search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99994"

    வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறினார். #AsiaCup2018 #TamimIqbal
    துபாய் :

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் தொடங்கியது.
      
    துபாயில் தொடங்கிய முதல் போட்டியில் இலங்கை, வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இலங்கை அணியின் சுரங்கா லக்மல் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்தை தமிம் இக்பால் எதிர்கொண்டார். அந்த பந்து அவரது இடது கையை பதம் பார்த்தது. வலியில் துடித்த அவர் (2 ரன்) ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.

    கடைசி விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்ந்த தமிம் இக்பால் 32 ரன்கள் சேர்க்க காரணமானார். ஒரு கையால் மட்டும் பேட் பிடித்து ஆடியது குறிப்பிடத்தக்கது.   

    ஆட்டம் முடிந்ததும் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குறைந்தது 6 வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து, ஆசிய கோப்பை தொடரில் இருந்து தமிம் இக்பால் வெளியேறினார்.

    முன்னணி வீரரான தமிம் இக்பால் ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது வங்காளதேசம் அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. #AsiaCup2018 #TamimIqbal
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது வங்காளதேசம். #AsiaCup2018 #BANvSL
    துபாய் :

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நேற்று தொடங்கியது.
      
    துபாயில் தொடங்கிய முதல் போட்டியில் இலங்கை, வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், லிடன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர்.  

    முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர்களை வெளியேற்றி வங்காளதேசத்தினருக்கு அதிர்ச்சி அளித்தார் மலிங்கா. முதல் ஓவரின் 5-ம் பந்தில் லிடன் தாஸ், கடைசி பந்தில் சகிப் அல் அசன் ஆகியோரை அவுட்டாக்கினார்.

    லக்மல் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி பந்து தமிம் இக்பாலின் இடது கையை பதம் பார்த்ததால், வலியில் துடித்த அவர் (2 ரன்) ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.

    இதையடுத்து ஜோடி சேர்ந்த முஷ்பிகுர் ரஹிம், மொகமது மிதுன் ஆகியோர் 133 ரன்கள் சேர்த்தனர். மிதுன் (63), மகமதுல்லா (1), உசைன் (1), மிராஜ் (15), மோர்தாசா (11), ருபேல் (2), ரஹ்மான் (10) ரன்களில் ஆட்டமிழந்தனர். ரஹீம் 4 சிக்சர்கள், 11 பவுண்டரிகள் அடித்து 144 ரன்களை குவித்து இறுதியில் ஆட்டமிழந்தார்.

    தமிம் இக்பால் (2) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் வங்காளதேச அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்தது.

    இலங்கை அணி சார்பில் மலிங்கா 4 விக்கெட்டும், தனஞ்செயா டி சில்வா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இதைத்தொடர்ந்து, 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக உபுல் தரங்காவும், குசால் மெண்டிசும் இறங்கினர்.

    வங்காளதேச அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணி வீரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பி வைத்தனர்.

    உபுல் தரங்கா 27 ரன்னிலும், குசால் பெராரா 11 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 16 ரன்னிலும் அவுட்டாகினர். மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகினர். 19வது ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்து இலங்கை அணி தத்தளித்தது.

    இறுதியில், கடைநிலை வீரர்கள் ஓரளவு போராடினர். தில்ருவான் பெராரா 29 ரன்னிலும், சுரங்கா லக்மல் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், இலங்கை அணி 35.2 ஓவரில் 124 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதனால் வங்காளதேசம் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் அணி சார்பில் மோர்டசா, முஸ்டாபிஜுர் ரஹ்மான், மெஹிதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். #AsiaCup2018 #BANvsSL
    இலங்கை ராணுவத்தினர் மீதான போர்க் குற்றச்சாட்டுகளை நீக்க ஐ.நா. சபையில் வற்புறுத்துவேன் என்று அதிபர் சிறிசேனா கூறியுள்ளார். #UN #MaithripalaSirisena
    கொழும்பு :

    இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டு போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், சுமார் 20 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போனதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

    பெரும்பாலானோர் காணாமல் போனதற்கு இலங்கை ராணுவம், கடற்படை, போலீஸ் ஆகியவையே காரணம் என்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக கண்டனங்கள் எழுந்ததால், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக வெவ்வேறு காலகட்டங்களில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கை ராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கவும், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் இலங்கை அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக, இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, அங்கு செல்கிறது.



    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், சிறிசேனா 25-ந் தேதி பேசுகிறார்.

