search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99994"

    இலங்கையில் அதிகரித்து வரும் அரசியல் குழப்பத்தில், தொழில் மற்றும் வெளிநாட்டுத்துறை துணை மந்திரி மனுஷா நாணயக்காரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். #SriLanka #ManushaNanayakkara
    கொலும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கேவை பதவிநீக்கம் செய்த அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தார். இதற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், பிரதமராக தாமே நீடிப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.

    இதையடுத்து, நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா முடக்கியுள்ளார். அதைத்தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே மற்றும் இதர கட்சிகளில் இருந்து எம்.பி.க்களை விலைக்கு வாங்க ராஜபக்சே பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அடுத்தடுத்து, அதிரடியாக இலங்கை அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், இலங்கையின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை துணை மந்திரி மனுஷா நாணயக்காரா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

    அவரது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவுக்கு அனுப்பியுள்ள மனுஷா, ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தது அரசியலமைப்புக்கு முரணானது மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என குறிப்பிட்டுள்ளார்.  #SriLanka #ManushaNanayakkara
    இலங்கை பாராளுமன்றம் நவம்பர் 14-ம் தேதி கூடுகிறது என அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். #SriLanka #Parliment #Maithripalasirisena
    கொழும்பு:

    இலங்கை அதிபராக பதவி வகிக்கும் மைத்ரிபால சிறிசேனா, பிரதமராக இருந்த ரணில் விக்கிரம சிங்கேவை கடந்த மாதம் அதிரடியாக நீக்கினார்.

    மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அத்துடன் பாராளுமன்றத்தையும் வருகிற 16-ந் தேதி வரை முடக்கி வைத்து உத்தரவிட்டார்.

    அதிபரின் இந்த முடிவுக்கு ரணில் விக்கிரம சிங்கே மற்றும் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அங்கு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் வலியுறுத்தி வந்தம.



    இதற்கிடையே, இலங்கை பாராளுமன்றம் 7-ம் தேதி கூடும் என தகவல் வெளியானது. ஆனாலும் அது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பதால் பாராளுமன்றம் கூடுவதில் குழப்பம் நீடித்தது.

    இந்நிலையில், இலங்கை பாராளுமன்றம் 14-ம் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா நேற்று அறிவித்தார். இது தொடர்பாக அவரது செயலாளர் உதய சேனவிரத்னே மூலம் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    அதிபரின் இந்த உத்தரவால் இலங்கை பாராளுமன்றம் கூடுவதில் இருந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. #SriLanka #Parliment #Maithripalasirisena
    எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். #TNFishermen #SriLanka
    சென்னை:

    ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை பகுதிகளை சேர்ந்த 600 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 17 பேரை கைது செய்தனர்.

    சிறைபிடிக்கப்பட்டவர்களில் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 7 பேரும், புதுக்கோட்டை பகுதி மீனவர்கள் 6 பேரும், நாகை பகுதியை சேர்ந்த 4 மீனவர்களையும் காரைநகர் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து, நீரியல் துறை அதிகாரிகளிடம் தமிழக மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டு, வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுக்கு பின், சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிய வருகிறது.

    இலங்கை சிறையில் ஏற்கனவே 16 மீனவர்கள் உள்ளனர். இந்நிலையில் இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்ற இரண்டே நாட்களில் 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #TNFishermen #SriLanka
    இலங்கையில் பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஊழியர் ஒருவர் பலியானது தொடர்பாக மந்திரி அர்ஜூனா ரணதுங்கவை போலீசார் இன்று கைது செய்தனர். #SrilankaShooting #ArjunaRanatunga
    கொழும்பு:

    முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் தீவிர ஆதரவாளரும், இலங்கை பெட்ரோலிய வனத்துறை முன்னாள் மந்திரியுமான அர்ஜூனா ரணதுங்க நேற்று மாலை தனது அலுவலகத்துக்கு பாதுகாவலர்களுடன் சென்றார். அங்கு சில கோப்புகளை எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால் அங்கிருந்த சில ஊழியர்கள் அர்ஜூனா ரணதுங்கவை சிறைப்பிடிக்க முயற்சித்தாக கூறப்படுகிறது.

    அப்போது இரு தரப்பினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசம் அடைந்த மந்திரியின் பாதுகாவலர்கள் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஊழியர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.



    இந்நிலையில், பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஊழியர் ஒருவர் பலியானது தொடர்பாக பெட்ரோலிய துறை முன்னாள் மந்திரி அர்ஜூனா ரணதுங்கவை போலீசார் இன்று கைது செய்தனர்.

