search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99996"

    அரசுமுறை பயணமாக கம்போடியா நாட்டுக்கு வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் முன்னிலையில் இந்தியா - கம்போடியா இடையே இரு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது. #SushmaSwaraj #SushmainCambodia
    பினாம் பென்:

    வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வியட்னாமில் இருநாட்கள் தங்கியிருந்த சுஷ்மா, நேற்று கம்போடியா வந்தார். தலைநகர் பினாம் பென் நகரில் அரசு மரியாதையுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கம்போடியா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி பாம் பின்ஹ் மின்ஹ் - சுஷ்மா சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், முதலீடு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எட்டப்பட்டன.

    கம்போடியாவின் பிரேயா விஹியர் பகுதியில் உள்ள உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான சிவன் கோயிலை புதுப்பித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.


    இந்திய அயல்நாட்டுப் பணி கல்வி பயிற்சியகம் மற்றும் கம்போடியா  அயல்நாட்டுப் பணி, சர்வதேச உறவுகள் தொடர்பான பயிற்சியகம் இடையில் கூட்டுறவாக செயல்படுவது தொடர்பாக மேலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையொப்பமானது.

    பின்னர் கம்போடியா பிரதமர் ஹூன் சென்-ஐ சந்தித்த சுஷ்மா சுவராஜ் இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.  #SushmaSwaraj #SushmainCambodia 
    அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு பிரதமர் நிகுயென் சுவான் புக்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #NguyenXuanPhuc #Vietnam
    ஹனாய்:

    ஆசியான் அமைப்பில் நேசநாடுகளில் ஒன்றாக வியட்நாம் உள்ளது. வியட்நாமின் வெளியுறவுத்துறை மந்திரி பாம் பின் மின் தலைமையிலான இந்தியா - வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜ் வியட்நாம் சென்றுள்ளார். வியட்நாமை தொடர்ந்து 29-ம் தேதி (நாளை) கம்போடியாவுக்கு செல்ல உள்ளார்.

    இந்நிலையில், இன்று வியட்நாம் பிரதமர் நிகுயென் சுவான் புக்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். வியட்நாம் பிரதமர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஆகியோருக்கு இடையேயான இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளின் உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. #SushmaSwaraj #NguyenXuanPhuc #Vietnam
    வங்கி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதற்கு முன் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #VijayMallya #RahulGandhi #BJPLeader
    லண்டன்:

    இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்தில் தலைமறைவாக வசித்து வருகிறார். அவர் மீது, ‘தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.

    ஆனால் லண்டன் கோர்ட்டில் நடைபெறும் நாடு கடத்தக்கோரும் வழக்கின் விசாரணையில் அவர் பங்கேற்பதால், மும்பை கோர்ட்டில் நேரில் ஆஜராகமாட்டார் எனவும், அவருக்கு பதிலாக சட்ட பிரதிநிதி ஒருவர் ஆஜராவார் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.



    இந்த நிலையில் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்கு முன் பா.ஜனதா தலைவர்களை சந்தித்து பேசியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்குள்ள இந்திய பத்திரிகையாளர் சங்கத்தினருடன் நடத்திய கலந்துரையாடலின் போது, இது தொடர்பாக கூறியதாவது:-

    இந்திய வங்கிகளை மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கும் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் மோடி அரசு கருணையுடன் நடந்துகொள்கிறது. இந்திய சிறைகள் சரியில்லை என மல்லையா கூறியதால், அவருக்காக சிறப்பு ஜெயில் ஏற்படுத்தப்படுகிறது. இதை ஏற்க முடியாது. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சட்டம் பொதுவானதாக இருக்க வேண்டும்.

    விஜய் மல்லையா, நாட்டை விட்டு வெளியேறும் முன் பா.ஜனதா மூத்த தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர்களின் பெயரை வெளியிடமாட்டேன்.

    மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரெயில் திட்டம் குறித்த அழகான சுவரொட்டிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த ரெயில் டிக்கெட் கட்டணம் விமான கட்டணத்தை விட அதிகம். நாளொன்றுக்கு 5 ஆயிரம் மக்களுக்காக ரூ.1½ லட்சம் கோடி என்பது தேவையற்ற முதலீடு.

