search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suseenthiran temple"

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தெப்பத்திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், அலங்கார தீபாராதனை, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கங்காள நாதர் பிட்சாடனராக உலாவரும் நிகழ்ச்சி நடந்தது. காலை 9 மணிக்கு தட்டு வாகனங்களில் சாமி, அம்பாள், விநாயகர், அறம் வளர்த்த நாயகி அம்மாள் ஆகியோர் ரதவீதிகள் வழியாக உலா வந்து கோவிலை சென்றடையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பின்னர், சாமி வாகனங்கள் வெளியே வந்த போது போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து 9.45 மணிக்கு சாமியும், அம்பாளும் தேரில் எழுந்தருளினர். இதே போல் விநாயகர் இன்னொரு தேரிலும், சப்பரத்தில் அறம் வளர்த்த நாயகி அம்மனும் எழுந்தருளினார்கள். அதைத்தொடர்ந்து குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி வடம்பிடித்து தேரை இழுத்து தொடங்கி வைத்தார். இதில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி, வட்டப்பள்ளிமடம் ஸ்தானிகர் சர்மா, தெற்குமண் மடம் திலீபன் நம்பூதிரி, கோவில் பணியாளர்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

    தேரோடும் வீதியில் பக்தர்களுக்கு பானகாரம், மோர் ஆகியவை பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டது. ரதவீதிகளை சுற்றி வந்த தேர் பகல் 11.50 மணிக்கு நிலைக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து மாலையில் சமய சொற்பொழிவு, நள்ளிரவு சப்தாவர்ண நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.

    10-ம் நாள் திருவிழாவான இன்று கோவில் அருகாமையில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. இதில் சாமி அம்பாள் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்து வருகிறார்கள்.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் கனி காணும் நிகழ்ச்சி நடந்தது.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் பூஜைகள் அனைத்தும் கேரள விதிமுறைப்படியும், கேரள பஞ்சாங்கத்தின் படியும் நடைபெறுவது மரபு. இங்கு ஆண்டுதோறும் விஷூ (கேரள புத்தாண்டு) கனி காணும் நிகழ்ச்சி கொண்டாடப்படுவது வழக்கம். தமிழகத்தில் தமிழ் ப்புத்தாண்டு நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கனி காணும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. ஆனால், கேரள விதிமுறைப்படி பூஜைகள் நடைபெறும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் விஷூ கனி காணும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    இதையொட்டி மூலஸ் தானமான தாணு மாலயசாமியின் எதிரே உள்ள செண்பகராம மண்டபத்தில் சிவனின் முழு உருவ படத்தை பெரிய அளவில் கலர் கோலமாக வரைந்தனர். அதனை சுற்றிலும் அனைத்து விதமான காய், கனிகள் படைக்கப்பட்டு பெரிய அளவில் நிலை கண்ணாடி வைத்து அதில் தங்க ஆபரணங்கள் சூட்ட ப்பட்டன. மூலவராகிய தாணுமாலய சாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க குடங்கள், தங்கத்தால் ஆன பழங்கள் பக்தர்கள் பார்க்கும் விதத்தில் மூலஸ்தானத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், கனி காணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கை நீட்டமும், காய்-கனிகளும் பிரசாதமாக வழங்க ப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினரும், கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.

    இதுபோல், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், குமாரகோவில் குமாரசாமி கோவில் போன்ற கோவில்களிலும் விஷூ கனி காணும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை விஷூ (கேரள புத்தாண்டு) கனி காணும் நிகழ்ச்சி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கோவிலில் பூஜைகள் அனைத்தும் கேரள விதிமுறைப்படியும், கேரள பஞ்சாங்கத்தின் படியும் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் தமிழ்ப்புத்தாண்டு வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சித்திரை புத்தாண்டு கனி காணும் நிகழ்ச்சி 14-ந் தேதி நடக்கிறது. ஆனால், கேரள விதிமுறைப்படி பூஜைகள் நடைபெறும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விஷூ( கேரளபுத்தாண்டு) கனி காணும் நிகழ்ச்சி வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    இதையொட்டி மூலஸ்தானமான தாணுமாலயசாமியின் எதிரே உள்ள செண்பகராம மண்டபத்தில் சிவனின் முழு உருவ படத்தை பெரிய அளவில் கலர் கோலமாக வரைவார்கள். அதனை சுற்றிலும், அனைத்து விதமான காய், கனிகள் படைக்கப்பட்டு பெரிய அளவில் நிலை கண்ணாடியும் வைக்கப்படும்.

