search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lankan Tamils"

    • மீண்டும் சிறப்பு முகாம் எனும் கொடூரம் அவர்களது வாழ்க்கையில் அரங்கேறும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
    • இன்றைய நாள்வரை அவர்கள் விரும்பும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு எந்தவித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக சிறையில் 32 ஆண்டு கால நீண்ட சிறை வாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்கள் ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், முருகன், சாந்தன் ஆகியோர் 11.11.2022 அன்று சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டிற்கு அனுப்பும்வரை நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் உடல்நலக் குறைவால் மரணமடைந்து உள்ளது, தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    32 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை இழந்தவர்கள், விடுதலைக் காற்றை சுவாசிக்கப் போகிறோம் என்று பெருமூச்சு விடும்பொழுது, மீண்டும் சிறப்பு முகாம் எனும் கொடூரம் அவர்களது வாழ்க்கையில் அரங்கேறும் என்று சற்றும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

    முகாமில் அடைக்கப்படுவதற்கு முன்பே கூட, எந்த நாட்டிற்கு செல்லப்போகிறீர்கள் என்று அவர்களுடைய விருப்பத்தை அரசு அதிகாரிகள் கேட்டபொழுது, அவர்கள் இலங்கை சென்றால் ஆபத்து மற்றும் தங்களுக்கு அங்கு வாழ்வாதாரம் எதுவும் இல்லை என்றும், அதனால் வெளிநாடுகளில் வாழும் தங்களுடைய குடும்பத்தினருடன் செல்ல விரும்புவதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால், இன்றைய நாள்வரை அவர்கள் விரும்பும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு எந்தவித முடிவும் எடுத்ததாகத் தெரியவில்லை.

    இனியாவது, மீதமுள்ள மூன்று பேரின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்து, கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு தவறான சிகிச்சையில் ஒரு கண்ணில் பார்வையை இழந்த ஜெயகுமார் மற்றும் உடல்நலக் குறைவால் அவதியுறும் ராபர்ட் பயாஸ் மற்றும் முருகன் ஆகியோரது கடைசி காலத்தில், எஞ்சிய வாழ்நாளை அவர்களுடைய குடும்பத்தினருடன் வசிப்பதற்கு, திருச்சி முகாமில் தனிமைச் சிறையில் இருந்து அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இந்திய வெளியுறவுத் துறையையும், தி.மு.க. அரசின் முதலமைச்சரையும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
    • முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.

    திருச்சி:

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பின்னர் கடந்த 2022 நவம்பர் 11-ந் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் இலங்கை தமிழர்கள் என்பதால் இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்க ப்பட்டது.

    இந்த நிலையில் இவர்கள் சிறப்பு முகாமில் காவல்துறை தங்களை சுதந்திரமாக இருக்கவிடாமல் சித்ரவதை செய்வதாக அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் தங்களை உடனடியாக சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி, முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர் கால வரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில்

    'ராபர்ட் பயஸ் மயக்கமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக' கடந்த 2 நாட்களுக்கு முன் அவரை காணச் சென்ற வழக்கறிஞர் புகழேந்தி குற்றம்சாட்டினார்.

    இந்த நிலையில் முருகன் மனைவி எஸ். நளினி தமிழக அரசின் தலைமைச் செயலர், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உருக்கமான ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

    நானும் எனது கணவர் முருகனும் கடந்த 11-11-2022 அன்று உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டோம். அதன் பின்னர் எனது கணவரை அவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்கள் சிறப்பு முகாமில் அடைத்துவிட்டனர்.

    சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டது முதல் எனது கணவர் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறார்.

    எனது கணவர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரிந்தும் இதுவரை அவரை இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் சென்று பாஸ்போர்ட் விண்ணப்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சிறையில் இருந்து எனது கணவர் விடுதலை ஆனாலும் தற்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளார். சிறப்பு முகாமிற்குள் எனது கணவர் நடைபயிற்சி கூட செய்ய அனுமதிப்பதில்லை.

