search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99996"

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். #ChandrababuNaidu #MKStalin
    சென்னை:

    பா.ஜ.க.வுக்கு எதிராக கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அங்கம் வகித்தது. ஆனால், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரவில்லை என்று கூறி பா.ஜ.க. கூட்டணியை விட்டு தெலுங்கு தேசம் கட்சி வெளியே வந்தது.

    தற்போது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

    ஏற்கனவே, அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார்.

    கடந்த வாரம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்தார். நேற்று மாலை மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவேகவுடாவை அவர் சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார். அவரது வருகையையொட்டி, 3 நாள் பயணமாக பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் மு.க.ஸ்டாலின் உடனே சென்னை திரும்புகிறார்.

    இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக, விஜயவாடாவில் இருந்து தனி விமானத்தில் மாலை 5 மணிக்கு சந்திரபாபு நாயுடு புறப்படுகிறார். மாலை 6 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் அவர், அங்கிருந்து கார் மூலம் ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு வருகிறார்.

    மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8.15 மணி வரை சந்திரபாபு நாயுடு அங்குதான் இருக்கிறார். இந்த சந்திப்பின்போது, தனது குடும்ப உறுப்பினர்களை மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவுக்கு அறிமுகம் செய்துவைக்கிறார். மேலும், விருந்து கொடுத்து உபசரிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

    அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின்போது, பா.ஜ.க.வுக்கு எதிராக கைகோர்த்து செயல்படுவது குறித்து மு.க.ஸ்டாலின் - சந்திரபாபு நாயுடு ஆகியோர் முடிவு எடுத்து அறிவிக்க இருக்கின்றனர். அதன்பிறகு, இரவு 8.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் சந்திரபாபு நாயுடு, அங்கிருந்து ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார். 
    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவை ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார். #ChandrababuNaidu #Devegowda #Kumaraswamy
    பெங்களூர்:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கூறி பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்கு தேச தலைவருமான சந்திரபாபு நாயுடு விலகினார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

    அதன்படி அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சமீபத்தில் சந்தித்து பேசினார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரையும் சந்தித்தார்.

    ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மிதலைவர் கெஜ்ரிவால், சரத்யாதவ் ஆகியோரையும் சந்தித்து இருந்தார்.

    இந்நிலையில் சந்திரபாபு நாயுடு இன்று மாலை முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவேகவுடாவை சந்தித்தார்.

    பத்மநாபா நகரில் உள்ள தேவேகவுடா வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அவரது மகனும் கர்நாடகா முதல்- மந்திரியுமான குமாரசாமியும் அப்போது உடன் இருந்தார். இதை மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தெரிவித்து உள்ளது.

    கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் இந்த கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக ஒரே ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. #ChandrababuNaidu #Devegowda #Kumaraswamy
    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆந்திரப்பிரதேசம் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை இன்று டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். #ArvindKejriwal #ChandrababuNaidu #SharadYadav
    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைநகர் டெல்லியில் உள்ள ஆந்திரப்பிரதேசம் பவனில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை இன்று சந்தித்தார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது லோக்தந்திரிக் ஜனதா தளம் தலைவர் ஷரத் யாதவும் உடனிருந்தார்.
     


    இந்த சந்திப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறுகையில், சந்திரபாபு நாயுடுஜி மற்றும் ஷரத் யாதவ்ஜி ஆகியோருடனான சந்திப்பு நல்லவிதமாக அமைந்தது. பல்வேறு தேசிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம்  

    அரசியலமைப்பை அச்சுறுத்தும் வகையில் தற்போதைய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் திரள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார். #ArvindKejriwal #ChandrababuNaidu #SharadYadav
    வேலூர் பெண்கள் ஜெயில் வளாகத்தில் காலை 9 மணி முதல் 10 மணி வரை நளினி-முருகன் சந்திப்பு நடந்தது.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ்காந்தி கொலை கைதிகள் நளினி-முருகன் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.

    அதன்படி இன்று பெண்கள் ஜெயில் வளாகத்தில் காலை 9 மணி முதல் 10 மணி வரை நளினி-முருகன் சந்திப்பு நடந்தது.

