என் மலர்
நீங்கள் தேடியது "மோசடி"
- பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் திவ்ய பிரியாவின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் திவ்யப்பிரியா (வயது31). இவர் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் கால்நடை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
துறையூர் அசோக் நகரை சேர்ந்தவர் மகிசுகந்த் (31). இவர்கள் இருவரும் பள்ளிக் காலம் முதல் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில் மகிசுகந்த் தான் வெளிநாடு செல்ல இருப்பதாகவும், அதனால் பணம் கொடுத்து உதவுமாறும் திவ்ய பிரியாவிடம் கேட்டார்.
இதனை தொடர்ந்து அவர் ரூ. 1 லட்சத்து இருபதாயிரம் ரொக்கப் பணம் மற்றும் சுமார் ரூ.5 லட்சத்து 50ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை மகிசுகந்திடம் கொடுத்துள்ளார்.
பின்னர் வெளிநாடு சென்ற மகிசுகந்த் அங்கு தங்கி பணி புரியாமல் சில நாட்களிலேயே இந்தியா திரும்பினார்.
இதனை தொடர்ந்து கொடுத்த பணத்தை திவ்யப்பிரியா, மகி சுகந்திடம் கேட்டார்.
ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். மேலும் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் திவ்ய பிரியாவின் வீட்டிற்கு சென்று ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட திவ்யபிரியா துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதோடு, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த மகி சுகந்தின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்த அவர் தலைமறைவானார். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். துறையூரில் பெண் அதிகாரியிடம் நட்பாக பழகிய வாலிபர் நகை, பணத்தை மோசடி செய்து தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அந்த பெண், பல தவணைகளாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் 8 ½ பவுன் தங்க நகையையும் கொடுத்திருக்கிறார்.
- பெண் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கோவை:
கோவை மாவட்டம் காரமடை பகுதியைச் சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், கோவை பூ மார்க்கெட் தியாகராஜா தெருவைச் சேர்ந்தவர் பாக்கிய அருண் (26 ) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பாக்கிய அருண், அந்த பெண்ணை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசை வார்த்தை கூறி இருக்கிறார்.
இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து அவருடன் பழகி வந்துள்ளார். அப்போது பாக்கிய அருண், புதிய தொழில் தொடங்க பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இதற்காக அந்த பெண், பல தவணைகளாக ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் 8 ½ பவுன் தங்க நகையையும் கொடுத்திருக்கிறார்.
பணம்- நகையை பெற்றுக்கொண்ட பாக்கிய அருண், அந்த பெண்ணை சந்திப்பதை தவிர்த்துள்ளார். அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரிடம் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்ததுடன் நகை- பணத்தையும் திரும்ப கொடுக்க மறுத்துள்ளார்.
சம்பவத்தன்று பீளமேடு அருகில் பாக்கிய அருணை சந்தித்த அந்த பெண், நகை- பணத்தை கேட்டுள்ளார். அதற்கு பாக்கிய அருண், அந்த பெண்ணை அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் பீளமேடு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து பாக்கியஅருணை கைது செய்து சிறையில் அடைத்தார். பாக்கிய அருண் சமீபகாலமாக கோவை ரெட்பீல்ட் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
- மர்மநபர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
- சைபர் கிரைம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார்.
ஒயிட்பீல்டு:
பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே 25 வயது இளம்பெண் வசித்து வருகிறார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இளம்பெண்ணின் வாட்ஸ்-அப்புக்கு ரிசர்வ் வங்கி அதிகாரி எனக்கூறி கொண்டு ஒரு நபர் பேசினார்.
அப்போது உங்களது வங்கி கணக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கிறது, அதுபற்றி மும்பை போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று அந்த நபர் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். அதன்படி, மும்பை போலீசார் எனக்கூறி மற்றொரு நபர், இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நீங்கள் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால், உங்களை கைது செய்வோம் என்று அவர் மிரட்டியுள்ளார்.
இந்த வழக்கில் உங்களை கைது செய்யாமல் இருக்க தான் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பும்படி மர்மநபர் இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் மர்மநபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.84½ லட்சத்தை இளம்பெண் அனுப்பி வைத்தார்.
மர்மநபர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் இளம்பெண்ணுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் மர்மநபர்கள் ரிசர்வ் வங்கி அதிகாரி, மும்பை போலீசார் பெயரில் மிரட்டி பணம் பறித்ததையும் இளம்பெண் உணர்ந்தார். இதுபற்றி ஒயிட்பீல்டு மண்டல சைபர் கிரைம் போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.
- பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சைபர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
- பல்கலைக்கழக துணை வேந்தர் ரூ.14 லட்சத்தை இழந்திருப்பது ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெர்ஹாம்பூர்:
ஒடிசாவின் பெர்ஹாம்பூர் பல்கலைக்கழக துணை வேந்தராக இருப்பவர் கீதாஞ்சலி தாஸ். இவரை கடந்த பிப்ரவரி மாதம் சிலர் செல்போனில் தொடர்பு கொண்டனர். தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்ட அவர்கள், கீதாஞ்சலி தாஸ் நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவரை டிஜிட்டல் கைது செய்திருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.14 லட்சம் தருமாறு கூறிய அவர்கள், அதில் ரூ.80 ஆயிரத்தை திருப்பி கொடுத்து விட்டு மீதி பணத்தை விசாரணைக்குப்பின் தருவதாக கூறினர். ஆனால் அவர்கள் கூறியதைப்போல பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட கீதாஞ்சலி தாஸ், போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், இந்த மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த 2 பேரை தற்போது கைது செய்துள்ளனர்.
அவர்களை ஒடிசா அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற சைபர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. டிஜிட்டல் கைது மோசடியில் பல்கலைக்கழக துணை வேந்தர் ரூ.14 லட்சத்தை இழந்திருப்பது ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரஉள்ளது.
- செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
புதுடெல்லி:
சமீபகாலமாக நாடு முழுவதும் போன் மூலம் நூதன மோசடி, டிஜிட்டல் கைது, செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மோசடி, குரல் வழியாக பேசி மோசடி என புதுப்புது வகைகளில் மோசடிகள் நடைபெறுகிறது.

மேலும் செல்போனுக்கு தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்பதன் மூலமும் பலரிடம் மோசடிகள் நடக்கிறது. இந்த சிக்கல்களுக்கு முடிவு கட்ட இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்பதற்காக தொலை தொடர்பு நிறுவனங்கள் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இதன்படி அழைப்பாளரின் பெயர் விளக்க காட்சி என்று அழைக்கப்படும் இந்த திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரஉள்ளது.
இதுவரை ட்ரூகாலர் போன்ற செயலிகள் அழைப்பாளர்களின் பெயரை காண்பிக்கும் வசதியை அளித்து வருகின்றனர். ஆனால் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
புதிய திட்டத்தின்படி அவற்றை பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடடோ போன் போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த புதிய அம்சத்தை செயல்படுத்த உள்ளனர்.
இந்த அழைப்பாளர் பெயரை வெளிப்படுத்தும் அம்சத்திற்காக தொலை தொடர்பு நிறுவனங்கள் சில விற்பனை யாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளனர். இந்த விற்பனையாளர்கள் டெலிகாம் நிறுவனங்களுக்கு மென்பொருள் தேவையான சர்வர்களை வழங்கு வார்கள்.
இந்த சேவை மராட்டியம் மற்றும் ஹரியானாவில் தொடங்க உள்ளது. விரைவில் மற்ற மாநிலங்க ளுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது.
- முதியவர் அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பி உள்ளார்.
- புகாரின்பேரில் போலீசார் பணம் பறித்த மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
நவிமும்பை:
நவிமும்பை கோபர்கைரானே பகுதியை சேர்ந்த 70 வயது முதியவருக்கு, அண்மையில் வீடியோ கால் அழைப்பு ஒன்று வந்தது. இதில் எதிர்முனையில் தோன்றிய நபர், தன்னை சி.பி.ஐ. அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார்.
பின்னர் அவர், உங்கள் பெயரில் விமானத்தில் வந்த பார்சல் ஒன்று எங்களிடம் சிக்கியுள்ளது. அதில், தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள், 8 பாஸ்போர்ட்டுகள், மடிக்கணினி ஆகியவை உள்ளது. இதனால் உங்களை டிஜிட்டல் கைது செய்யப் போகிறோம் என மிரட்டினார்.
மேலும் இதில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் உடனடியாக ரூ.12½ லட்சத்தை அனுப்பி வைக்கவேண்டும் என கூறி ஒரு வங்கிக்கணக்கு எண்ணை தெரிவித்தார்.
இதனால் பயந்து போன முதியவர் அவர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை அனுப்பி உள்ளார். இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் பணம் பறித்த மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
- போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மும்பை:
மும்பையில் வசித்து வரும் 86 வயது மூதாட்டியை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீஸ் அதிகாரி எனக்கூறி ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் மூதாட்டியின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் அதிகளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறினார். மேலும் அதற்காக மூதாட்டி மற்றும் அவரது மகள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக மிரட்டினார். இதேபோல மூதாட்டியை டிஜிட்டல் கைது செய்து இருப்பதாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டியிடம் மேலும் சிலர் அதிகாரிகள் எனக்கூறி பேசினர்.