    எந்தவித விளையாட்டும் விளையாட அனுமதிப்பதில்லை. மேலும் எனது கணவர் மட்டும் மற்ற முகாம் வாசிகளை பார்க்கவோ, பேசவோ, முடியாத அளவில் தனியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    அவர் முன்பு அடைக்கப்பட்டு இருந்த வேலூர் சிறையை விட இந்த சிறப்பு முகாம் கொடுமையானதாக இருக்கிறது.

    இந்த சிறப்பு முகாமில் முறையான உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிறப்பு முகாமில் இறந்துவிட்டார்.

    அவர் தனக்கு மாத்திரை வேண்டும் என்று கேட்ட போது உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கொடுக்கவில்லை. ஏற்கனவே இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி எனது கணவர் உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள்.

    எனது கணவரை கடந்த 5-ம் தேதி நான் முகாமில் சந்தித்தபோது அவர் உடல் மெலிந்து 15 கிலோ எடை குறைந்து காணப்பட்டார்.

    எனது கணவர் இன்றுடன் 12 நாட்கள் உணவு உட்கொள்ளாத நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளார்.

    மேலும் தற்போது எனது கணவர் சிறப்பு முகாமில் மயங்கிய நிலையில் உள்ளதாகவும் அவருக்கு முகாமில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் அவரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும் என அஞ்சுகிறேன் எனவே இந்த கடிதத்தை கருணையுடன் பரிசீலனை செய்து எனது கணவர் உயிரை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    • இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றனர்.
    • அகதிகள் என்ற வார்த்தையை எடுத்து விட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே லெம்பலக்குடியில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் அவர்களுக்கென புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு புதிய குடியிருப்புகளை திறந்துவைத்தார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் முகாம்கள் 106 இருக்கின்றன. அந்த முகாம்களின் உள்ள 20 ஆயிரம் குடும்பங்களுக்கும் அதில் உள்ள 60 ஆயிரம் மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அகதிகள் என்ற வார்த்தையை எடுத்து விட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு.

    கடல் தான் நம்மை பிரித்துள்ளது.தமிழர் என்ற உறவு நம்மை எப்போதும் இணைத்துதான் உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசிடம் அனுப்பியுள்ளோம். முதல் கட்டமாக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 200 பேரை தேர்வு செய்து இலங்கை அரசு கொடுக்கப்பட்ட குடியுரிமை மூலம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

    மீண்டும் தமிழ்நாட்டின் சார்பில் முதல் கட்டமாக வந்தவர்களுக்கு உரிமைகள் வழங்குவதற்கான குழு அமைத்து சட்டத்துறை அமைச்சர் ஆலோசனைப்படி சட்ட குழு ஒன்று அமைத்து தீர்வு காணப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்ததை முடிப்பவர். அவர் எடுக்கின்ற எல்லா முயற்சிகளும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற முயற்சிக்கு மக்கள் ஆதரவாக இருக்கின்றனர். அதேபோல் இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றனர்.

    எதிர்காலத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமையை பெற்று தரவும். இலங்கை தமிழர்களில் உள்ள மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கும். வேளாண்மை கல்லூரியில் சேர்வதற்கும் அனுமதி வழங்கும்.

    மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கு தான் சட்ட சிக்கல் இருக்கின்றது. அதை மிக விரைவில் மத்தியில் அரசியல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நீட் தேர்வு என்ற அரக்கனை அகற்றிவிட்டு அதில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் விடிவுகாலம் வரும்போது நம்மோடு இருக்கின்ற இலங்கை தமிழர்களுக்கும் விடிவுகாலம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பிடிபட்ட 4 பேரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    போரூர்:

    விருகம்பாக்கம், பகுதியில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடப்பதாக தி.நகர் துணை கமிஷனர் அங்கித் ஜெயினுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுப்படி சப் - இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான தனிப்படை போலீசார் விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் நேற்று மாலை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது சாலையோரம் சொகுசு கார் ஒன்று நின்று நீண்ட நேரம் சந்தேகத்திற்கிடமாக கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த காரில் இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி சோதனையிட்டனர். இதில் காரில் இருந்த ஒரு பையில் ரூ.1 கோடி ரொக்கப் பணம் இருந்தது. மேலும் விசாரணையில் காரில் இருந்தவர்கள் இலங்கை தமிழர் கமலநாதன், மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன், மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திகேயன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரிந்தது.