    இலங்கையில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில், முன்னாள் மந்திரி அர்ஜூனா ரணதுங்க கைது செய்யப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #SrilankaShooting #ArjunaRanatunga
    ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசிய இலங்கை வீரர் சங்ககராவின் சாதனையை இந்திய கேப்டன் விராட் கோலி முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. #ViratKohli #Sangakkara
    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    இந்திய கேப்டன் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் முறையே 140, 157 ரன்கள் வீதம் குவித்தார். நேற்றைய 3-வது ஆட்டத்திலும் சதம் (107 ரன்) விளாசினார். இதன் மூலம் 47 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 3 ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த (ஹாட்ரிக்) முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.



    இதற்கிடையே, இலங்கை அணியின் விக்கெட் கீப்பரான சங்ககரா தொடர்ந்து 4 சதங்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். இவர் 2015ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் வங்காள தேசத்துக்கு எதிராக 105 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக117 ரன்களும்,ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 104 ரன்களும், ஸ்காட்லாந்துக்கு எதிராக 124 ரன்களும் அடித்துள்ளார். இதன்மூலம் சங்ககரா ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    இந்நிலையில், இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டி நாளை மும்பையில் நடைபெறவுள்ளது.

    இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தால், தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சதமடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவாரா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். #ViratKohli #Sangakkara
    நாட்டின் அரசியல், பொருளாதாரச் சூழலை கருதியும், என்னை கொல்ல நடந்த சதியை நினைத்தும், ராஜபக்சேவை பிரதமராக நியமிப்பதை தவிர வேறு மாற்றுவழி எனக்கு தோன்றவில்லை என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். #Srilanka #MaithripalaSirisena #RanilWickremesinghe
    கொழும்பு:

    இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது. நாட்டின் பிரதமராக நான் தொடர்ந்து நீடிக்கிறேன் என  விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து, நவம்பர் 16-ம் தேதிவரை பாராளுமன்றத்தை முடக்கம் செய்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நேற்று பிற்பகல் உத்தரவு பிறப்பித்தார். 

    இதற்கிடையே, சபாநாயகர் கரு ஜெயசூரியா இன்று மைத்ரிபால சிறிசேனாவுக்கு அனுப்பிய கடிதத்தில், நாட்டில் ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் பாதுகாக்க ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும். பாராளுமன்றத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கேவின் சிறப்பு உரிமைகள் தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கேவை நீக்கியது ஏன் என்பது குறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

    விக்கிரமசிங்கேவை பதவி நீக்கம் செய்த பின்னர் நாட்டு மக்களிடையே முதல்முறையாக உரையாற்றிய அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, ‘சாமான்ய மக்களின் எண்ணங்களை பற்றி கவலைப்படாமல் தனக்கு வேண்டியவர்கள், தன்னை சுற்றி இருப்பவர்கள் மட்டும் லாபம் அடையும் வகையில் ரணில் விக்ரமசிங்கே செயல்பட்டு வந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

    நல்லாட்சி என்னும் தத்துவத்தையே முழுமையாக அழித்துவிட்ட விக்ரமசிங்கேவின் ஆட்சியில் ஊழலும், வீண் செலவுகளும் பெருகி விட்டது. கூட்டு பொறுப்பு என்னும் அரசின் செயல்பாட்டை கேலிக்கூத்து ஆக்கும் வகையில் அனைத்து முடிவுகளையும் அவர் தன்னிச்சையாக எடுக்க தொடங்கி விட்டார்.

    அவருக்கும் எனக்குமான கொள்கை முரண்பாடுகள் நாளுக்குநாள் மிகப்பெரியதாக விரிவடைந்து கொண்டே போனது. இந்த கொள்கை முரண்பாடுகளும், எங்கள் இருவருக்கரும் இடையிலான கலாச்சார முரண்பாடுகளும் நமது நாட்டின் இன்றைய அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு காரணமாக அமைந்து விட்டது.

    மேலும், என்னையும் முன்னாள் மந்திரி கோத்தபய ராஜபக்சேவையும் கொல்ல நடந்த சதித்திட்டம் தொடர்பான தகவலின்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் விக்கிரமசிங்கே தவறி விட்டார் என்றும் மைத்ரிபாலா சிறிசேனா குறிப்பிட்டுள்ளார்.

    இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டும், நாட்டின் அரசியல், பொருளாதாரச் சூழலை கருதியும், என்னை கொல்ல நடந்த சதியை நினைத்தும், ராஜபக்சேவை பிரதமராக நியமிப்பதை தவிர வேறு மாற்றுவழி எனக்கு தோன்றவில்லை என இலங்கை மக்களுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். #Srilanka #MaithripalaSirisena #RanilWickremesinghe
    இலங்கையில் பெட்ரோலிய துறை அமைச்சக பணியாளர்கள் மீது அமைச்சரின் பாதுகாவலர்கள் இன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். #SrilankaShooting
    கொழும்பு:

    இலங்கையில் அதிரடியாக பிரதமரை மாற்றிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா ராஜபக்சேவை பிரதமராக நியமித்துள்ளார். இதையடுத்து ரணில் விக்கிரமசிங்கேவின் அமைச்சரவை நீக்கம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கேவின் ஆதரவாளரான இலங்கையின் பெட்ரோலிய வனத்துறை முன்னாள் அமைச்சரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான அர்ஜூனா ரணதுங்க இன்று தனது அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அர்ஜூன ரணதுங்கவை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.



    இதனால் ஆவேசம் அடைந்த அமைச்சரின் பாதுகாவலர்கள் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 ஊழியர்கள் காயமடைந்தனர்.

    அதில் ஒருவர்மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் இரு ஊழியர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இலங்கை அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வரும் நிலையில், பெட்ரோலிய அமைச்சரின் பாதுகாவலர்கள் துப்பாக்கி  சூடு நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. #SrilankaShooting
    இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழல் குறித்து பேசியுள்ள அமெரிக்கா, இலங்கையின் அனைத்து கட்சிகளும், அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. #ranilwickremesinghe #rajapaksa #Rajapaksa #SriLanka #US
    வாஷிங்டன்:

    இலங்கையின் அதிபரான சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அதேவேளை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அரசின் அரசியல் அமைப்பு சட்டத்தில் அதிபர் பிரதமரை பதவிநீக்கம் செய்வதற்கு அதிகாரம் இல்லை என்றும், ராஜபக்சேவை பிரதமராக நியமித்தது சட்டவிரோதமானது எனவும் தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அமெரிக்கா, இலங்கையின் அனைத்து கட்சிகளும், அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு நடக்குமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும், இலங்கை அரசு மனித உரிமைகள், நாட்டின் சீர்திருத்தம், நீதி, சமரசம் ஆகியவற்றை நிலைநாட்ட வேண்டும் என எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. #ranilwickremesinghe #rajapaksa #Rajapaksa #SriLanka #US
    இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 219 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. #SriLanka #England #SLvsENG
    கொழும்பு:

    இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இங்கிலாந்து அணியில் கேப்டன் மோர்கனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் அணியை வழிநடத்தினார். அந்த அணியில் சகோதரர்கள் சாம் குர்ரன், டாம் குர்ரன் இடம் பிடித்தனர். சர்வதேச போட்டி ஒன்றில் இங்கிலாந்து சகோதரர்கள் இணைந்து ஆடுவது 1999-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும்.



    இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்து பிரமாதப்படுத்திய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 366 ரன்கள் குவித்தது. இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முதல் 4 வீரர்களான டிக்வெல்லா (95 ரன்), சமரவிக்ரமா (54 ரன்), கேப்டன் சன்டிமால் (80 ரன்), குசல் மென்டிஸ் (56 ரன், 33 பந்து, ஒரு பவுண்டரி, 6 சிக்சர்) அரைசதம் விளாசினர். இலங்கை அணியில் டாப்-4 பேட்ஸ்மேன்கள் ஒரே இன்னிங்சில் அரைசதம் காண்பது கடந்த 20 ஆண்டுகளில் இதுவே முதல் நிகழ்வாகும்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் 10 பந்துகளில் ஜாசன் ராய் (4 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (0), கேப்டன் பட்லர் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை தாரைவார்த்தது. இந்த வீழ்ச்சியில் இருந்து இங்கிலாந்து அணியால் நிமிரவே முடியவில்லை. பென் ஸ்டோக்ஸ் (67 ரன்), மொயீன் அலி (37 ரன்) தவிர வேறு யாரும் சோபிக்கவில்லை. அந்த அணி 26.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்தது. இதையடுத்து ‘டக்வொர்த்-லீவிஸ்’ விதிமுறைப்படி இலங்கை அணி 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    ஒரு நாள் போட்டி வரலாற்றில் இங்கிலாந்து அணியின் மிக மோசமான தோல்வி இதுவாகும். இதற்கு முன்பு 1994-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 165 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே மோசமானதாக இருந்தது. இலங்கை தரப்பில் அகிலா தனஞ்ஜெயா 4 விக்கெட்டுகளும், துஷ்மந்தா சமவீரா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