    ஆண்கள் ஜெயிலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முருகனை போலீசார் அழைத்து சென்றனர். சந்திப்பு முடிந்ததும் மீண்டும் முருகன் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்தார். #Congress #RahulGandhi #RanilWickremesinghe
    புதுடெல்லி:

    இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசுமுறை பயணமாக டெல்லி வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து இருநாட்டு உறவுகளின் மேம்பாடு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.



    இதற்கிடையில், இன்று அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசினார். இலங்கை பிரதமரின் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Congress #RahulGandhi  #RanilWickremesinghe

    கர்நாடகம் மாநில தலைநகரான பெங்களூருவுக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில முதல் மந்திரி குமாரசாமியை இன்று திடீரென சந்தித்துப் பேசினார். #RahulGandhi #Kumaraswamy
    பெங்களுரு:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகம் மாநிலத்துக்கு ஒருநாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவன ஊழியர்களை சந்திக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், கர்நாடகம் மாநில தலைநகர் பெங்களூருவில் தங்கிய ராகுல் காந்தி, திடீரென அம்மாநில முதல் மந்திரி குமாரசாமியை சந்தித்து பேசினார்.

    இருவரும் கர்நாடகம் மாநில அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #RahulGandhi #Kumaraswamy
    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கருணாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சுமார் 20 நிமிட நேரம் மு.க.ஸ்டாலினுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். #DMK #MKStalin #Karunas
    சென்னை:

    முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், அ.தி.மு.க. அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் அவரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கோர்ட்டில் ஜாமீன் பெற்று கருணாஸ் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

    அவரை வேறொரு வழக்கில் கைது செய்வதற்காக நெல்லை போலீசார் சென்னைக்கு வந்து முகாமிட்டு அவரது வீடு தேடி சென்றனர். ஆனால் இதை முன்கூட்டியே அறிந்த கருணாஸ் உடல்நலக் குறைவு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்து விட்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்யாமல் திரும்பி விட்டனர்.

    கருணாசை தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து பேசி வந்தனர்.

    தற்போது உடல் நலம் சரியாகிவிட்டதால் ஆஸ்பத்திரியில் இருந்து கருணாஸ் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீட்டுக்கு வந்து விட்டார்.

    இன்று காலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கருணாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சுமார் 20 நிமிட நேரம் மு.க.ஸ்டாலினுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார்.

    பின்னர் வெளியே வந்த கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-


    இந்த அரசு என்னை கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை என்று மக்கள் கூறுகின்றனர். என்னை மு.க.ஸ்டாலினோ, டி.டி.வி. தினகரனோ இயக்கவில்லை. எனது மனதில் பட்ட கருத்துக்களை நான் கூறிவந்தேன். இதற்காக என்னை பல்வேறு வழக்குகளில் கைது செய்ய போலீசார் முயன்றனர்.

    சட்டசபை சபாநாயகர் எந்த பக்கமும் சாயாமல் தராசு முள் போன்று இருக்க வேண்டும். ஆனால் அவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதால்தான் அவர் மீது விமர்சனம் எழுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #Karunas
    தஜிகிஸ்தானில் பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைநகர் துஷ்பாண்டேவில் அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரியை இன்று சந்தித்து பேசினார். #SushmaSwaraj #Tajikistan
    துஷ்பாண்டே:

    இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் பயணமாக தஜிகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார்.

    தஜிகிஸ்தான் தலைநகர் துஷ்பாண்டேவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். 

    இந்த மாநாட்டில் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் கொரியா தீபகற்ப பகுதிகளில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

    இந்நிலையில், தஜிகிஸ்தானில் பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைநகர் துஷ்பாண்டேவில் அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி சிரோஜிதின் முஹ்ரிடினை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசினார் என வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

    மேலும், ஆப்கானிஸ்தானின் மூத்த தலைமை அதிகாரி அப்துல்லா அப்துல்லாவையும் சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்து பேசினார். #SushmaSwaraj #Tajikistan
    நக்கீரன் கோபால் இன்று மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து தனக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதற்கு நன்றி தெரிவித்தார். #NakkeeranGopal #Vaiko
    சென்னை:

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சம்பந்தப்படுத்தி நக்கீரன் பத்திரிகையில் தகவல் வெளியிட்ட அதன் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீதும், அந்த செய்திக்கு பொறுப்பானவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரின் துணை செயலாளர் செங்கோட்டையன் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் புகார் செய்திருந்தார்.

