search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99996"

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட போலீஸ் டிஐஜியை ராஜ்நாத் சிங் சந்தித்து நலம் விசாரித்தார். #RajnathSingh #Pulwama #AmitKumar #AIIMS
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    இதற்கிடையே, கடந்த 18ம் தேதி புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில் மாநில போலீசார் ஈடுபட்டனர்.

    அப்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் போலீஸ் டி.ஐ.ஜி. அமித் குமார் வயிற்றில் குண்டு பாய்ந்தது.
    இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட போலீஸ் டிஐஜியை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று சந்தித்து நலம் விசாரித்தார். #RajnathSingh #Pulwama #AmitKumar #AIIMS
    தேமுதிக தலைவர் விஜயகாந்தை ரஜினிகாந்த், ஸ்டாலின் ஆகியோர் சந்தித்தபோது அனைத்தும் பேசப்பட்டது என பிரேமலதா தெரிவித்துள்ளார். #DMDK $Premalatha
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தயாராகி வருகின்றன. இரு கட்சிகளுமே கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

    அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர். காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    இதேபோல், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணிகள் ஓரளவு உறுதியான போதிலும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.

    இந்நிலையில், சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்கு பின் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:



    தே.மு.தி.க.வுக்கு உரிய இடங்களை வழங்கும் கட்சியுடன் கூட்டணி. தே.மு.தி.க.வின் ஒட்டுமொத்த பலம் அரசியல் கட்சிகளுக்கும், பொதுமக்களுக்கும் தெரியும். 

    மக்களவை தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 300க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெற்றுள்ளனர். தே.மு.தி.க.வின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.

    தே.மு.தி.க.வின் பலத்துக்கேற்ற கட்சியுடன் கூட்டணி அமைக்கும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்ததற்கு தே.மு.தி.க. சார்பில் நன்றி. விஜயகாந்த் உடனான ஸ்டாலின் சந்திப்பில் அரசியலும் உள்ளது. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், தி.மு.க.வுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

    தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க தமிழகத்திலுள்ள பெரிய கட்சிகள் முயற்சித்து வருகின்றன. 3-வது அணி உருவாக வாய்ப்பில்லை.

    விஜயகாந்தை ரஜினிகாந்த், ஸ்டாலின் சந்தித்ததில் நலம் விசாரிப்பு மட்டுமல்ல, அனைத்தும் பேசப்பட்டுள்ளது. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. விஜயகாந்த் உரிய முடிவை அறிவிப்பார். தே.மு.தி.க.விற்கு கிடைக்கும் இடங்களை பொருத்து கூட்டணி முடிவு இருக்கும். 

    ஒரு கட்சியை விமர்சித்ததால், அந்தக் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்பது இல்லை. அரசியலுக்கு என்று ஒரு வியூகம் உள்ளது. கடந்த ஒரு தேர்தலை மட்டும் வைத்து தே.மு.தி.க.வின் பலத்தை கணித்து விடக்கூடாது, மக்களவை தேர்தலில் தே.மு.தி.க. பலத்தை நிரூபிக்கும் என தெரிவித்துள்ளார். #DMDK $Premalatha
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு, கனிமொழி நேரில் சென்று ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Kanimozhi #DMK #Subramanian #CRPF
    தூத்துக்குடி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
     
    இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.



    புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களில் தூத்துக்குடி சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியனும் ஒருவர்.

    இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்றார். அங்குள்ள சவலாப்பேரி கிராமத்துக்கு சென்ற கனிமொழி, சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Kanimozhi #DMK #Subramanian #CRPF
    மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று சந்தித்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். #LSpoll #PiyushGoyal #DMDK
    சென்னை:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக மற்றும் பா.ஜ.க ஆகியவை இடம் பெற்றுள்ளது. கூட்டணி தொகுதி பற்றி பேச மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன். .ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கிடையே, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அதிமுக தரப்பில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார். பிற்பகல் 2.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.



    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த, பாஜகவை சேர்ந்த ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று நேரில் சந்தித்தார். அப்போது, அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்பின்போது, பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன், தேமுதிக சார்பில் பிரேமலதா, சுதீஷ் உள்பட பலர் உடனிருந்தனர். 

    சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், விஜயகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். இந்த சந்திப்பு விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க மட்டுமே நடைபெற்றது; கூட்டணி குறித்து பேசவில்லை என தெரிவித்துள்ளார். #LSpoll #PiyushGoyal #DMDK
    தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் வீட்டில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்பட முக்கிய தலைவர்கள் தி.மு.க. கூட்டணி தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினர். #DMKCongressAlliance #Congress #RahulGandhi #DMK
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது.

