search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99996"

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கும் எழிலகத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி. தினகரன் வந்தார். போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
    சென்னை:

    அரசு ஊழியர்-ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கும் எழிலகத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டி.டி.வி. தினகரன் வந்தார். போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு ஊழியர்-ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானது. 3 நாட்களாக அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களை முதல்வர், அமைச்சர்கள், சந்திக்கவில்லை. இன்றைக்கு குருட்டு அரசாங்கம் நடந்து வருகிறது. ஒரு தலைகீழான அரசாங்கத்தில் மக்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

    தொடர்ந்து அரசியலில் இருக்க விரும்புகிறவர்கள் மக்கள் பணியை ஆற்ற நினைப்பவர்கள் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க முயற்சி செய்வார்கள். இவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்ய விரும்பவில்லை. இந்த அரசு மக்கள் விரோத அரசாக உள்ளது. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்று கூறுகிறார்கள். சட்டியில் கொண்டு வந்து சேர்ப்பது அரசின் வேலை. ஆனால் இவர்கள் சட்டியில் இருந்து சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.


    பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக யாரையும் பலி கொடுக்க தயாராகி விட்டார்கள். ஈவு இரக்கம் இவர்களுக்கு இல்லை. அதனால் உங்கள் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருப்பதை கைவிட வேண்டும். உங்களுக்கு இந்த அரசிடம் நியாயம் கிடைக்காது. இந்த ஆட்சி நீடிக்கப் போவதில்லை. நான் இதை அரசியலுக்காக பேசவில்லை. உங்கள் வாக்குகளுக்காக பேசவில்லை. உங்கள் கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. அதனால் எப்போது தேர்தல் வந்தாலும் ஆட்சி அமைப்போம். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். ஆட்சி மாற்றம் ஏற்படும்.

    மக்கள் பிரச்சனையை தீர்க்க முன் வரமாட்டார்கள். போராட்டம் முற்றி உயிர்ப்பலி ஏற்பட்ட பிறகு ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என்று இழப்பீடு வழங்குவார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு எப்போது வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் தீர்ப்பு எங்களுக்கு நியாயமாகவும், சாதகமாகவும் அமையும்.

    காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதரணியை சட்டசபையில் இருந்து வெளியேற்றிய சம்பவம் ஜெயலலிதா இருந்திருந்தால் நடந்து இருக்காது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டி.டி.வி.தினகரனுடன் முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில் பாலாஜி, செந்தமிழன் மற்றும் வெற்றிவேல், வி.எஸ்.பாபு, சந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர். #TTVDhinakaran #JactoJio
    அமெரிக்காவும் வடகொரியாவும் இணைந்து புதிய வரலாறு படைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #singaporesummit #Trumpkimsummit #Trumpspeech
    சிங்கப்பூர்:

    சிங்கப்பூரில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் இன்று கையொப்பமிட்டனர்.

    பின்னர், செய்தியாளர்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப், இன்றைய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதுபோல், அதில் உள்ள அம்சங்களின்படி கிம் ஜாங் அன் வாழ்ந்து காட்ட வேண்டும் என தெரிவித்தார்.

    பின்னர் டிரம்ப் பேசியதாவது:-

    இன்றைய நாள் உலக வரலாற்றில் மிக முக்கியமான உயர்வான நாளாகும். புதிய வரலாறு படைக்கவும், புதிய அத்தியாயத்தை எழுதவும் நாங்கள் தயாராகி விட்டோம். எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதை கடந்தகாலம் வரையறுக்க முடியாது. யார் வேண்டுமானாலும் போரை ஏற்படுத்தலாம். ஆனால், விவேகமானவர்களால் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும்.

    போரின் பயங்கரங்களை அமைதிக்கான வரங்களால் நாம் மாற்றி அமைக்க முடியும். அணு ஆயுதங்களை ஒழிக்கும் வடகொரியாவின் நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கும். இன்றைய ஒப்பந்தத்துக்கு பின்னர் வடகொரியாவுடன் உறவுகளை ஏற்படுத்தி கொள்ள உலக நாடுகள் ஆர்வம் காட்டும்.