    அவர்களிடம் பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. இதையடுத்து ரூ.1 கோடியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பிடிபட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.1 கோடி ரொக்கப்பணம் எப்படி கிடைத்தது?அதனை எங்கிருந்து யாருக்கு கொண்டு செல்கிறார்கள்? இதில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என்பது குறித்து வருவாய் ஆய்வாளர் சவிதா முன்னிலையில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். பிடிபட்ட 4 பேரும் தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. பிடிபட்டது ஹவாலா பணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1கோடியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களும் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரணில் விக்ரமசிங்கே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
    • தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    கொழும்பு:

    இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த சட்ட திருத்தம் முழுமையாக அமல்படுத்தப் படவில்லை.

    இதற்கிடையே கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிடம், இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்தவும், மாகாணங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    இதற்கிடையே இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இதில் தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் எதிர்க்கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தை ஜே.வி.பி. உள்ளிட்ட சிங்கள கட்சிகள் புறக்கணித்துள்ளன. இந்திய வம்சாவளி மலையகத் தமிழர் கட்சிகள், தமிழ் கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.

    இலங்கை பாராளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா கூறும்போது கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் குறித்து எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் மக்களின் நலனுக்காக கூட்டத்தில் கலந்து கொள்வோம்.

    இது ஒரு உண்மையான முயற்சியாக இல்லாமல் அரசியல் வித்தை என்று நிரூபிக்கப்பட்டால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்யும் உரிமை எங்களுக்கு உள்ளது என்றார்.

    முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் பல எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை.

    • கடந்த வாரம் இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
    • இலங்கை தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று 1987-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஒப்பந்தம் மூலம் இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.

    அந்த சட்டதிருத்தம் தமிழர் பகுதியான வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கவும், தமிழர்களுக்கு அதிகார பரவல் அளிக்கவும் வகை செய்கிறது. ஆனால் அந்த சட்டதிருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அதை அமல்படுத்தக்கோரி நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கடந்த வாரம் இந்தியாவுக்கு 2 நாட்கள் பயணமாக வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது ஒருங்கிணைந்த இலங்கையின் வளர்ச்சிக்காகவும், இலங்கை தமிழர்கள் கண்ணியத்துடன் வாழவும், அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13-வது சட்டத் திருத்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்தவும், மாகாணங்களுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்கேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

    இதுகுறித்து ரணில் விக்ரமசிங்கே கூறும்போது, தங்கள் நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளிடம் ஆலோசனை நடத்தி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

    இந்நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாளை அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டம் அதிபரின் செயலகத்தில் நடக்கிறது.

    இதுகுறித்து அதிபரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில், அதிபர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் அதிபர் செயலகத்தில் நாளை நடைபெறும். இதில் தேசிய நல்லிணக்கத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்படும். இதில் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்ட அனைத்து கட்சிகளும், சுயேட்சைகளும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கான தேசிய நல்லிணக்க திட்டம் பற்றி எடுத்துரைக்கப்படும்.

    • இலங்கை தமிழர்களை அகதிகளாக அங்கரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
    • வெளியே சென்று வேலை செய்தால் மட்டுமே தொடர்ந்து இங்கு வாழ முடியும்.

    ராமநாதபுரம்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருட்களின் தட்டுப்பாடு, விலையேற்றம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் இன்று வரை 200-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்து மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களை தற்போது வரை அகதிகளாக பதியாமல் அவர்களுக்கு தமிழக அரசு உணவு, தங்குமி டம் மட்டும்வழங்கி வருகிறது.இலங்கையில் இருந்து வந்துள்ள தங்களை அகதிகளாக பதிய வேண்டும் என இலங்கை தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இது குறித்து முகாமில் உள்ள தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டபோது, மத்திய அரசு சார்பில் தற்போது வரை அகதிகளாக பதிவு செய்ய எந்த விதமான அதிகாரப்பூர்வ உத்தரவும் வரவில்லை. எனவே மனிதாபிமான அடிப்படையில் தான் அவர்களை தற்போது இங்கு தங்க வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதே நிலை நீடித்தால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த மாதம் 24-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு உறுப்பினர்கள் அண்ணா துரை, அருள், கருணாநிதி, மனோகரன், ராமலிங்கம், விசுவநாதன் உள்ளிட்டவர்கள் வந்து இருந்தனர். பின்னர் இந்த குழுவினர் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமிற்கு சென்றனர்.

