்து 767 ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதேபோல், மேலும் 2 பா.ஜ.க. வேட்பாளர்கள் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 

    அரியானாவின் கர்னால் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சஞ்சய் பாட்டியா 6,54,269 வாக்குகள் வித்தியாசத்திலும், ராஜஸ்தானின் பில்வாரா தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் சுபாஷ் சந்திர பகேரியா 6,10,920 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் பாஜக 303 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஏழு கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

    இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 350க்கு மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜக மட்டும் தனித்து 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

    இதேபோல், காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 52 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. 

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அதில் அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் பிரதமர் மோடி.

    பிரதமர் மோடியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு மோடியை கேட்டுக் கொண்டார்.
    16-வது மக்களவையை கலைப்பதற்கான தீர்மானம் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 349 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதில் பாஜக மட்டும் 302 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. 

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தற்போதைய அமைச்சரவை மற்றும் மக்களவை முடிவுக்கு வருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வென்றது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் போபால் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் சாத்வி பிரக்யா சிங் தாக்குரும், காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கும் போட்டியிட்டனர்.

    இதில் சாத்வி பிரக்யா சிங் 8,66,482 வாக்குகளும், திக்விஜய் சிங் 5,01,660 வாக்குகளும் பெற்றனர். சாத்வி பிரக்யா சிங் 3,64,822 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



    இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வென்றது வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நாட்டின் தற்போதைய நிலையில் காந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வெல்வதா? இது எனக்கு வேதனை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று மாலை சந்திக்கிறார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று மாலை சந்திக்கிறார்.

    பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில் ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×