    இந்த திட்டத்தை பற்றி பேசுவதில் மோடி அரசு காட்டும் ஆர்வத்தை, அதை செய்து முடிப்பதில் காட்டவில்லை. வேகமெடுக்காத இந்த திட்டம் வெறும் எண்ணம் மட்டும்தான். அதில் உண்மை இல்லை.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    பின்னர் மேற்கு லண்டனில் இந்திய சர்வதேச காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை என கூறிவரும் பிரதமர் மோடி, இதன் மூலம் காங்கிரசை அல்ல, நாட்டு மக்களையே அவமதித்து வருகிறார். ஏனெனில் உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை இந்தியா காட்டியிருக்கிறது. இந்திய மக்கள் இதை சாத்தியமாக்கி இருக்கிறார்கள். இதற்கு காங்கிரஸ் கட்சி உதவியிருக்கிறது.

    அதேநேரம் தற்போது தலித்துகள், விவசாயிகள், பழங்குடி மக்கள், சிறுபான்மையினர் மற்றும் இந்திய ஏழைகள், தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கிறார்கள். இதைக் கேட்டால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தலித் வன்கொடுமை சட்டம் பலவீனப்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    நாட்டில் யாரும் எதையும் பெறவில்லை. ஆனால் அம்பானி மட்டுமே அனைத்தும் பெற்று வருகிறார். இந்த மனிதர் ரூ.45 ஆயிரம் கோடி கடன் பெற்று இருக்கிறார். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் போடப்பட்ட ரபேல் ஒப்பந்தத்தை, ஒரு தொழில் அதிபரின் வளர்ச்சிக்காக பா.ஜனதா அரசு கூடுதல் தொகைக்கு அதிகரித்து இருக்கிறது.

    சுப்ரீம் கோர்ட்டு, தேர்தல் கமிஷன், ரிசர்வ் வங்கி போன்ற நாட்டின் தூண்கள் அனைத்தும் சீரழிக்கப்பட்டு வருகின்றன. சீனா நாளொன்றுக்கு 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்தியா வெறும் 450 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிறது. இது மிகப்பெரும் பிரச்சினை ஆகும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    முன்னதாக இந்த கூட்ட அரங்கிற்கு ராகுல் காந்தி வருவதற்கு முன் அங்கு வந்த ‘காலிஸ்தான்’ அமைப்பு ஆதரவாளர்கள் சிலர் ‘காலிஸ்தான் வாழ்க’ என கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் கூட்டத்தினர் சிலரும் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  #VijayMallya #RahulGandhi #BJPLeader
    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் இன்று சந்தித்து பேசினார். #PMModi #ChandrashekarRao
    புதுடெல்லி:

    தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் இன்று டெல்லி சென்றார். மாலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை 
    சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பின் போது, மாநில விவகாரங்கள் தொடர்பான் மனு ஒன்றை பிரதமர் மோடியிடம் அளித்தார். ஏற்கனவே, இந்த மாத தொடக்கத்திலும் சந்திரசேகர் ராவ், பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.. #PMModi #ChandrashekarRao
    பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி எம்.பி, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசினார். #SubramanianSwamy #Rajapaksa
    கொழும்பு:

    பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி எம்.பி. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் மடமுலனாவில் உள்ள முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் முன்னோர்கள் இல்லத்துக்கு சென்று அங்கு ராஜபக்சேவை சந்தித்தும் பேசினார். அப்போது டெல்லிக்கு வருமாறு சுப்பிரமணியசாமி அவருக்கு அழைப்பும் விடுத்தார்.

    மேலும், நேற்று முன்தினம் மரணம் அடைந்த ராஜபக்சேவின் இளைய சகோதர சந்திர ராஜபக்சேவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

    இதுபற்றி சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பதிவில், “இலங்கையின் தென்பகுதிக்கு சென்று முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சி தரும் நிகழ்வாக இருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவது என்ற உறுதியான முடிவை எடுத்தவர் என்ற வகையில் அவர் பாராட்டுக்குரியவர். அதேபோல் ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் படுகொலை செய்ததால் இந்தியர்கள் கொண்டிருந்த மிகுந்த வேதனையை தணித்தவரும் ஆவார்” என்று குறிப்பிட்டு உள்ளார்.  #SubramanianSwamy #Rajapaksa
    வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திபேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். #NorthKorea #KimJongUn #DonaldTrump
    வாஷிங்டன்:

    வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சந்தித்துப் பேசினார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பிரதேசமாக மாற்ற உறுதி கொண்டு வடகொரியா, அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது.