    தனது நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த பாடுபடும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் மிகவும் திறமைசாலி. எங்கள் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேர்மையாகவும், நேரடியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்தது.

    முந்தைய அமெரிக்க அதிபர்கள் மூலம் இந்த ஒப்பந்தம் உருவாகி இருக்க முடியாது என நம்பியதாக கிம் ஜாங் அன் என்னிடம் தெரிவித்தார். இந்த சந்திப்பு வடகொரியா மக்களுக்கு மட்டுமின்றி, அமெரிக்க மக்களுக்கும் நன்மையாக அமையும் என எண்ணுகிறேன்.

    அணு ஏவுகணைகள் ஒரு பொருட்டல்ல என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படும்போது, முன்னர் (வடகொரியா மீது) விதிக்கப்பட்ட தடைகள் எல்லாம் நீக்கப்படும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன். அணு ஆயுதங்களை கைவிடுவதால் வடகொரியா பெறும் நன்மைகள் ஏராளம். உரிய நேரம் வரும்போது அமெரிக்காவுக்கு வருமாறு கிம் ஜாங் அன்-ஐ அழைக்கப் போவதாக நான் தெரிவித்தேன். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்.

    கிம் ஜாங் அன் வடகொரியாவுக்கு போய் சேர்ந்ததும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள பணிகளை தொடங்குவார் என நான் நினைக்கிறேன். கொரிய தீபகற்பத்தில் இனி அமெரிக்கா போர் பயிற்சியில் ஈடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார். #singaporesummit #Trumpkimsummit #Trumpspeech
    உலகம் இனி மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் என்று அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வடகொரிய தலைவர் கிம் நம்பிக்கை தெரிவித்தார். #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument
    சிங்கப்பூர்:

    அமெரிக்கா, வடகொரியா இடையிலான பகைமை உணர்வு மறைந்து நட்புறவுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி உள்ளன. முதற்கட்டமாக சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் இன்று டிரம்ப்- கிம் ஜாங் அன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உலகமே உற்றுநோக்கிய இந்த சந்திப்பின்போது அணு ஆயுத ஒழிப்பு, பொருளாதார தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.



    இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், டிரம்ப், கிம் ஜாங் அன் இருவரும் கையெழுத்திட்டனர். அதன்பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது, கிம் ஜாங் அன் பேசுகையில், இது வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என்றும் இந்த சந்திப்பு சிறப்பாக நடப்பதை உறுதி செய்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

    ‘கடந்த காலங்களில் நடந்தவற்றை மறக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதற்காக முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். இனி உலகம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும்’ என்றும் கிம் கூறினார்.

    டிரம்ப் பேசும்போது, வடகொரிய தலைவர் கிம்மை அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைப்பேன் என்றார். பேச்சுவார்த்தை தொடர்பான விரிவான விவரங்களை மாலை 4 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவிக்க உள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.  #TrumpKimSummit #USPresidentDonaldTrump #TrumpKimSignedDocument

    சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். #JactoGeoProtest #StalinMeetsJactoGeo
    சென்னை:

    பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும், 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான  ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை எழிலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது.



    இந்த உண்ணாவிரதத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், இரா.தாஸ், செ.முத்துசாமி, வெங்கடேசன், அன்பரசு, தாமோதரன், சுரேஷ், செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் மற்றும் மோசஸ் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

    இந்நிலையில், போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை தி.மு.க செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் பேசுவதாக கூறினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை குறித்து சட்டப்பேரவையில் பேச உள்ளதாகவும் கூறினார்.

    எம்.எல்.ஏ.க்களுக்கு மாமூல் கொடுத்து ஆட்சியை தக்க வைப்பதில் அ.தி.மு.க. அரசு தீவிரமாக உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார். #JactoGeoProtest #StalinMeetsJactoGeo
    வடகொரிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவற்காக சிங்கப்பூர் வந்து சேர்ந்துள்ள டிரம்ப், இன்று சிங்கப்பூர் பிரதமரை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். #Singaporesummit #DonaldTrump
    சிங்கப்பூர்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நாளை காலை 9 மணியளவில் சிங்கப்பூரின் பிரபலமான சுற்றுலாத்தலமான சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

    உலக நாடுகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்றே சிங்கப்பூர் வந்தடைந்தார். சிங்கப்பூர் நாட்டின், பய லேபார் விமான தளத்திற்கு வந்தடைந்த அவரை, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.