    இதற்கிடையே, கூட்டணி தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். ராகுல்காந்தி வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஆலோசனையின் நிறைவில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், தமிழகத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல். அவர்களுடன் யார் சேர்ந்தாலும் அவர்களும் மூழ்குவார்கள் என தெரிவித்தார்.



    இதுதொடர்பாக, திருநாவுக்கரசர் கூறுகையில், அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல், அவர்களுடன் யார் சேர்ந்தாலும் அவர்களும் மூழ்குவார்கள். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை.

    பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் எந்த நலன் கருதி சேர்ந்தாலும் அவர்கள் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. அ.தி.மு.க. - பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணி என்பது கட்டாய கல்யாணம்.

    தி.மு.க. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு முடியும் நிலையில் வந்துவிட்டது; காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்குவது பற்றி இன்றோ அல்லது நாளையோ அறிவிப்பு வெளியிடப்படும்.

    தேர்தல் பரப்புரைக்கு பிரியங்கா காந்தி தமிழகத்துக்கு வருவார். தமிழக காங்கிரசார் ஒற்றுமையுடன் செயல்பட்டு தேர்தல் பணியாற்ற ராகுல்காந்தி அறிவுறுத்தினார் என தெரிவித்துள்ளார். #DMKCongressAlliance #Congress #RahulGandhi #DMK
    பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கூட்டணியில் நவநிர்மாண் சேனா சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அக்கட்சி தலைவர் ராஜ்தாக்கரேயை அஜித்பவார் நேற்று சந்தித்து பேசினார். #AjitPawar #RajThackeray
    மும்பை:

    மராட்டியத்தில் காங்கிரஸ் மற்றும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடந்த தடவை நடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கூட்டணி அமைத்து சந்தித்தன.

    அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில் தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி கண்டன.

    பின்னர் நடந்த கருத்து வேறுபாடு காரணமாக அதே ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை இருக்கட்சிகளும் தனித்து களம் கண்டன. இதன் காரணமாக அக்கட்சிகள் 15 ஆண்டு கால கூட்டணி ஆட்சியை பா.ஜனதாவிடம் பறிகொடுத்தது.

    இந்த நிலையில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் மூலம் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி சேர்ந்து உள்ளன. ஓட்டுகள் சிதறுவதை தடுக்க சிறிய கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இருப்பினும் இதற்கு பெரிய அளவில் பலன் கிட்டவில்லை.

    இதுஒருபுறம் இருக்க காங்கிரசுடன் கொள்கை அடிப்படையில் வேறுபட்ட ராஜ்தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனா கட்சியை கூட்டணியில் சேர்க்க தேசியவாத காங்கிரஸ் காய் நகர்த்தி வருகிறது.

    நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மத்திய, மாநில பா.ஜனதா அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துகளை கூறி வருகிறார். மேலும் அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

    காங்கிரஸ் தலைமையிலான அணியில் ராஜ் தாக்கரே இணைந்தால் கூட்டணிக்கு அது பலமாக இருக்கும் என தேசியவாத காங்கிரஸ் கருதுகிறது.

    ஆனால் காங்கிரஸ் இதற்கு தயக்கம் காட்டி வருகிறது.

    இந்த நிலையில், கொள்கை ரீதியாக ஒத்துப்போகாதவர்களுடன் கூட கடந்த காலத்தில் கூட்டணி வைக்கப்பட்டு உள்ளது. பா.ஜனதா, சிவசேனா கூட்டணியை தோற்கடிக்க நவநிர்மாண் சேனா நம்முடன் இணைய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இவ்வாறு கருத்து தெரிவித்த சூட்டோடு, அவர் நேற்று தாதரில் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 1½ மணி நேரம் நடந்தது.

    பின்னர் வெளியே வந்த அஜித்பவார், நவநிர்மாண் சேனாவை கூட்டணியில் சேர்ப்பது பற்றி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முடிவு எடுப்பார்கள் என்றார்.

    இந்த கூட்டணி அமையும் பட்சத்தில் தனது கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் கல்யாண் தொகுதியை நிவநிர்மாண் சேனாவுக்கு விட்டு கொடுக்க தேசியவாத காங்கிரஸ் முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது..

    இதன் மூலம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் நவநிர்மாண் சேனா இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    காங்கிரசுக்கும், நவநிர்மாண் சேனாவுக்கும் கொள்கை ஒத்துப்போகாத நிலையில், அக்கட்சிகள் கூட்டணி வைக்கப்போவதாக கூறப்படுவது மராட்டிய அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திமுக தலைவர் முக ஸ்டாலினை தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் நேரில் சந்தித்து தங்கள் மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினர். #AmbaniMeetsMKStalin
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் வைர வியாபாரியான ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஷ்லோகா மேத்தா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்தனர்.

