search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "St Thomas mount accident"

    பரங்கிமலை ரெயில் விபத்து தொடர்பாக 25-க்கும் மேற்பட்டவர்களிடம் ரெயில்வே ஊழியர்களிடம் பாதுகாப்பு கமிஷனர் விசாரணை நடத்தினார். #TrainAccident #chennai #StThomasMount
    சென்னை:

    சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் சென்ற மின்சார ரெயில் பரங்கிமலை ரெயில் நிலையத்திற்குள் நுழையும் போது ரெயில் படிக்கட்டில் பயணம் செய்த 4 பேர் பக்கவாட்டு சுவரில் மோதி பலியானார்கள்.

    கடந்த 24-ந்தேதி நடந்த இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2 கால்களை இழந்த மற்றொரு வாலிபரும் உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

    சம்பவ இடத்தை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ரெயில் விபத்து குறித்து 30-ந்தேதி விசாரணை நடத்தப்படும் என்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தகவலை தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் விசாரணை இன்று நடைபெற்றது.

    சென்னை ரெயில்வே அலுவலகம் 5-வது தளத்தில் உள்ள கோட்ட மேலாளர் கருத்தரங்க அறையில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தலைமையில் விசாரணை நடந்தது. தலைமை பாதுகாப்பு அதிகாரி மேதா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணையின் போது இருந்தனர்.

    ரெயில் விபத்தை பார்த்தவர்கள், அந்த ரெயிலில் பயணம் செய்தவர்கள் என 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தகவல்களை கூற வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தார்கள்.

    இதுதவிர ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ரெயில் டிரைவர், கார்டு, நிலைய மேலாளர், பொறியாளர் என 25-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் உள்ள தடுப்பு சுவர்தான் விபத்திற்கு காரணம். அதனை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    நிலையத்திற்கு ரெயில் வந்த வேகத்தின் அளவு என்ன? பக்கவாட்டு சுவருக்கும்-ரெயில் பெட்டிக்கும் உள்ள இடைவெளி என்ன என்பது குறித்தெல்லாம் ஏற்கனவே பாதுகாப்பு ஆணையர் தகவல்களை திரட்டியுள்ளனர்.

    இன்று மாலை வரை நடைபெறும் விசாரணையை தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? பக்கவாட்டு சுவர் அகற்றப்படுமா என்பது தெரியவரும். #TrainAccident #chennai #StThomasMount

    ×