    இந்த நிலையில் நக்கீரன் கோபால் நேற்று கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை பார்ப்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வந்தார். நக்கீரன் கோபாலை பார்க்க போலீசார் அவரை அனுமதிக்கவில்லை. இதையடுத்து வைகோ ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.

    இந்த நிலையில் தனக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய வைகோவை, நக்கீரன் கோபால் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    பின்னர் நக்கீரன் கோபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    போலீசார் என்னை விசாரணைக்காக அழைத்து செல்வதாக கூறினார்கள். என் மீது வழக்கு இருக்கிறதா என்று கேட்டேன். அதற்கு பதில் சொல்லாமல் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் வைகோ அங்கு வந்திருப்பதாக என்னிடம் கூறினார்கள். அவர் வந்ததால் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. வழக்கறிஞர் என்ற முறையில் என்னை அவர் சந்திக்க விரும்புவதாக கூறினார்கள்.

    அவர் வருவார் என்று காத்திருந்தேன். அவர் உள்ளே வரவில்லை. அவர் எங்கே என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டேன். அப்போது அவர் சத்தம் போட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக கூறினார்கள்.

    எனது வக்கீலிடம் வைகோ ஏன் வரவில்லை என்று கேட்டேன். அதற்கு அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. எனவே அவர் தனி ஆளாக சாலையில் அமர்ந்து தர்ணா செய்வதாக கூறினார். இது பெரிய அளவில் பரவி விட்டது. அவரை கைது செய்துகொண்டு போய் விட்டனர் என்றார்.

    அதன் பிறகு என்னை வெளியே கொண்டு வந்தனர். அப்போது ஊடகத்தினர் அனைவரும் நிற்பதை பார்த்தேன். அதன் பிறகே எனக்கு நிம்மதி வந்தது. பின்னர் என்னை கோசா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.



    அப்போது மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் வந்து என்னை பார்த்தனர். வைகோ அங்கு எல்லோரையும் மிரட்டி விட்டதாகவும் தர்ணா செய்து பிரச்சினை ஏற்படுத்தி விட்டதாகவும், மு.க.ஸ்டாலின் என்னிடம் தெரிவித்தார். கவர்னரின் முகத்திரையை கிழிக்க முதலில் புள்ளி வைத்தது வைகோதான்.

    பின்னர் என்னை எழும்பூர் கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு திருமாவளவன், முத்தரசன் வந்தனர். கோர்ட்டில் விவாதம் நல்ல விவாதமாக இருந்தது. கருத்துரிமைக்கும், பேச்சுரிமைக்கும் நீதிபதி சொன்ன தீர்ப்பின் மூலம் பெரிய நம்பிக்கை கிடைத்தது. இதற்கெல்லாம் காரணமாக எல்லோரும் ஒரே குரலில் நின்றதற்கு முதலில் புள்ளி வைத்தது வைகோதான். அதனால் அவருக்கு நன்றி தெரிவிக்கவே வந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது:-

    நக்கீரன் கோபால் ஜெயிலுக்கெல்லாம் பயப்பட மாட்டார் என்று நான் கூறினேன். உயிருக்கு துணிந்து அவர் காடுகளுக்கெல்லாம் போய் வந்தவர். 2 வருடம் நான் ஜெயிலில் இருந்தது போல அவர் பொடாவில் இருந்தார். எனவே இதுபற்றி அவர் கவலைப்பட மாட்டார். ஆனால் இன்றைக்கு நக்கீரன் கோபாலுக்கு வந்தது நாளை மற்ற பத்திரிகைகளுக்கு தொலைக்காட்சிகளுக்கு வரலாம். தமிழக அரசியலுக்கு வரலாம். எனவே இதை ஒட்டுமொத்த பத்திரிகைகளும் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

