search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strong protest"

    புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது. #PulwamaAttack #PakistanEnvoy
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில், பாதுகாப்பு படையினர் 40 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. 

    இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. நாட்டின் பாதுகாப்பு, காஷ்மீரில் உள்ள நிலைமை மற்றும் அங்கு எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.



    அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி, சர்வதேச சமூகத்தில் இருந்து பாகிஸ்தானை முற்றிலும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும், அனுகூலமான நாடு என பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றுவிட்டதாகவும், பாகிஸ்தானுக்கு இனி வர்த்தக ரீதியாக எந்த சலுகையும் வழங்கப்படமாட்டாது என்றும் ஜெட்லி கூறினார்.

    இந்நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹமூதுக்கு, வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே சம்மன் அனுப்பினார். இதையடுத்து, பாகிஸ்தான் தூதர், டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம், புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் கோகலே கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

    ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குழுக்கள் மற்றும் தனிநபர்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    புல்வாமா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தி பாதுகாப்பு படை வீரர்களை கொன்றதற்கு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். #PulwamaAttack #PakistanEnvoy
    ×