search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sterlite Panel File Report"

    ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 30-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #Sterlite #NGTPanel
    புதுடெல்லி:

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவை அமைத்தது. தமிழக அரசு கூறுவதுபோல் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு உள்ளதா? இல்லையா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.

    இந்த குழு ஆலையை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கருத்துக்களையும் கேட்டறிந்தது. வாய்மொழியாகவும், எழுத்துப் பூர்வமாகவும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்த நிலையில், ஆய்வுக் குழுவுக்கு அளிக்கப்பட்ட அவகாசம் வரும் 30ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ‘‘ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்’’ என சிறப்புக் குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.



    இந்த மனு இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவிற்கு நவம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளித்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.  நவம்பர் 30-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் வழக்கை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. #Sterlite #NGTPanel
    ×