    இந்நிலையில், சிங்கப்பூர் அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகையான இஸ்தானாவில் இன்று அமெரிக்க அதிபர் டிரம்புக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் லீ செய்ன் லூங் டிரம்பை வரவேற்று அழைத்துச் சென்றார். டிரம்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், வெள்ளை மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் சாரா மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

    இதையடுத்து இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து லீ செய்ன் லூங், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டிரம்ப் மற்றும் அவருடன் சென்ற குழுவினருக்கு பிரதமர் லீ மதிய விருந்து அளித்தார். #Singaporesummit #DonaldTrump
    கர்நாடகத்தில் மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். #RahulGandhi
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் புதிதாக அமைந்துள்ள குமாரசாமி மந்திரிசபை கடந்த 6-ந்தேதி விஸ்தரிக்கப்பட்டது. அதில், மந்திரி பதவியை எதிர்பார்த்து இருந்த முன்னாள் மந்திரியும், லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக அங்கீகரிக்க குரல் கொடுத்தவருமான எம்.பி.பட்டீலுக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. அவருக்கு ஆதரவாக 15 முதல் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

    அவர்கள் நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினர். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல், கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், மாநில காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான கிருஷ்ண பைரே கவுடா ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தீர்வு காணும் பணி நடந்து வருவதாக கிருஷ்ண பைரே கவுடா தெரிவித்தார்.

    எம்.பி.பட்டீல் நிருபர்களிடம் கூறுகையில், “ராகுல் காந்தியிடம் எனது கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன். காங்கிரசை விட்டு விலக மாட்டேன். பா.ஜனதாவுடன் நான் தொடர்பில் இல்லை” என்றார். 
    பிரபல அரசியல் விமர்சகரும் கட்டுரையாளரும், மூத்த பத்திரிகையாளருமான குல்தீப் நய்யாரை இன்று சந்தித்த அமித்ஷா, பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார்.#AmitShahmetKuldeepNayyar #journalistKuldeepNayyar
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.

    இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா திட்டமிட்டுள்ளார்.



    அவ்வகையில், பிரபல அரசியல் விமர்சகரும் கட்டுரையாளரும், மூத்த பத்திரிகையாளருமான குல்தீப் நய்யாரை இன்று சந்தித்த அமித் ஷா, பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டினார். மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் புத்தகத்தை அவரிடம் அளித்த அமித் ஷா, சிறிது நேரம் அவருடன் உரையாற்றினார். #AmitShahmetKuldeepNayyar  #journalistKuldeepNayyar #tamilnews 
    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசித்தார். #ModimetXiJinping
    பீஜிங்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவின் குவின்காடோ நகரில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 18 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.

    இந்த அமைப்பில் புதிதாக இணைந்த நாடு என்ற வகையில் பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலாக இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.

    இந்நிலையில், குவின்காடோ நகரில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச்செயலாளர் ரஷித் அலிமோவ்-ஐ பிரதமர் மோடி சந்தித்தார்.


    பின்னர், சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    முன்னதாக, இந்த அமைப்பில் உள்ள நாட்டின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற பூர்வாங்க ஆலோசனை கூட்டத்திலும் மோடி கலந்து கொண்டார். #SCO #ModimetXiJinping
    அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பின் போது தாம் கொல்லப்படலாம் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    பியாங்யோங்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் வரும் 12-ம் தேதி சந்தித்து பேசுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

    சிங்கப்பூரின் செண்டோசா ரிசார்ட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. எனவே, சந்திப்புக்கு முன்னதாக கிம் நிர்ணயித்த அதிகாரிகள் அங்கு சென்று அதன் பாதுகாப்பு ஏற்பாட்டைக் கண்காணிக்க விருக்கிறார்கள்.