    இதுகுறித்து சிறிசேனா நேற்று கொழும்பு நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களும், சில அரசு சார்பற்ற அமைப்புகளும் மனித உரிமை மீறல் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை தனிமைப்படுத்தப்படுவதை நாங்கள் தடுத்ததுடன், நல்ல நட்புறவையும் உருவாக்கி உள்ளோம்.

    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசும்போது, இலங்கை ராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகளை நீக்குமாறு வற்புறுத்துவேன். இப்பிரச்சினைக்கு தீர்வுகாண எங்களுக்கு சில சலுகைகள் அளிக்குமாறு கேட்டுக்கொள்வேன்.

    இதுதொடர்பாக விசே‌ஷ வேண்டுகோள் விடுப்பேன். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் எழுத்துமூலமாகவும் கோரிக்கை விடுப்பேன்.

    இவ்வாறு சிறிசேனா கூறினார். #UN #MaithripalaSirisena
    இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #Indian #SriLanka #Cricket #INDvsSL
    காலே:

    மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் போட்டியின் முடிவுகள் பெண்கள் சாம்பியன்ஷிப்புக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படும். காலேவில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை பெண்கள் அணியை 98 ரன்னில் சுருட்டிய இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    இந்த நிலையில் இந்தியா- இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி காலேவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 219 ரன்களில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் தானியா பாத்யா 68 ரன்னும், கேப்டன் மிதாலி ராஜ் 52 ரன்னும், ஹேமலதா 35 ரன்னும் எடுத்தனர். முதல் ஆட்டத்தில் அரை சதம் அடித்த ஸ்மிர்தி மந்தனா 14 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். இலங்கை அணி தரப்பில் ஜெயன்கானி 3 விக்கெட்டும், பிரபோத்ஹானி, வீரக்கொடி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 48.1 ஓவர்களில் 212 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜெயன்கானி 57 ரன்னும், ஸ்ரீவர்தனே 49 ரன்னும், நிலாக்‌ஷி டி சில்வா 31 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்திய அணி தரப்பில் மான்சி ஜோஷி, ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா 2 விக்கெட்டும், பூனம் யாதவ், ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 16-ந் தேதி நடக்கிறது.  #Indian #SriLanka #Cricket #INDvsSL
    6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வீரர் சண்டிமால் காயம் காரணமாக விலகி உள்ளார். #AsiaCup2018 #Chandimal
    6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந்தேதி துபாய் மற்றும் அபுதாபியில் தொடங்குகிறது. இதற்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியில் சண்டிமால் இடம் பெற்று இருந்தார்.

    இந்த நிலையில் காயம் காரணமாக சண்டிமால் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து விலகி உள்ளார். உள்ளூரில் நடந்த 20 ஓவர் போட்டியில் சண்டிமால் கைவிரலில் காயம் அடைந்தார். அவர் குணமடையாததால் ஆசிய கோப்பையில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

    அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் டிக்வெலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #AsiaCup2018 #Chandimal
    இந்தியா வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆனந்த் சர்மா ஆகியோரை நேரில் சந்தித்தார். #Rajapaksa #RajapaksainDelhi #ManmohanSingh #RahulGandhi
    புதுடெல்லி:

    பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புரமணிய சுவாமி ஆரம்பித்த விராத் ஹிந்துஸ்தான் சங்கத்தின் சார்பாக நேற்று பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு சுப்புரமணிய சாமி அழைப்பு விடுத்து இருந்தார்.

    அவரது அழைப்பை ஏற்ற ராஜபக்சே டெல்லி வந்தடைந்தார். அதையடுத்து நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ராஜபக்சே, பல்வேறு தலைவர்களை சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். #Rajapaksa #RajapaksainDelhi #ManmohanSingh #RahulGandhi
    இந்தியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. #IndiavsSriLanka
    காலே:

    இலங்கைக்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் போட்டியின் முடிவுகள் பெண்கள் சாம்பியன்ஷிப்புக்கு கணக்கில் கொள்ளப்படும்.

    இந்தியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி காலேவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணி 35.1 ஓவர்களில் 98 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் சமாரி அட்டப்பட்டு 33 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் மன்சி ஜோஷி 3 விக்கெட்டுகளும், கோஸ்வாமி, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இந்தியா 19.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்மிர்தி மந்தனா 73 ரன்கள் (76 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் நாளை நடக்கிறது. #IndiavsSriLanka 
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மீண்டும் இடம் பிடித்துள்ளார். #AsianCup2018 #LasithMalinga
    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 15-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்பட 6 அணிகள் கலந்து கொள்கின்றன. 

    இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான 16 பேர் கொண்ட அணியில் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

    ஆசிய கோப்பைக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களின் விவரம்:

    ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), குசால் பெராரா, குசால் மெண்டிஸ், உபுல் தரங்கா, தினேஷ் சண்டிமால், தனுஷ்கா குணதிலகா, திசாரா பெராரா, டாசன் ஷனகா, தனஞ்ஜயா டி சில்வா, அகிலா தனஞ்ஜயா, தில்ருவான் பெராரா, அமிலா அபோன்சோ, காசன் ரஜிதா, சுரங்கா லக்மல், துஷ்மந்த சமீரா, லசித் மலிங்கா #AsianCup2018 #LasithMalinga
    ஹன்பன்தொட்டா துறைமுகத்தை சீனா தனது ராணுவ பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என இலங்கை ராணுவ மந்திரி ருவன் கூறியுள்ளார். #China #Hambantota #SriLanka
    கொழும்பு:

    இலங்கையின் தென்பகுதியில் ஹம்பன்தொட்டா துறைமுகம் உள்ளது. அதை 99 ஆண்டுகள் குத்தகைக்கு இயக்க ஒரு சீன நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு இலங்கை அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, அந்த துறைமுகத்தை சீனா தனது ராணுவ பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    இந்நிலையில், இலங்கைக்கு வந்த ஜப்பான் ராணுவ மந்திரி இட்சுனோரி ஒனோடரா, இலங்கை ராணுவ மந்திரி ருவன் விஜேவர்தனேவை சந்தித்து, இதுபற்றிய தனது கவலையை தெரிவித்தார்.

    அப்போது, ஹன்பன்தொட்டா துறைமுகத்தை சீனா தனது ராணுவ பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று ருவன் விஜேவர்தனே தெரிவித்தார்.  #China #Hambantota #SriLanka
    இலங்கை அதிபராக இரண்டு முறை பதவி பகித்த ராஜபக்சே, மூன்றாவது முறையாக அதிபராக முடியும் என தான் நம்புவதாக கூறியுள்ளார். #MahindaRajapaksa
    கொழும்பு:

    இலங்கையில் தொடர்ந்து இரண்டு முறை அதிபராக இருந்தவர் மகிந்த ராஜபக்சே. இவர் தன்னுடைய ஆட்சி காலத்தில் 2010-ஆம் ஆண்டு, இரண்டு முறை அதிபர் பதவி வகித்தவர், மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது என்கிற சட்டத்தை மாற்றியமைத்தார். அதன்படி 2015-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை தழுவினார். இலங்கை அதிபராக மைத்ரிபால சிறிசேனா அதிபர் ஆனார்.

    அதன் பின்னர் 2010-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தை மாற்றி இரண்டு முறை அதிபர் பதவி வகித்தவர் மூன்றாவது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது என்கிறபடி மீண்டும் சட்டம் திருத்தப்பட்டது. இந்த நிலையில் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டு மூன்றாவது முறையாக அதிபராக முடியும் என தான் நம்புவதாக முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.



    பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது இதுபற்றி பேசிய அவர், 

    ‘‘அதிபர் தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட முடியும் என்கிற கருத்து இருக்கிறது. 3-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இதில் எங்களுக்கு வெற்றி கிட்டும் என்கிற நம்பிக்கை உள்ளது’’ என கூறினார். #MahindaRajapaksa

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இலங்கையின் நிரந்தரத்தன்மைக்கு பெருந்துணையாக இருந்தவர் என அந்நாட்டின் ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். #AtalBihariVajpayee #RIPVajpayee #SriLanka #MaithripalaSirisena #Wickremesinghe
    கொலும்பு:

    இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மிக மூத்த அரசியல் தலைவருமான வாஜ்பாய் தனது 93-வது வயதில் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளின் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், வாஜ்பாயின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த இலங்கை அரசின் சார்பில் அந்நாட்டின் நெடுஞ்சாலை மற்றும் உயர்க்கல்வித்துறை மந்திரி லக்‌ஷ்மன் கிரியெல்லா டெல்லி வந்துள்ளார்.

    வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு அவர் பெருந்துணையாக இருந்ததாக அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

    வாஜ்பாயின் மறைவுக்கு விக்கிரமசிங்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘இலங்கையின் உண்மையான நண்பராக விளங்கிய திரு.வாஜ்பாயின் மரண செய்தி அறிந்து நான் மிகுந்த கவலை கொண்டுள்ளேன்.

