search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sri vara sidhi vinayagar"

    • விநாயகர் ஆலயத்தில் முற்றிலும் வித்தியாசமானது `சத்திய பிரமாணம்' என்ற வழிபாடாகும்.
    • காணிப்பாக்கம் விநாயகர் ஆலயத்தில் மட்டுமே இப்படி சத்தியம் செய்யும் வழிபாடு நடத்தப்படுகிறது.

    காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் எத்தனையோ விதமான வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இதில் முற்றிலும் வித்தியாசமானது `சத்திய பிரமாணம்' என்ற வழிபாடாகும்.

    அதாவது ஒருவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வரசித்தி விநாயகர் முன்பு சூடத்தை அணைத்து செய்து கொடுக்கும் சத்தியம் ஆகும். இதைத்தான் சத்திய வழிபாடு என்கிறார்கள்.

    இந்தியாவில் எந்த ஒரு ஆலயத்திலும் கருவறை கடவுளை நீதிபதியாக கருதி இத்தகைய சத்திய பிரமாணம் செய்யப்படுவதாக தெரியவில்லை. காணிப்பாக்கம் விநாயகர் ஆலயத்தில் மட்டுமே இப்படி சத்தியம் செய்யும் வழிபாடு நடத்தப்படுகிறது.

    விநாயகர் முன்பு சத்தியம் செய்யும் பழக்கம் இத்தலத்தில் இன்று, நேற்று தோன்றியது அல்ல. ஆதி காலத்தில் இருந்தே நடந்து வருகிறது.

    தற்போது நாட்டில் எவ்வளவோ அறிவியல், நவீன மாறுதல்கள் வந்துவிட்டன. அத்தனை மாற்றங்களையும் மீறி இந்த சத்தியம் வழிபாடு இங்கு தினமும் நடந்து கொண்டிருக்கிறது.

    பொதுவாகவே நமது உடமைகளில் ஏதாவது ஒன்று திருடு போகும் போது, நம்மையும் அறியாமல் சிலர் மீது சந்தேகம் வரும். அவர்களிடம் கேட்டால், `அய்யய்யோ... உங்க பொருளை நான் எடுக்கவில்லை இது அந்த கடவுள் மேல சத்தியம்' என்பார்கள்.

    சிலர் எடுத்த எடுப்பிலேயே `சாமி சத்தியமா நான் திருட வில்லை' என்பார்கள். சாமி மேலே சத்தியம் செய்து விட்டானே என்று நாம் விட்டு விடுவோம்.

    ஆனால் ஆந்திர மாநில மக்கள் குறிப்பாக சித்தூர் பகுதி மக்கள் அப்படி விட்டு விட மாட்டார்கள். `வா.. காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் முன்பு சத்தியம் செய்து சொல்' என்று அழைத்து சென்று விடுவார்கள். விநாயகர் முன்பு சூடத்தை அணைத்து சத்தியம் செய் என்பார்கள்.

    இப்படி சத்தியம் செய்வதற்காகவே காணிப்பாக்கம் விநாயகர் கோவிலுக்கு நிறைய பேர் வருகிறார்கள். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தினமும் மாலை 5 மணி முதல் 5.30 மணிவரை நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்படுகிறது.

    குற்றம் சொல்பவரும், குற்றம் சாட்டப்பட்டவரும் இருவரும் இந்த சத்தியம் செய்ய நேரில் வரவேண்டும். கோவிலுக்குள் நுழையும் முன்பு இருவரும் கோவில் எதிரில் உள்ள குளத்தில் நீராட வேண்டும்.

    பிறகு ஈர உடையுடன் கோவிலுக்குள் செல்ல வேண்டும். அவர்கள் சென்றதும், விநாயகருக்கு பூஜை செய்பவர் வெளியில் வந்து விடுவார்.

    குற்றச்சாட்டு சொன்ன வரும், குற்றச்சாட்டுக்கு உள்படுத்தப்பட்டவரும் இருவர் மட்டுமே உள்ளே நிற்பார்கள். `என் பொருளை எடுக்க வில்லை என்று சத்தியம் செய்' என்பார். மற்றவர் சத்தியம் செய்வார்.

    விநாயகர் முன்பு நடைபெறும் இந்த சத்திய வழிபாடு ஒவ்வொருவருக்கும் ஓரிரு நிமிடங்களில் முடிந்து விடும். வெறும் சத்தியம்தானே என்று இந்த வழிபாட்டை யாரும் கருதுவதில்லை.

    ஏனெனில் வரசித்தி விநாயகர் முன்பு பொய் சத்தியம் செய்தால் 40 நாட்களுக்குள் அவர் கடுமையாக தண்டித்து விடுவார் என்று மக்களிடம் நம்பிக்கை உள்ளது.