    நீதிபதி கோபிநாத் 124-க்கு முகாந்திரம் இல்லை என்று சொன்னது ராஜ்பவன் கன்னத்தில் விழுந்த அறை என்று சொன்னேன். இந்த கவர்னர் போன்ற மோசமான கவர்னர் இதுவரை தமிழ்நாடு சரித்திரத்தில் வந்தது இல்லை. ஆட்சியை கலைப்பதற்கு கூட அறிக்கை அனுப்பிய கவர்னர்கள் உண்டு. ஆனால் இந்த பதவியை தவறாக பயன்படுத்தி ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்திக் கொண்டு மந்திரிகளையும், எம்.பி.க்களையும் உள்ளே விடாமல் அலுவலர்களை மட்டும் விட்டு நிர்வாகத்தை பற்றி விசாரணை செய்கிறார். அதற்கு தி.மு.க. எல்லா இடங்களிலும் கருப்பு கொடி காட்டியது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏப்ரல் மாதம் நக்கீரன் பத்திரிகையில் கட்டுரை வந்துள்ளதென்றால் அது தவறான செய்தி என்று கோர்ட்டில் முறையிடலாம்.

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சொன்னதும், நீதிமன்றத்தையும், காவல்துறையையும் இழிவாக பேசியதும் எங்கே போலீசார் தப்பித் தவறி கைது செய்யப்போய் விடுவார்களோ என்று ராஜ்பவனுக்கு வரவழைத்து விருந்து உபசாரம் நடத்தியது மகா அயோக்கியத்தனம்.

    பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் கைமாறி ஊழல் நடந்துள்ளது என்று கூறுகிறார். எந்தெந்த துணைவேந்தர் நியமனத்துக்கு எவ்வளவு கைமாறியுள்ளது என்று நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே. மந்திரி என்றால் நீக்க வேண்டியது தானே. கல்வியாளர்கள் கவர்னரிடம் பேசியதாக பொத்தாம் பொதுவாக அவர் கூறுகிறார்.

    கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்பது அண்ணாவின் கோரிக்கை. எங்கள் கோரிக்கை. இந்த கவர்னர் வந்ததில் இருந்து மத்திய அரசின் ஏஜெண்டாக இருக்கிறார். இங்குள்ள அரசாங்கத்துக்கு முதுகெலும்பும் கிடையாது. சுயமரியாதையும் கிடையாது.

    இந்த நாட்டில் நீதியை காப்பாற்றும் நீதிபதிகளும் இருக்கிறார்கள் என்பதை நேற்றைக்கு நீதிபதி கோபிநாத் நிரூபித்து இருக்கிறார். நக்கீரன் கோபாலை நெருங்கி மூக்கறுபட்ட நிலையில் இனிமேல் இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் தமிழக போலீசை ஈடுபடுத்தக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #NakkeeranGopal #Vaiko
    ஜப்பான் வந்துள்ள அமெரிக்க வெளியுறத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே-வை இன்று சந்தித்து பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்தார். #PompeomeetsAbe #AbemeetsPompeo
    டோக்கியோ:

    ஜப்பான், வடகொரியா, சீனா உள்ளிட்ட  தெற்காசிய நாடுகளில் அமெரிக்க வெளியுறத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    வடகொரியா-அமெரிக்கா இடையில் சமீபத்தில் சிங்கப்பூரில் செய்யப்பட்ட அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றுவது தொடர்பாக  வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை வலியுறுத்துவது அவரது பயணத்தின் அதிமுக்கிய நோக்கமாக உள்ளது.



    இந்நிலையில், இன்று டோக்கியோ நகரில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் மைக் பாம்ப்பியோ சந்தித்து ஆலோசனை நடத்தினர். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத பகுதியாக மாற்றிட அமெரிக்க அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு ஷின்சோ அபே ஆதரவு தெரிவித்தார்.