    2002-2004 ஆண்டுகளில் நான் பிரதமராக இருந்தபோது,  இலங்கையின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.  அந்த உயர்ந்த மனிதருடன் நான் கொண்டிருந்த நட்பை எனது நினைவு கருவூலத்தில் என்றென்றும் பாதுகாத்திருப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

    ‘மிக உயர்ந்த மனித நேயரும், இலங்கையின் உண்மையான நண்பருமான வாஜ்பாயை நாம் இன்று இழந்துள்ளோம். ஜனநாயகத்தின் பாதுகாவலராக விளங்கிய முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் தொலைநோக்கு சிந்தனை கொண்ட பெரும் தலைவராக திகழ்ந்தவர்.

    அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார், மற்றும் உலகம் முழுவதும் உள்ள வாஜ்பாயின் அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee  #RIPVajpayee #SriLanka #MaithripalaSirisena #Wickremesinghe
    சுற்றுலா வந்த இடத்தில் மாயமான தனது மகனை கண்டுபிடித்து மீட்ட தந்தை, 9 ஆண்டுகளுக்கு பிறகு அவரை இலங்கைக்கு அழைத்து சென்றார்.
    கூடலூர்:

    இலங்கையை சேர்ந்தவர் சத்தியவான்(வயது 74). இவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்கள். அதில் 2-வது மகன் சுதர்சன் (வயது 31). இவர் கடந்த 30-9-2009-ம் அன்று இலங்கையில் இருந்து பெங்களூருக்கு சுற்றுலா வந்தார். அதன்பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பவில்லை.

    இதையடுத்து இந்தியாவிற்கு சென்ற தனது மகன் காணாமல் போய்விட்டதாக சத்தியவான் தூதரகத்தில் புகார் செய்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் சத்தியவான் இந்தியாவுக்கு அடிக்கடி வந்து தனது மகனை தேடும் பணியில் ஈடுபட்டார். ஆனால் மகனை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றத்துடன் மீண்டும் இலங்கைக்கு சென்றார்.

    இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு சத்தியவான் வந்தார். இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்கள் அதிகளவு வசிப்பதால், இங்கு தனது மகன் இருக்கலாம் என தேடும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது பந்தலூர் பஸ் நிலையத்தில் மனநலம் பாதித்த நிலையில் தனது மகன் சுதர்சன் இருப்பதை கண்டு சத்தியவான் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் மகனை மீட்டு அவருக்கு புதிய ஆடைகள் வாங்கி கொடுத்த சத்தியவான், மனநலம் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க கேரளாவுக்கு அழைத்து சென்றார். அங்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக் கப்பட்டது. பின்னர் இலங்கைக்கு மகனை அழைத்து செல்ல சத்தியவான் முயன்றார். இதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டார். ஆனால் பாஸ்போர்ட் இல்லாததால் சுதர்சனை இலங்கைக்கு அழைத்து செல்ல அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தேவாலாவில் உள்ள உறவினர் வீட்டில் மகன் சுதர்சனை ஒப்படைத்து விட்டு சத்தியவான் மீண்டும் இலங்கைக்கு சென்றார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் இலங்கையில் இருந்து சத்தியவான் மீண்டும் தேவாலா வந்தார். பின்னர் ஏ.ஐ.டி.யூ.சி. கட்சி மாவட்ட தலைவர் டி.பாலகிருஷ்ணனை சந்தித்து முறையிட்டார். இதுகுறித்து மறுவாழ்வுத்துறை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஒலிவர் ஐருளு கவனத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் கொண்டு சென்றது.

    மேலும் மறுவாழ்வுத்துறை இயக்குனரிடம் தனது மகனை இலங்கைக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கும்படி சத்தியவான் கோரிக்கை மனு அளித்தார். இதைத்தொடர்ந்து சுதர்சன் இலங்கை செல்வதற்கான நடவடிக்கையை எடுக்கும்படி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அனுமதி இன்றி இந்தியாவில் இவ்வளவு நாட்கள் இருந்ததற்காக சுதர்சனுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தொகையை அவரது தந்தை சத்தியவான் உடனடியாக செலுத்தினார். பின்னர் தூதரகம் மூலம் சுதர்சனுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த சத்தியவான் 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகன் சுதர்சனை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நேற்று முன்தினம் மாலை அழைத்து சென்றார். சட்ட ரீதியாக பல்வேறு தடைகள் இருந்த நிலையில், பல கட்டங்களாக போராடி தனது மகனை இலங்கைக்கு மீண்டும் தந்தை அழைத்து சென்ற பாச போராட்ட சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
    ×