    இந்த நிலையில் டிரம்ப், ரெயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியின்போது அவர் கூறுகையில், “வடகொரிய தலைவர் கிம் அணு ஆயுதங்களை கைவிடுவாரா, மாட்டாரா என்பதில் பரவலாக சந்தேகங்கள் இருந்தாலும்கூட, அவர் சொன்னபடி அணு ஆயுதங்களை கைவிடும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து உள்ளார். வடகொரியாவுடன் பல நல்ல விஷயங்கள் நடந்து உள்ளன. இந்த விஷயத்தில் எதிர்பார்த்த அளவுக்கு சீனா உதவிகள் செய்யவில்லை. அமெரிக்காவுடன் சீனாவுக்கு உள்ள வர்த்தக பிரச்சினைகள்தான் இதற்கு காரணம்” என்று கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, “வடகொரியா அணு ஆயுதங்களை சோதிப்பதை தடுத்து நிறுத்தி விட்டேன். அவர்கள் ஏவுகணைகளை சோதித்துப் பார்ப்பதையும் நிறுத்தி உள்ளேன். ஜப்பான் இதைக் கண்டு சிலிர்த்துப்போனது. இனி என்ன நடக்கப்போகிறது? யாருக்கு தெரியும்? நாங்கள் மீண்டும் சந்திக்கப்போகிறோம்” என்று குறிப்பிட்டார்.  #NorthKorea #KimJongUn #DonaldTrump #tamilnews
    ராகுல்காந்தியை திருநாவுக்கரசர் மீண்டும் சந்தித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினார். இதற்கிடையே நடிகை குஷ்புவும் ராகுல்காந்தியை தனியாக சந்தித்து பேசியுள்ளார். #Thirunavukkarasar #Kushboo #RahulGandhi
    புதுடெல்லி:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கட்சியை வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது மாவட்ட அளவில் செயல்வீரர்கள் கூட்டத்தையும் நடத்தினார். இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் அழைப்பின்பேரில் திருநாவுக்கரசர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புதுடெல்லி சென்றனர்.

    அவர்கள் அனைவரும் ராகுல்காந்தியை சந்தித்து பேசினர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் ராகுல்காந்தியிடம், தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், மாநிலத்தலைவரின் செயல்பாடு குறித்தும், தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும் விரிவாக பேசினர். பின்னர் ராகுல்காந்தி, திருநாவுக்கரசருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    சமீபகாலமாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசரை நீக்க வேண்டும் என்று ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த வேளையில் டெல்லியில் இந்த சந்திப்பு நடந்தது தமிழக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதேநேரத்தில் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள் கூறும்போது, ‘தமிழகத்தில் விரைவில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இது சம்பந்தமாகவே ராகுல்காந்தியுடன், திருநாவுக்கரசர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். திருநாவுக்கரசர் பொறுப்பேற்ற பிறகு தான் கட்சி நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறது’ என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே ராகுல்காந்தியை, திருநாவுக்கரசர் நேற்று மாலை 4.30 மணிக்கு மீண்டும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து ராகுல்காந்தியிடம் அவர் முழுமையாக விளக்கி கூறியதாக தெரிகிறது.

    மேலும் தமிழகம் முழுவதும் தான் நடத்திய செயல்வீரர்கள் கூட்டங்களை பற்றியும், அதில் பங்கேற்ற, பங்கேற்காத நிர்வாகிகள் குறித்தும் அவர் விளக்கி கூறியதாக தெரிகிறது.

    இந்தநிலையில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்புவும், ராகுல்காந்தியை நேற்று தனியாக சந்தித்து பேசினார். தமிழக காங்கிரஸ் கட்சியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ராகுல்காந்தியுடன் அவர் பேசியதாக தெரிகிறது.

    தமிழக காங்கிரஸ் தலைவர், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் ஆகியோருடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தியிருப்பதன் மூலம் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கட்சி தலைமை தொடங்கி இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.  #Thirunavukkarasar #Kushboo #RahulGandhi
    தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நிதி மந்திரியை சந்தித்து தமிழக அமைச்சர்கள் பேச்சு நடத்தினர்.
    புதுடெல்லி:

    தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் டெல்லி சென்றனர். இன்று அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நிதி மந்திரியும் மின்சாரத்துறை மந்திரியுமான பியூஸ் கோயலை சந்தித்துப் பேசினார்கள்.