    பின்னர் இந்த நட்பு காதலாக மாறி, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்றது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

    மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் முதல் திருமண அழைப்பிதழை வைத்த பின்னர், தற்போது முக்கிய தலைவர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவருக்கும் முகேஷ் அம்பானி-நீதா அம்பானி தம்பதி நேரில் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர்.



    இந்நிலையில் முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதி, நேற்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து, பூங்கொத்து மற்றும் அழைப்பிதழ் கொடுத்து மகனின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர். #AmbaniMeetsMKStalin  
    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajinikanth #RajiniMeetsPalanisamy
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.

    அவ்வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.



    இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்றார். அப்போது அவர் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். #Rajinikanth #RajiniMeetsPalanisamy
    திவாகரனின் மகன் ஜெயானந்த் டெல்லியில் மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். கூட்டணி தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. #JeyanandhDhivakaran #PiyushGoyal
    சென்னை:

    ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. சசிகலா குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.

    சசிகலாவின் உறவினரான தினகரன் அ.ம.மு.க. என்ற பெயரில் கட்சி தொடங்கினார். சசிகலா சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சி நடத்தி வருகிறார். அவர் தினகரனை விமர்சித்து பேட்டி அளித்து வந்தார். இதனால் அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்ப்பார் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் திவாகரனின் மகன் ஜெயானந்த் டெல்லியில் மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினார். இவர்தான் பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜனதா பொறுப்பாளராக உள்ளார். கூட்டணி தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த சந்திப்புக்குப்பின் ஜெயானந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டணி குறித்து மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்துப் பேசினேன். அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி அமைவது 90 சதவீதம் உறுதி ஆகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

    தமிழகத்தில் மீத்தேன் வாயு திட்டம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றக்கூடாது என்று அவரிடம் எடுத்துக் கூறினேன். தமிழக விவசாயிகள் பாதிப்பு அடையும் எந்த திட்டமும் நிறைவேற்றப்படாது என்று வாக்குறுதி அளித்தார்.

    இவ்வாறு ஜெயானந்த் கூறினார்.

    இதற்கிடையே அ.தி.மு.க. அணிகளை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாகவும் மத்திய மந்திரி பியூஷ் கோயலுடன் ஜெயானந்த் பேசியதாக தெரிய வருகிறது.

    இதுபற்றி ஜெயானந்திடம் கேட்டபோது, “அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி தமிழகத்தில் அமையும். ஜெயலலிதா இருந்தபோது இருந்ததைப் போன்ற வலிமையான ஒருங்கிணைந்த அ.தி.மு.க. மீண்டும் உருவாகும். அதில் தினகரனை தவிர்த்து அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவார்கள். அ.தி.மு.க.வுடன் முறைப்படி இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அது நடைபெறும் என்றார். #JeyanandhDhivakaran #PiyushGoyal

    நடிகர் ரஜினிகாந்த் இன்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். #Rajinikanth #RajiniMeetsStalin
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் வரும் 11ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.  திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.

    அவ்வகையில், சென்னை அண்ணாநகரில் இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை சந்தித்தார். அப்போது இருவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்தில் கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார். 



    இந்நிலையில், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சென்றார். அப்போது, தனது மகள் திருமணத்திற்கான அழைப்பிதழ் வழங்கி திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். #Rajinikanth #RajiniMeetsStalin
    இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். #MonaccoPrince #PMModi #SushmaSwaraj
    புதுடெல்லி:

    மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் அரசுமுறை பயணமாக இந்தியாவில் நேற்று முதல் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். தலைநகர் டெல்லியில் மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.



    மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் இன்று சந்தித்துப் பேசினார். இருதரப்பை சேர்ந்த அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான விசா விதிகள் குறித்தும் மற்றும் இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

    மேலும், காலநிலை மாற்றம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் தில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. #MonaccoPrince #PMModi #SushmaSwaraj
    மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். #MamataDharna #CBIvsMamata #ChandrababuNaidu
    கொல்கத்தா:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென அவரது வீட்டுக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்து, பின்னர் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் மோதல் உருவாகி உள்ளது.

    போலீஸ் உயர் அதிகாரியிடம் மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரிக்க முயற்சி செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதோடு அரசியலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கப் போவதாக சொல்லி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார். 



    அவரை தி.மு.க. சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு சந்தித்து இன்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, 22 எதிர்க்கட்சிகள் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இவையனைத்தும் பிரதமர் மோடி சி.பி.ஐ.யை ஏவி விட்டு மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளன. #MamataDharna #CBIvsMamata #ChandrababuNaidu
    ×