    இந்நிலையில், சிங்கப்பூரில் நடக்க உள்ள சந்திப்பின் போது தாம் கொலை செய்யப்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கடந்த ஞாயி்றன்று தனது ராணுவ தளபதிகள் மூவரை திடீரென மாற்றினார்.

    மேலும், தென்கொரியாவிலும் சில நபர்கள் தன்னை கொல்ல தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாக கிம் ஜாங் அன்னுக்கு செய்தி கிடைத்துள்ளதும் அவரது உயிர் பயத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து, சந்திப்பு நிகழும் செண்டோசா ரிசார்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே, செண்டோசா ரிசார்ட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த இரண்டு தென்கொரிய நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #KimJongUn #DonaldTrump #SingaporeSummit
    ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சீனா செல்லும் பிரதமர் மோடி, நாளை அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசுகிறார். #NarendraModi #XiJinping
    புதுடெல்லி:

    ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் சீனா, ரஷியா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்று உள்ளன. இந்தியாவும், பாகிஸ்தானும் கடந்த ஆண்டுதான் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக சேர்ந்தன.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது மாநாடு சீனாவின் ஷான்டோங் மாகாணத்தில் உள்ள கிங்தாவோ நகரில் நாளை (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது, இந்த பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

    மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களுக்கு நாளை மாலை ஜின்பிங் விருந்து அளிக்கிறார். இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் நாளை அவர் ஜின்பிங்கை தனியாக சந்தித்து பேசுகிறார்.

    சீனாவில் உள்ள வூஹன் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் மோடியும், ஜின்பிங்கும் சாதாரண முறையில் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். அதன்பிறகு இப்போது அவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்கள்.

    மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிற நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து பேச இருக்கிறார்.

    மேற்கண்ட தகவல்களை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    ஆனால் பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் உசைனை பிரதமர் மோடி சந்தித்து பேசுவாரா? என்பது பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை.   #NarendraModi #XiJinping #Tamilnews 
    பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் சந்தித்து பேசினார். #TTVDinakaran #VKSasikala
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

    சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் நேற்று பெங்களூரு வந்தார். காலை சுமார் 11.30 மணிக்கு சிறையின் உள்ளே சென்ற டி.டி.வி. தினகரன், சசிகலாவை சந்தித்துவிட்டு மதியம் சுமார் 1 மணிக்கு வெளியே வந்தார். 
    தன்னுடைய அரசியல் எதிரி பா.ஜ.க. என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறிய நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று அவரை சந்தித்து பேசினார். #BJP #Amitshah #UddhavThackeray
    மும்பை:

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தோல்விக்கு மேல் தோல்வி ஏற்பட்டு வருகிறது.

    சிவசேனாவுக்கு ஆதரவாக இருந்த மாநில கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக கூட்டணியில் இருந்து வெளியேறியது தான் இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

    அடுத்த ஆண்டு (2019) பாராளுமன்றத்துக்கு தேர்தல் வர உள்ள நிலையில் தற்போதைய நிலை நீடித்தால் அதிக இடங்களில் வெற்றி பெற இயலாது என்ற அபாய நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டுள்ளது.

    எனவே, இந்த அபாயத்தை முன்கூட்டியே சரிப்படுத்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் பழைய கூட்டணி கட்சிகளை மீண்டும் அரவணைத்துச் செல்லும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார்.

    இதன் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவுடன் இணக்கமாக செல்ல பா.ஜ.க. தீர்மானித்துள்ளது. இதற்காக அமித்ஷா இன்று மகாராஷ்டிரா மாநிலம் சென்றார். மும்பையில் உள்ள சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயை அவரது வீட்டில் அமித்ஷா சந்தித்து பேசினார். அவருடன் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் முக்கிய பிரமுகர்களும் சென்றனர்.

    இதுதொடர்பாக பாஜகவினர் கூறுகையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அமித்ஷா இன்று சந்தித்தார். இந்த 
    சந்திப்பின் மூலம் இரு கட்சிகளுக்கு இடையிலான விரிசல்கள் களையப்படும். மேலும், தொடர்ந்து இதுபோன்ற சந்திப்புகள் அமையவுள்ளன என தெரிவித்துள்ளனர். #BJP #Amitshah #UddhavThackeray
    ×