    மேலும், வடகொரியா நாட்டில் கைது செய்து, சிறைக்காவலில் அடைக்கப்பட்டுள்ள ஜப்பான் நாட்டினரை விடுதலை செய்வது தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னிடம் பேசுமாறு இன்றைய சந்திப்பின்போது மைக் பாம்ப்பியோ-வை ஷின்சோ அபே கேட்டுக் கொண்டார். #PompeomeetsAbe #AbemeetsPompeo
    சென்னை வடபழனி சூர்யா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கருணாசை தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று சந்தித்து பேசினார். #Karunas #JAnbazhagan
    சென்னை:

    வடபழனி சூர்யா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கருணாசை தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று சந்தித்து பேசினார்.

    பின்னர் ஜெ.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் ஐ.சி.யு. வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளர். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தேன்.

    டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக கருணாஸ் செயல்படுவதாக நினைத்து பழைய வழக்குகளை தோண்டி எடுக்கிறார்கள். அவருக்கு சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப உள்ளதாக பத்திரிகை, தொலைக்காட்சியில் பார்த்தேன்.

    ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த தகுதி நீக்க வழக்கில் இன்னும் தீர்ப்பு வராமல் 3-வது நீதிபதியிடம் சென்றுள்ளது.

    இதில் ஏற்கனவே சபாநாயகரின் தீர்ப்பு தவறு என்று ஒரு நீதிபதி கூறி உள்ளார். மற்றொரு நீதிபதி ‘சரி’ என்று சொல்லி உள்ளார்.


    ஆகவே சபாநாயகரின் தீர்ப்பு சரிசமமாகத்தான் இருக்கிறதே தவிர நியாயமாக தீர்ப்பு சொன்னதாக யாரும் சொல்லவில்லை. 3-வது நீதிபதி தீர்ப்புக்காக எல்லோரும் காத்திருக்கிறோம்.

    இந்த 3-வது நீதிபதியும் சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது என்று சொல்லிவிட்டால் சபாநாயகர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்?

    எனவே நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சபாநாயகர் கொஞ்சம் அமைதியாக இருந்து 3-வது நீதிபதியின் தீர்ப்பை பார்த்து விட்டு அவருக்கு அதிகாரம் இருக்கிறதா? இல் லையா? என்பதை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

    இந்த ஆட்சி முடியும் தருவாய்க்கு வந்து விட்டது. ஒரு நோயாளி ஆஸ்பத்திரியில் முடியாமல் இருக்கும் போது மூச்சை இழுத்து இழுத்து விடுவான். இதை பார்ப்பவர்கள் நல்லா மூச்சு விடுகிறான் என்பார்கள். அது நிற்பதற்கான மூச்சு தானே தவிர நல்லா மூச்சுவிடுவதாக அர்த்தமில்லை.

    அதுபோல் இந்த ஆட்சி முடியும் நேரத்தில் ஆட்சியாளர்கள் சர்வாதிகார உச்சிக்கு செல்கிறார்கள். இது நீடிக்காது. இந்த ஆட்சி நீதிமன்றத்தின் மூலமாகவும், மக்கள் மன்றத்தின் மூலமாகவும் தூக்கி எறியப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Karunas #JAnbazhagan
    அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ, வரும் ஞாயிறு அன்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். #MikePompeo #KimJongUn
    வாஷிங்டன் :

    உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது. 
     
    இதையடுத்து, தென்கொரியா எடுத்த முயற்சியின் பலனாகவே அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். 

    அப்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற கிம் ஜாங் அன் உறுதி அளித்து, டிரம்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்பின், வடகொரியா அணுகுண்டுகளையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையோ சோதித்து பார்க்கவில்லை. ஆனாலும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.



    சமீபத்தில் 3 நாள் பயணமாக வடகொரியா சென்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த பயணத்தின் போது டொனால்டு டிரம்ப்புக்கு, கிம் ஜாங் அன் எழுதிய ரகசிய கடிதம் மூன் ஜே இன் வாயிலாக வெள்ளை மாளிகைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. அதில், கிம் ஜான் அன் டிரம்ப்பை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டது. 

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர்ர் மைக் பாம்பியோ வரும் ஞாயிற்றுக்கிழ்மை அன்று வட கொரியா செல்கிறார். அங்கு அவர் அதிபர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #MikePompeo #KimJongUn
    ×