search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சாப் கியாஸ் கசிவு"

    • வாயுக்கசிவு விபத்தில் 11 தொழிலாளர்கள் பலியானார்கள். இதில் 2 சிறுவர்களும் அடங்குவர்.
    • வாயுக்கசிவு பகுதி அதிக மக்கள் வசிக்கும் இடம் என்பதால் அங்கிருந்து அவர்களை உடனடியாக வெளியேற்றினர்.

    லூதியானா:

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் பால் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த தொழிற்சாலையில் இன்று காலை 7 மணியளவில் வாயுக்கசிவு ஏற்பட்டது. குளிரூட்டும் இயந்திரத்தில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் பரவியது. இதில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்கி கீழே விழுந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் முககவசம் அணிந்து தொழிற்சாலைக்குள் சென்று தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வாயுக்கசிவு விபத்தில் 11 தொழிலாளர்கள் பலியானார்கள். இதில் 2 சிறுவர்களும் அடங்குவர்.

    மேலும் 11 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்பகுதியை போலீசார் சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய வாயு கசிவு 300 மீட்டர் சுற்றளவுக்கு பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் மூச்சு திணறல், கண் எரிச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர். சிலர் வீடுகளில் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதையடுத்து அப்பகுதிக்குள் யாரும் நுழைய வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தினார்கள்.

    மேலும் வாயுக்கசிவு பகுதி அதிக மக்கள் வசிக்கும் இடம் என்பதால் அங்கிருந்து அவர்களை உடனடியாக வெளியேற்றினர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. வாயுக்கசிவுக்கான காரணம்? வாயு எந்த வகையை சேர்ந்தது? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    இதுகுறித்து லூதியானா துணை கலெக்டர் சுவாதி திவானா கூறும்போது;

    இது நிச்சயமாக வாயுக்கசி வால் ஏற்பட்ட விபத்து. தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். வாயுவின் தன்மை குறித்து இன்னும் தெரியவில்லை. இதுதொடர்பாக தேசிய பேரிடர் படை குழு விசாரித்தும் மக்கள் தொகை அதிகம் கொண்ட அப்பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டது என்றார்.

    பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த்மான் டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் வாயுக்கசிவு சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. போலீசார் மாவட்ட நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்புப்படை சம்பவ இடத்தில் உள்ளனர். அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

    ×