search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student Ragging"

    சட்ட கல்லூரியில் ராகிங் தொடர்ந்து நீடிப்பதாலும், சரியான நடவடிக்கை எடுக்காததாலும், கவர்னர் பன்வாரிலால் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விளக்க அறிக்கை கேட்டு இருக்கிறார். #StudentRagging
    சென்னை:

    சென்னை அடையாறில் டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் உள்ளது. இதன் துணைவேந்தராக தம்மா சூரியநாராயண சாஸ்திரி பதவி வகித்து வருகிறார்.

    சட்டப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சட்டக் கல்லூரிகளில் ராகிங் கொடுமைகள் நடைபெற்று வருவது தமிழக கவர்னர் பன்வாரிலால் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சமீபத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ராகிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இரு பிரிவாக மோதிக் கொண்டார்கள். இதில் கே.கே.பிரசாந்த் என்ற மாணவர் தாக்கப்பட்டதில் அவரது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு விலகியது.

    இது தொடர்பாக மாணவரின் பெற்றோர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர். அதன் பேரில் இதுபற்றி விசாரிக்க ஆர்.சிங்காரவேலன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நாளை (சனிக்கிழமை) கூடி விசாரணை நடத்துகிறது.

    இதற்கிடையே இந்த குழுவில் இடம் பெற்ற சிண்டிகேட் உறுப்பினர்கள் ராகிங் தொடர்பான புகார்களை விசாரிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மாணவர் பிரசாந்த் தாக்கப்பட்டது தொடர்பாக வேளச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டு 6 மூத்த மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய 2 மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.



    இதே போல் மற்றொரு 2-ம் ஆண்டு மாணவர் கே. தனுஷ் என்பவரும் ராகிங் கொடுமைக்கு ஆளானார். இவரையும் இவரது நண்பரையும் மூத்த மாணவர்கள் சிலர் அவர்கள் தங்கி இருந்த அறைக்கு வரவழைத்து பீர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பி குடிக்க சொல்லி வற்புறுத்தி உள்ளனர். இதுபற்றியும் வேளச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக நடந்த ஒரு சம்பவத்தில் கடந்த ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவரை பரீட்சை எழுத விடாமல் தடுத்து இருக்கிறார்கள்.

    ராகிங் கொடுமை தொடர்ந்து நீடிப்பதாலும், சரியான நடவடிக்கை எடுக்காததாலும், கவர்னர் பன்வாரிலால் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரிடம் விளக்க அறிக்கை கேட்டு இருக்கிறார்.

    இந்த நிலையில் நாளை ராகிங் தொடர்பான விசாரணை குழு கூட்டம் நடைபெறுகிறது. #StudentRagging
    ×