    அப்போது தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோருதல் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து பேச்சு நடத்தினார்கள்.
    ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப்போர் முடிவுக்கு கொண்டு வர தலீபான் அமைப்பின் முன்னாள் தலைவர்களும், அமெரிக்க அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.
    வாஷிங்டன்:

    ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 18-வது ஆண்டாக அரசு படைகளுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்பினருக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

    இந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர தலீபான்களை நேரடி பேச்சு நடத்த வருமாறு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி அழைப்பு விடுத்தார். ஆனால் அமெரிக்காவுடன் மட்டுமே நேரடி பேச்சு நடத்த விரும்புவதால், ஆப்கானிஸ்தான் அதிபர் அழைப்புக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. அந்த வகையில் கத்தாரிலும், ஆப்கானிஸ்தானிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் தலீபான் அமைப்பின் முன்னாள் தலைவர்களும், அமெரிக்க அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.

    கத்தார் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஒருவர் இதுபற்றி குறிப்பிடுகையில், “கத்தார் நாட்டின் தோஹா நகரில் உள்ள ஓட்டலில் பேச்சுவார்த்தை இணக்கமான முறையில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தை ஓட்டலுக்குள்ளும், வெளியேயும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்தது. ஓட்டல் பணியாளர்கள் கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை” என கூறினார்.

    இதே போன்று இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் தலீபான்கள், அமெரிக்க அதிகாரிகள் சந்தித்து பேச்சு நடத்தியதாக தலீபான் தளபதி ஒருவர் கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, “எங்கள் நிலைப்பாடு தெளிவானது. ஏற்கனவே கூறியதைப்போன்று ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை திரும்பப்பெறப்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க அனுமதிக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார். 
    தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து, ஈரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கடிதம் ஒன்றை அளித்தார்.
    புதுடெல்லி:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து, ஈரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கடிதம் ஒன்றை அளித்தார்.



    அதில், “ஈரானில் பணிபுரியும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 21 மீனவர்கள் கடந்த 6 மாதங்களாக பணியில் இருந்து நீக்கப்பட்டு மிகவும் பரிதாபமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை பணிக்கு அமர்த்தியவர்கள் அவர்களிடம் இருந்து பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை பறித்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஊதியம் வழங்காமல் கொடுமை இழைத்து வருகின்றனர் என்று தகவல் வந்துள்ளது. எனவே, வெளியுறவுத்துறை அமைச்சகம் இதில் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட 21 மீனவர்களையும் தமிழகத்துக்கு மீட்டுக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த கடிதத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி சுஷ்மா சுவராஜ் உறுதி அளித்ததாக கனிமொழி எம்.பி. அலுவலகம் தெரிவித்து உள்ளது. 
    சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்ற நிலையில், அடுத்த சந்திப்புக்காக காத்திருப்பதாக ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #Trumph
    வாஷிங்டன்:

    உலக நாடுகளில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இரு துருவங்களாக இருந்தன. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு நிகழ்வுகளில் பகை இருந்துவந்தது. இந்த பகையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரது சந்திப்பு நடைபெற்றது.

    வெற்றிகரமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு நாட்டு அதிபர்களும் தங்கள் பகை மறந்து, பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.



    இந்நிலையில், ரஷ்ய அதிபருடனான அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில்,  ரஷ்யாவுடனான சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்ததாகவும், அடுத்த சந்திப்பில், இருநாடுகளும் ஆலோசித்த பயங்கரவாத தடுப்பு, இஸ்ரேல் பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கெனவே தாம் அடுத்த சந்திப்பை எதிர்நோக்கி இருப்பதாகவும் ட்ரம்ப் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். #Trumph
    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை சந்தித்து பேசினர்.
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளருமான டி.டி.வி. தினகரன், இளவரசியின் மகன் விவேக், விவேக்கின் மனைவி மற்றும் உறவினர் ராஜராஜன் ஆகியோர் நேற்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தனர்.

    பின்னர், அவர்கள் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை நடந்தது. பின்னர் சிறை முன்பு டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

    18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு நிச்சயம் வரும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்படும். 18 பேரும் முதல்-அமைச்சரை மாற்ற கோருவார்கள். நான் ஆட்சி வேண்டாம் என சொல்கிறேன். துரோகத்தை கருவோடு அறுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இதை கூறுகிறேன். தியாகம், தர்மம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்கு இயற்கையும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×