    இது இலங்கைக்கு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஏனெனில் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. ஒரு ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு 20 ஓவர் போட்டி வருகிற 27-ந்தேதி கொழும்பில் நடக்கிறது. 
    இலங்கை கிரிக்கெட்டில் நிலவி வரும் சூதாட்ட விவகாரம், ஊழல்களை ஒழிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம் என்று அர்ஜூனா ரணதுங்கா கூறியுள்ளார். #Ranatunga

    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இலங்கையின் பெட்ரோலியத்துறை மந்திரியுமான அர்ஜூனா ரணதுங்கா கூறியதாவது:-

    இலங்கை கிரிக்கெட்டில் நிலவி வரும் சூதாட்ட விவகாரம், முறைகேடு, ஊழல்களை ஒழிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம். சி.பி.ஐ அமைப்பு எங்களுக்கு எல்லா வகையிலும் உதவி அளிக்க இருக்கிறது.

     


    சூதாட்டத்தை ஒழிக்க வேண்டிய விதி முறைகளும் ஏற்படுத்தப்படும். இது தொடர்பான சட்ட வரையறையை உருவாக்கி தர இந்தியா முன் வந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Ranatunga

    இலங்கை - இங்கிலாந்து இடையிலான 4-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 3-0 என தொடரையும் கைப்பற்றியது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவிற்கு வந்தது. 2-வது, 3வது  போட்டியில் மழை பாதித்தாலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையே பல்லேகலே மைதானத்தில் நான்காவது போட்டி நேற்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி சார்பில் நிரோஷன் டிக்வெலாவும், சதிரா சமரவிக்ரமா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    நிரோஷன் டிக்வெலா பொறுப்பாக ஆடி 51 ரன்கள் எடுத்து அவுட்டானார். டாசன் ஷனாகா 66 ரன்களுடனும், திசரா பெராரா 44 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

    இறுதியில், தனஞ்செயா 33 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதனால் இலங்கை அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது.



    இங்கிலாந்து சார்பில் மொயின் அலி 2 விக்கெட்டும், டாம் கர்ரன், வோக்ஸ், அடில் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் பொறுப்புடன் ஆடி 45 ரன்கள் எடுத்து அவுட்டானார்.  அலெக்ஸ் ஹேல்ஸ் 12 ரன்களில் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ஜோ ரூட் மற்றும் கேப்டன் இயன் மார்கன் ஆகியோர் சிறப்பாக ஆடி 56 ரன்கள் ஜோடி சேர்த்தனர். இங்கிலாந்து அணி 27 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது.

    இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    அத்துடன், தொடரில் 3-0 என முன்னிலை பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது இயன் மார்கனுக்கு வழங்கப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 5-வது ஆட்டம் 23-ம் தேதி கொழும்புவில் நடக்கிறது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து இடையிலான 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. #SLvENG
    இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. தம்புல்லாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவிற்கு வந்தது. 2-வது போட்டியில் மழை பாதித்தாலும் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையே பல்லேகலே மைதானத்தில் மூன்றாவது போட்டி நேற்று பகல் - இரவு ஆட்டமாக நடைபெற்றது. மழையால் ஆட்டம் 21 ஓவராக குறைக்கப்பட்டது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி சார்பில் நிரோஷன் டிக்வெலாவும், சதிரா சமரவிக்ரமா தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில் டிக்வெலா 36 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து, சதிராவும் 35 ரன்னில் வெளியேறினார்.  

    அடுத்து இறங்கிய பேட்ஸ்மேன்கள் நீடித்து நிலைக்கவில்லை. இதனால் இலங்கை அணி நிர்ணயம் செய்யப்பட்ட 21 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.



    இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித் 4 விக்கெட்டும், டாம் கர்ரன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அதிரடி காட்டி 26 பந்தில் 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

    கேப்டன் இயன் மார்கன் சிறப்பாக ஆடி அரை சதமடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு பென் ஸ்டோக்ஸ் ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 18. 3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன், தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது அடில் ரஷித்துக்கு வழங்கப்பட்டது.

    இரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஆட்டம் 20-ம் தேதி பல்லேகலே மைதானத்தில் நடக்கிறது. #SLvENG
    ×