search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "strychnos potatorum"

    கலங்கல் நீரினைத் தூய்மைப்படுத்தும் திறன் தேற்றா எனப்படும் தேற்றாங்கொட்டைக்கு உண்டு என்பதே ஆகும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    நல்ல தண்ணீருக்காக நம் மக்கள் படும் அல்லல் என்பது பல இடங்களில் அன்றாட நிகழ்வாகிவிட்டது. இருக்கின்ற நீரும் மாசுடன் திகழ்வதால் அந்நீரினைத் தூய்மைப் படுத்துவதற்குப் பல ஆயிரங்கள் செலவிட்டுக் கருவிகளை வாங்கி வைத்துக்கொள்கிறோம். மேலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரினை விலைகொடுத்து வாங்கி அருந்தவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளோம். இன்று பரவும் பல நோய்கள் நீரின் மூலமே பரவுவதால் இத்தகு நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் அன்றைய மக்கள் ஆறுகள், குளங்கள், பொதுக் கிணறுகள் இவற்றிலிருந்தே குடிப்பதற்கு நீரை எடுத்துப் பயன்படுத்தி வந்தனர். அப்பொழுது நீர் அனைத்து இடத்திலுமே தூய்மையாகத்தான் இருந்தது. அன்றும் சில நீர்நிலைகளில் மாசுகள் இருக்கத்தான் செய்தன. அவற்றைப் போக்கியே மக்கள் குடிநீராகப் பயன்படுத்தினர். அந்த வகையில் கலங்கல் நீரினைத்தூய்மைப்படுத்திய பழந்தமிழர்களின் நுட்பத்தை இங்கு காண்போம்.

    ஆற்று நீர் இயல்பாக தூய்மையாகவேதான் இருக்கும். ஓடுகின்ற நீர் மணல்களுக்கு இடையே உருண்டு, திரண்டு ஓடும்பொழுது நீரிலுள்ள கசடுகள் மணலால் உறிஞ்சப்பட்டு ஆறுகளில் கலக்கின்ற மாசுகள் நீக்கப்பட்டு நீரானது தூய்மையடைகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற உலக அளவில் நீர்வளங்களைக் காப்பது, நீர் மாசுபடுவதை களைவது, குறித்து உலக நீரியல் வல்லுநர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் தமிழகத்தின் தொன்மைத்திறன் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பெற்றது.

    அது என்ன வெனில் கலங்கல் நீரினைத் தூய்மைப்படுத்தும் திறன் தேற்றா எனப்படும் தேற்றாங்கொட்டைக்கு உண்டு என்பதே ஆகும். அகரமுதலியில் இல்லம் என்பதற்கு வீடு, மனைவி, இல்வாழ்க்கை என்பதோடு தேற்றா மரம் என்ற பொருளும் கொள்ளப்பெறுகின்றது. தேற்றான் கொட்டை உடலை தேற்றும் குணம் கொண்டதாலும்,நீரைத் தெளிய வைப்பதாலும் தேற்றான் என்று சொல்லப்படுகிறது. பத்து லிட்டர் தண்ணீரில் இரண்டு தேற்றாங்கொட்டைகளைப்போட்டு வைத்தால் 2 மணி நேரத்தில் நீர் சுத்தமானதாகி விடும். இது தவிர இது மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் இருந்து தயாரிக்கப்படும் லேகியம் பசியைத்தூண்டி விடுகிறது.இதை சாப்பிட்டால் உடல் மெலிந்தவர்கள் தேறி விடுவார்கள்.

    ‘தேற்றாங்கொட்டையிட்டுத் தேற்று மைந்தரை’ எனத் தமிழ் மருத்துவர்கள் இதன் அருமையான மருத்துவப் பயன்களுக்குச் சான்றளித்துள்ளனர். வீட்டிலுள்ள கலங்கிய நீரானாலும் சரி, நிலக்கரிச் சுரங்கத்தில் கரிப்பொடி கலந்த நீரானாலும் சரி, நீரினைத்தெளியவைக்கும் பண்புடைய கொட்டை இதுவாகும். கண்மாய்களில் தேக்கிய நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் இடங்களில், தொன்றுதொட்டு நீரைத் தெளியவைக்க, சட்டியிலேயே தேற்றான்கொட்டையைத் தேய்ப்பது வழக்கம். சில நிமிடங்களில் நீர் தெளிந்துவிடும்.

    நீரில் மிதக்கும் கரித்துகள்கள் படிந்துவிடும். நிலக்கரிச் சுரங்கங்களில் நீரில் கலந்த நிலக்கரித் துகள்களைத் தனித்துப் பிரித்திட படிகாரத்துடன் சிறிது தேற்றாங் கொட்டைப் பொடியினையும் சேர்த்திடுவர். உடனடியாக துகள்களெல்லாம் படிந்திடும். நீரைத் தெளியவைக்கும் பண்பு இக்கொட்டையில் நச்சில்லா பொருட்கள் இருப்பதால் ஏற்படுகிறது.இன்று அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இதன் சிறப்பு சங்க நூலான கலித்தொகையின் 142ஆம் பாடலில் உவமையாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அப்பாடல்,

    இனைந்து நொந்து அழுதனள்: நினைந்து நீடு உயிர்த்தனள் எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி : எல் இரா நல்கிய கேள்வன் இவன் மன்ற! மெல்ல மணியுள் பரந்த நீர் போலத் துணிவாம் கலம்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போல் தெளிந்து நலம் பெற்றாள் நல்லெழில் மார்பனைச் சார்ந்து.

    என்பதாகும். இதன்பொருள் “என்னைத் துன்புறுத்தும் காமமும் ஊராரின் பழிச்சொல்லும் என் உயிரைக் காவடியாகக் கொண்டு இருபுறமும் பாரமாகத் தொங்கி என்னை நலிவுறச் செய்கின்றன. என் உயிரும் உடலும் மெலிகின்றன. யான் இறப்பதற்கு முன் என் துன்பத்தை நீக்குவீராக” என்று கூறினாள். வருந்தி அழுதாள் பகலும் இரவும் பயனின்றிக் கழிகின்றன என்று நெடிது நினைத்து, நொந்து பெருமூச்சுவிட்டாள்.

    அந்நிலையில் ஓர் இரவில் அவள் அருகில் அன்போடு அமர்ந்திருக்கும் ஒருவனைக் கண்டோம். அவன்தான் அவளுக்கு அன்பு செய்யும் தலைவன் போலும்! அவள் இவனது மிக்க அழகிய மார்பைத் தழுவி, தேற்றாங்கொட்டையினால் தெளிவிக்கப்பட்ட தண்ணீரைப் போலத் துன்பம் நீங்கி, நலம் பெற்றாள். யாமும் ரத்தினமும், அதன் ஒளியும் போல் இவர்கள் ஒருவரின் ஒருவர் வேறல்லர் என்று மெல்லத் தெளிந்து கொண்டோம் என்று கண்டோர்கள் கூறினர்.

    இத்தேற்றான் கொட்டையின் மருத்துவ குணமாக சரசுவதி மகால் நூலகம் வெளியிட்டுள்ள பதார்த்த குணபாடம் எனும் சித்த மருத்துவ நூலில் பிரமேகம், வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல் போன்ற நோய்களைக் குணமாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    மணி. மாறன், தமிழ்ப்பண்டிதர்,

    சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

    ×