    மூலவராகிய தாணுமாலயசாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க குடங்கள், தங்கத்தால் ஆன பழங்கள் பக்தர்கள் பார்க்கும் விதத்தில் மூலஸ்தானத்தில் அன்று ஒருநாள் மட்டும் அடுக்கி வைக்கப்படும். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடுவார்கள். மேலும், கனி காணும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் கை நீட்டமாக காசும், காய்-கனிகளும் பிரசாதமாக வழங்கப்படும்.

    தமிழ்ப்புத்தாண்டையொட்டி 14-ந் தேதி சுசீந்திரம் கோவிலில் தோரணங்கள் கட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். காலை மற்றும் மாலை வேளைகளில் ரிஷப வாகனத்தில் சிவனும், கருட வாகனத்தில் பெருமாளும் அமரும்படி செய்து சிறப்பு ஸ்ரீபலி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினரும், கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செய்து வருகிறார்கள்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் திருக்கல்யாண விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் திருக்கல்யாண விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. திருவிழா நாட்களில் வாகன பவனி, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை போன்றவை நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் பறக்கையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கு புனித நீராட்டு விழா நடந்தது.

    மாலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மனை வைத்து மேளத்தாளத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    முன்னதாக பிரதோஷத்தையொட்டி ரிஷப வாகனத்தில் சிவனையும், கருட வாகனத்தில் பெருமாளையும் அமர செய்து, கோவில் சுற்றுபிரகாரத்தை 3 முறை சுற்றி வந்தனர். தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடந்தது.

    இரவில் சுசீந்திரம் கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் தாணுமாலயசாமி கையில் திருமாங்கல்யத்தை வைத்து அருகில் அறம்வளர்த்த நாயகி அம்மனை வைத்தனர். தொடர்ந்து தாணுமாலயசாமி கையில் இருந்த திருமாங்கல்யம் அறம் வளர்த்த நாயகி கழுத்தில் கட்டப்பட்டது. திருமணத்துக்கு சாட்சியாக கருட வாகனத்தில் திருமால் இருந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருக்கல்யாண விழா முடிந்தவுடன் பக்தர்களுக்கு சந்தனம், குங்குமம், வெற்றிலை, மஞ்சள் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் அறம்வளர்த்த நாயகி அம்மன், நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண விழா இன்று நடக்கிறது.
    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை நடைபெற்று வந்தது. இந்த கோவிலில் 575-வது திருக்கல்யாண விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 7 மணிக்கு பறக்கையில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் அறம்வளர்த்த நாயகி அம்மனுக்கு புனித நீராட்டு விழா நடக்கிறது.

    அம்மன் மணப்பெண் கோலத்தில் ஆஸ்ராமத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்படுவார். மாலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மனை வைத்து மேளத்தாளத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வருவார்கள்.

    இரவு 8.30 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள அலங்கார மண்டபத்தில் தாணுமாலயசாமி கையில் திருமாங்கல்யத்தை வைத்து அருகில் அறம்வளர்த்த நாயகி அம்மனை வைப்பர். தாணுமாலயசாமி கையில் உள்ள திருமாங்கல்யம் வேத மந்திரங்கள் முழங்க, மணியோசை ஒலிக்க, பெண்கள் குலவையிட, பக்தர்கள் பக்திகோஷம் எழுப்ப அறம் வளர்த்த நாயகி கழுத்தில் கட்டப்படும்.

    திருமணத்துக்கு சாட்சியாக கருட வாகனத்தில் திருமால் இருப்பார். திருக்கல்யாண விழா முடிந்தவுடன் பக்தர்களுக்கு சந்தனம், குங்குமம், வெற்றிலை, மஞ்சள் கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும். அதன்பின்னர், சுவாமியும் அம்மனும் பக்தர்களுக்கு காட்சிதர எழுதருளுவர். நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் அறம்வளர்த்த நாயகி அம்மன், நான்கு ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.
    ×