    அங்கு வசிக்கக்கூடிய இலங்கை தமிழர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். இலங்கை தமிழர்களை அகதிகளாக பதிவு செய்ய கலெக்டருக்கு இக்குழு பரிந்துரை செய்தது.

    தற்போது புதியதாக இலங்கையில் இருந்து வரும் மக்களுக்கான மாதாந்திர உதவித்தொகை பெற்றுத்தர இலங்கை தமிழர் நல ஆணையரிடம் குழுவினர் பரிந்துரை செய்யும் எனவும் தெரிவித்தனர். இருப்பினும் ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இதுகுறித்து மண்டபம் இலங்கை தமிழர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள புதிதாக வந்த இலங்கை தமிழர்கள் "மாலைமலர்" நிருபரிடம் கூறியதாவது:-

    இலங்கையில் நாங்கள் பட்ட கஷ்டத்தை காட்டிலும் இங்கு நிம்மதியாக இருக்கிறோம். இங்கு வந்த பிறகுதான் பிள்ளைகளை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. எங்களை வெளியே வேலைக்கு செல்ல அனுமதிக்குமாறு அதிகாரிகளை கேட்கிறோம். ஆனால் எங்களை வெளியே செல்ல அனு மதிக்கவில்லை. எங்களை வேலைக்கு போக அனுமதித்தால் தானே எங்கள் பிள்ளைகளை நன்றாக வளர்க்க முடியும். தொடர்ந்து பதிவு இல்லாமல் எங்களால் எத்தனை மாதம் இப்படி இருக்க முடியும். இலங்கையை விட இங்கு காய்கறி, அத்தியாவசிய பொருட்களின் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. இருப்பினும் நாங்கள் வந்த நாள் முதல் இதுவரை வீட்டில் சமைக்கவில்லை. எங்களுக்கு 3 நேரமும் உணவு வழங்கப்படு கிறது. அந்த உணவை சாப்பிட்டு வருகிறோம். தற்போது அகதிகள் முகாமில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளது. இதுகுறித்து நாங்கள் அதிகாரியிடம் கூறியபோது, விரைவில் சரி செய்து தருவதாக தெரிவித்த னர். ஆனால் இதுவரை சரி செய்யவில்லை. எங்களுக்கு பாய், மின்விசிறி, தண்ணீர் குடம், உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் எங்களுக்கு எப்படி போதுமானதாக இருக்கும். எங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த நாங்கள் வெளியே சென்று வேலை செய்தால் மட்டுமே தொடர்ந்து இங்கு வாழ முடியும். எனவே எங்களை உடனடியாக அகதிகளாக பதிவு செய்ய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்
    • விரைந்து கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சி பகுதியில் இலங்கை தமிழர்களுக்காக ஊராட்சி வளர்ச்சி துறையின் சார்பாக ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பில் 76 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த பணிகளை திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் மின்னூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் சின்ன பள்ளிக்குப்பம் கிராம இலங்கை தமிழர்களுக்காக ரூ.8 கோடியில் மதிப்பில் 160 வீடுகள் கட்டும் பணிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.

    வீடுகளின் கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை இயக்குனர் செல்வராஜ் உதவி பொறியாளர் முகேஷ் குமார், மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கரீம் ஆம்பூர் மகாலட்சுமி உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் பாய்ச்சல்
    • தரமாக கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள மேல் மொணவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இந்த பணிகள் தற்போது நடந்து வருகிறது. இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கட்டுமான பணிகளில் எந்த காரணம் கொண்டும் தரம் குறைவாக இருக்கக்கூடாது. தரமாக கட்டி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இது குறித்து கலெக்டர் கூறுகையில்:-

    மேல் மொணவூரில் இலங்கை தமிழர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டும் பணிகளை கடந்த ஜூலை மாதம் முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    தற்போது 5 தொகுப்புகளாக 220 வீடுகள் கட்டப்படுகிறது. இதில் 144 வீடுகள் ஆரம்ப கட்டப் பணிகள் நிறைவடைந்து விட்டன. மேலும் சில வீடுகள் அதனையும் தாண்டி பணிகள் நடந்து வருகிறது.