அந்த கும்பல் வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாக கூறி மூதாட்டியிடம் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த 5-ந்தேதி வரை ரூ.20 கோடி வரை பறித்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் ஏமாற்றப்படுவது குறித்து அறிந்த மூதாட்டி இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது மோசடியில் மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த ஷயான் ஜமீல் சேக்(20), மிரா ரோட்டை சேர்ந்த ரஜிக் அசாம் பட்டிற்கு(20) தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ஐந்து நபர்கள் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- பிரபல கேஸ்டிங் நிறுவனம் ஒன்றின் மேலாளர் அளித்த புகாரை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உற்சாக பானம் (எனர்ஜி டிரிங்க்) விளம்பரத்தில் நடிக்க வைக்கப்பட்டு இந்தி தொலைக்காட்சி பிரபலங்கள் மீது நடந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உற்சாக பானம் விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரம் எனக் கூறி நடிக்க வைத்துவிட்டு அதற்கு எந்த சம்பளமும் தராமல் 25 பிரபலங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். அதில் பிரபல இந்தி சீரியல் நடிகை அங்கிதா லோகண்டேவும் ஒருவர்.
அங்கிதா லோகண்டே, ஆயுஷ் சர்மா மற்றும் அட்ரிஜா ராய் உட்பட 25 நடிகர்களிடம் கிட்டத்தட்ட 1.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஐந்து நபர்கள் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விளம்ரபரங்களுக்கு ஆள் பிடித்து கொடுக்கும் பிரபல கேஸ்டிங் நிறுவனம் ஒன்றின் மேலாளர் அளித்த புகாரை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
- வெளி மாநிலத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் இவர்களது வீட்டிற்கு வந்து, நீங்கள் வைத்திருக்கும் வெள்ளி மற்றும் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கேட்டுள்ளனர்
- இரண்டையும் பாலிஷ் போடுவதாக கூறி ஆசிடில் போட்டவுடன் நகை கரைந்துள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி ராணி சந்திரிகா, இவர்களது மகள் சந்திரகாந்தா (வயது 24) இவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் இன்று ராணி சந்திரிகா மற்றும் அவரது மகள் சந்திரகாந்தா இருவரும் வீட்டில் இருந்த போது, இந்தி பேசிக்கொண்டு வெளி மாநிலத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் இவர்களது வீட்டிற்கு வந்து, நீங்கள் வைத்திருக்கும் வெள்ளி மற்றும் தங்க நகைகளுக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கேட்டுள்ளனர்,
வீட்டில் இருந்த தாய் மற்றும் மகள் இருவரும் மறுத்த நிலையில் சந்திரகாந்தா அணிந்திருந்த வெள்ளி மோதிரத்தை பாலிஷ் போட்டு தருவதாக கூறியதன் பேரில் கழட்டி கொடுத்துள்ளார், முதலில் வெள்ளி மோதிரத்தை பாலிஷ் போட்டுக் கொடுத்தவுடன், உடனே அவர் கழுத்தில் அணிந்திருந்த 1½ தங்க சங்கிலி மற்றும் கையில் அணிந்திருந்த ¾ பவுன் தங்கச் சங்கிலி கழட்டி கொடுத்துள்ளார்.
இரண்டையும் பாலிஷ் போடுவதாக கூறி சற்று நேரத்தில் ஆசிடில் போட்டவுடன் கரைந்துள்ளது. உடனே தாயும், மகளும் சுதாரித்து எனது நகையை திருப்பிக் கொடு என்று கேட்டவுடன் கை செயின் ¾ பவுன் எடுத்து கொடுத்துள்ளார். கழுத்தில் இருந்த 1½ செயின் சற்று நேரத்தில் முழுவதுமாக துண்டு துண்டாக ஆசிட்டில் கரைந்து விட்டது.
உடனே இதனை பார்த்த தாய் மற்றும் மகள் இருவரும் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்த ஊர் பொதுமக்கள் இருவரையும் பிடித்து விசாரித்தபோது இருவரும் பீகார் ரகுநாத்பூர் சுபல் பகுதியை சேர்ந்த ரகுநாதன் ராம் (36) இவரது அண்ணன் மகன் கமல் கிஷோர் யாதவ் கூறியுள்ளார்கள்.
இதைத்தொடர்ந்து தகவலின் பேரில் வந்த மணப்பாறை காவல்துறையினர் இருவரையும் பிடித்து விசாரணை செய்தபோது, அதில் ரகுநாதன் ராம் என்பவருக்கு கையில் ரத்த காயம் இருப்பதை அறிந்து இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கனடாவில் நர்சு வேலை வாங்கி தருவதாக மெயில் மூலம் ரூ.1.40 லட்சம் மோசடி நடந்துள்ளது.