    காணிப்பாக்கம் விநாயகர் முன்பு பொய் சத்தியம் செய்த பலரும் குறிப்பிட்ட நாட்களுக்குள் பாதிக்கப்பட்டு விடுகிறார்களாம். பொய் சத்தியம் செய்தவர்களுக்கு மன நலம் பாதிக்கும் அல்லது கை, கால்கள் பாதிக்கப்படும். சிலர் விநாயகர் கோபத்துக்கு உள்ளாகி மரணம் கூட அடைந்துள்ளார்களாம். இது இன்றும் நடப்பதாக கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

    காணிப்பாக்கம் ஊரைச் சேர்ந்த ஒரு இளம் பெண் வரசித்தி விநாயகர் முன்பு பொய் சத்தியம் செய்து விட்டு மன நலம் பாதிக்கப்பட்டு அலைவதாக கோவில் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். காலம், காலமாக நடந்து வரும் இந்த சத்தியம் வழிபாட்டுக்கு தற்போது வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

    ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்திலும் இந்த விநாயகர் முன்பு சத்தியம் செய்யும் பழக்கம் இருந்தது. ஆங்கிலேயே அதிகாரிகள் இதில் மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தனர்.

    கோர்ட்டுகளில் கூட `நான் எந்த தவறும் செய்யவில்லை. காணிப்பாக்கம் விநாயகர் மீது சத்தியம் செய்துள்ளேன்' என்று சொன்னால், அதை சித்தூர் மாவட்ட கோர்ட்டுகள் ஏற்றுக் கொண்டனவாம். இதற்கு ஆதாரமான ஆவணங்கள் இப்போதும் இருப்பதாக சொல்கிறார்கள்.

    5.30 மணிக்கு இந்த பூஜை முடிந்ததும் விநாயகருக்கு பரிகார பூஜைகள் செய்யப்படும். பொய் சத்தியம் செய்பவர்களால் விநாயகர் கடும் ஆவேசம் அடைந்து விடுவார் என்றும் அவரை சாந்தப்படுத்த பால் அபிஷேகம் நடத்தப்படுவதாகவும் கூறினார்கள்.

    பிறகு பரிகார பூஜைகள் செய்து விநாயகரை அலங்காரம் செய்து நைவேத்தியம் படைத்து மாலை 5.45 மணிக்கு வழிபாடு நடத்துவார்கள். தினமும் மாலை இந்த வழிபாடு நடத்தப்படுகிறது.

    தினமும் சராசரியாக 20 பேர் விநாயகர் முன்பு சத்தியம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    அவ்வையாரின் விநாயகர் அகவல்

    சீதக் களபச் செந்தா மரைப்பூம்

    பாதச் சிலம்பு பலவிசை பாடப்

    பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

    வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

    பேழமை வயிறும் பெரும்பாரக் கோடும்

    வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

    அஞ்சு கரமும் அங்குச பாசமும்

    நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்

    நான்ற வாயும் நாலிரு புயமும்

    மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

    இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்

    திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்

    சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான

    அற்புதம் நின்ற கற்பகக் களிறே!

    முப்பழ நுகரும் மூஷிக வாகன!

    இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்

    தாயா யெனக்குத் தானெழுந் தருளி

    மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்

    திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்

    பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

    குருவடி வாகிக் குவலயந் தன்னில்

    திருவடி வைத்துத் திறமிது பொருளென

    வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்

    கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே

    உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

    தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி

    ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

    இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்

    கருவிக ளடுங்கும் கருத்தினை யறிவித்(து)

    இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

    தலமொரு நான்கும் தந்தெனக் கருளி

    மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே

    ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

    ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி

    ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

    பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

    இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

    கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

    மூன்றுமண்டலத்தின் முட்டிய தூணின்

    நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

    குண்டலி யதனிற் கூடிய அச¬ப

    விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

    மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்

    காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

    அழுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

    குமுத சகாயன் குணத்தையும் கூறி

    இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

    உடல்சக் கரத்தின் உறுப்¬பயும் காட்டிச்

    சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்

    எண் முகமாக இனிதெனக் கருளிப்

    புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

    தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்

    கருத்தினில் கபால வாயில் காட்டி

    இருத்தி முத்தி யினிதெனக் கருளி

    என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

    முன்னை வினையின் முதலைக் களைந்து

    வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

    தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித் (து) இருள்வெளி

    யிரண்டுக் (கு) ஒன்றிடம் என்ன

    அருள் தரும் ஆனந்தத் (து) அழுத்தியென் செவியில்

    எல்லை யில்லா ஆனந் தம் அளித் (து)

    அல்லல் களைந்தே அருள் வழி காட்டிச்

    சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்

    சித்தத்தின் உள்ளே சிவலங்கம் காட்டி

    அணுவிற் (கு) அணுவாய் அப்பாலுக் (கு) அப்பாலாய்க்

    கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

    வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்

    கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

    அஞ்சக் கரத்தின் அரும் பொருள் தன்னை

    நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

    தத்துவ நிலையைத் தந்தென யாண்ட

    வித்தக விநாயக விரைகழல் சரணே!

    அவ்வையார் என்றால் கூடவே விநாயகரும் நம் நினைவுக்கு வந்து விடும் அளவுக்கு அவ்வையாரில் விநாயக பக்தி மணம் படர்ந்து வீசுவதைக் காணலாம்.

    இந்த பாடல்கள் உட்பொருள் புரிபவர் ஞானம் சகலமும் அடைந்திட்டார் என்றே சொல்லலாம். காஞ்சி பரமாச்சாரியார் தம்மிடம் வருபவர்களுக்கு இப்பாடலைப் பாடி விநாயகரின் அருள் பெறும்படி அடிக்கடி கூறுவார்.

    ×