    தீபாவளி பண்டிகையால் கடந்த 5 நாட்களாக கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இன்று முதல் மீண்டும் பணிகள் நடக்கிறது.

    இதில் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். வெளியூர் சென்ற அவர்கள் விரைவில் திரும்புவார்கள். அதன் பிறகு முழுமையாக பணிகள் நடைபெறும். இங்கே சாலை மற்றும் கால்வாய் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி கால்வாய் மற்றும் சாலை வசதிகள் அமைத்து தரப்படும்.

    மேலும் ஏற்கனவே உள்ள இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதிகளிலும் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    உள் நோக்கத்துடன் வதந்தி

    வாரம் ஒரு முறை கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப்படும். சமூக வலைதளங்களில் இலங்கை தமிழர் குடியிருப்புகள் தரம் இல்லாமல் கட்டப்படுவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். இதில் உள்நோக்கம் உள்ளது. பிப்ரவரி, மார்ச் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும்என்றார்.

    இலங்கையில் தமிழர்கள் அனுபவிக்கும் பிரச்சினையை எழுப்புவோரை, விடுதலைப்புலி ஆதரவாளர்களாக முத்திரை குத்துவதாக சமீபத்தில் பதவி விலகிய தமிழ் பெண் மந்திரி விஜயகலா மகேஸ்வரன் கூறினார். #SriLanka #LTTE #Vijayakala
    கொழும்பு:

    இலங்கை வடக்கு மாகாணத்தில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகலா மகேஸ்வரன் (வயது 45), குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தார். பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மந்திரி சபையில் இருந்த ஒரே தமிழ் பெண் மந்திரியான விஜயகலா கடந்த வாரம் கொழும்புவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

    அப்போது அவர், ‘வடக்கு மாகாணத்தில் தற்போது குற்ற செயல்கள் அதிகரித்து இருப்பதை பார்க்கும் போது, விடுதலைப்புலிகள் மீண்டும் வரவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது’ என்று கூறியதாக தகவல் வெளியானது. இது இலங்கை அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

    விஜயகலாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சிங்கள எம்.பி.க்கள், அவர் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்றத்தில் போர்க்கொடி தூக்கினர். மேலும் அவரது சொந்த கட்சியிலும் எதிர்ப்பு கிளம்பியது.

    எனவே இது குறித்து விசாரணை நடத்துமாறு கட்சித்தலைவரும், பிரதமருமான ரனில் விக்ரமசிங்கே கேட்டுக்கொண்டார். மேலும் விஜயகலாவின் கருத்து அரசியல் சாசனத்துக்கு எதிரானதா? என அட்டார்னி ஜெனரலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இவ்வாறு தனது கருத்துக்கு எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து விஜயகலா மகேஸ்வரன், கடந்த 5-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.



    ராஜினாமா நடவடிக்கைக்குப்பின் முதல் முறையாக, வடக்கு மாகாணத்தில் நேற்று முன்தினம் நடந்த கூட்டம் ஒன்றில் விஜயகலா பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஒருவர் பேசினால், அவரை விடுதலைப்புலியாக தெற்கு (சிங்களர்கள்) பார்க்கிறது. விடுதலைப்புலி ஆதரவாளராகவே அவர்களை முத்திரை குத்துகின்றனர். நான் வடக்கு மாகாண மக்களின் மனதில் இருப்பதைத்தான் பேசினேன். அவர்களுக்காகத்தான் எனது பதவியை ராஜினாமா செய்தேன்’ என்றார்.

    ராஜபக்சேவின் ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட தற்போது தமிழர்களின் நிலை மேம்பட்டு இருப்பதாக கூறிய விஜயகலா, தனது முயற்சிகளுக்கு எதிர்ப்பு வந்தாலும், மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் தெரிவித்தார். #SriLanka #LTTE #Vijayakala
    ×