- பணத்தை பெற்று கொண்டவர்கள் மீண்டும் சில காரணங்களை குறிப்பிட்டு ரூ.1லட்சத்து 8ஆயிரத்து 517-ஐ அனுப்பி வைக்கும்படி கேட்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சித்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது23). இவர் நர்சிங் படித்து முடித்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 2022 செப்டம்பர் மாதம் பிரியதர்ஷினி தனியார் வேலைவாய்ப்பு இணையதளத்தில் வேலைக்காக பதிவு செய்து வைத்திருந்தார். இந்த நிலையில் 25.9.2022-ந் தேதி இவரது மெயில் முகவரிக்கு கனடாவில் நர்சு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்கிறார்கள் என்று குறிப்பிட்டு விவரத்தினை கேட்டு அனுப்பி உள்ளனர்.
அவர்கள் தெரிவித்த விதிமுறைகளை தெரிந்து கொண்டு, கொடுக்கப்பட்ட வங்கி கணக்கு எண்ணுக்கு தனது உறவினரான மதன் என்பவரது வங்கி கணக்கில் இருந்து 2 தவணைகளாக முதலில் ரூ.57 ஆயிரத்து 400 மற்றும் ரூ.82ஆயிரத்து 979 மொத்தம் ரூ.1 லட்சத்து 40ஆயிரத்து 379 அனுப்பினார்.
பணத்தை பெற்று கொண்டவர்கள் மீண்டும் சில காரணங்களை குறிப்பிட்டு ரூ.1லட்சத்து 8ஆயிரத்து 517-ஐ அனுப்பி வைக்கும்படி கேட்டனர். சந்தேகம் அடைந்த பிரியதர்ஷினி இவ்வளவு பணம் தன்னால் அனுப்ப இயலாது, தனக்கு வேலை வேண்டாம் என்று குறிப்பிட்டு அவர்களால் கொடுக்கப்பட்ட திரும்ப பணம் பெறும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வாட்ஸ்ஆப் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து எந்த வித தகவலும் தெரிவிக்க வில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரியதர்ஷினி இது குறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக தொழில் அதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஜவுளிக்கடை அதிபர் ஞானசேகரன் அவரது மகன் செந்தில்குமார் மற்றும் இளங்கோ ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ராஜபாளையம் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 35). இவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் தளவாய் புரத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவருக்கும் பழக்கம் இருந்தது. அப்போது எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக இளங்கோ கூறினார். இதற்காக ஜவுளிக்கடை நடத்தி வரும் ஞானசேகரன், அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.அவர்கள் தனக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
இதையடுத்து அவர்களது ஜவுளி கடைக்கு சென்று 3 தவணைகளில் ரூ. 16 லட்சத்தை ரொக்கமாக கொடுத்தேன். அதன் பின் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி வேலை வாங்கி தரவில்லை பணத்தை யும் திருப்பி தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படை யில் ஜவுளிக்கடை அதிபர் ஞானசேகரன் அவரது மகன் செந்தில்குமார் மற்றும் இளங்கோ ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்வாரியத்திலிருந்து குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது.
- பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை :
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சமீப காலமாக 'சைபர் கிரைம்' குற்றவாளிகள் பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதன்படி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு தங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும். சென்ற மாத பில் கட்டணம் 'அப்டேட்' செய்யப்படவில்லை. உடனே மின்வாரிய அதிகாரியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் என்று ஒரு செல்போன் எண்ணையும் சேர்த்து குறுந்தகவலாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்புவார்கள்.
பொதுமக்களிடம் அவர்கள் செல்போனில் ரிமோட் அக்சஸ் அப்ளிகேஷன்களான Quick Support அல்லது Any Desk போன்ற செயலிகளை பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்ய சொல்லுவார்கள். அதன் மூலம் எதிர்முனையில் இருக்கும் பொதுமக்களின் செல்போனில் உள்ள விவரங்களை 'சைபர்' குற்றவாளிகள் எளிதாக பார்க்க முடியும். பின்னர் ரூ.10-க்கு குறைந்த அளவில் 'ரீசார்ஜ்' செய்ய சொல்லுவார்கள். அப்போது பொதுமக்கள் உள்ளிடும் வங்கி தொடர்பான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தங்களுக்கு தேவையான வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பிவிடுவார்கள்.
இந்த செயலிகள் மூலம் பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி. எண்களையும் குற்றவாளிகளால் எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணத்தை கொள்ளையடிப்பார்கள். எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அந்த செல்போன் எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம். மின்வாரியத்திலிருந்து இதுபோன்ற குறுந்தகவல்களோ, போன் அழைப்புகளோ வராது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற சம்பவங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.