search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nalin Kumar Kateel"

    சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆகலாம் என்று கனவு காண்கிறார். அந்த கனவு நனவாகாது என்று கர்நாடக மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
    துமகூரு:

    கர்நாடக மாநில பா.ஜனதா விவசாய அணி மாநாடு துமகூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:- மத்திய அரசு கிருஷி சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறது. பசல் பீமா பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய-மாநிலத்தில் பா.ஜனதா அரசுகள் உள்ளன. இது இரட்டை என்ஜின் அரசு ஆகும். இந்த அரசுகள் சிறப்பான முறையில் செயலாற்றி வருகின்றன.

    விவசாயிகளின் நலனுக்காக எடியூரப்பா போராடினார். இதனால் அவர் முதல்-மந்திரி ஆனார். அவர் முதல் முறையாக விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விவசாய கடனை தள்ளுபடி செய்தார். விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயித்தார். தற்போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு நாட்டிலேயே முதல் முறையாக விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

    பால்வள கூட்டுறவு வங்கியும் நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் தொடங்கப்படுகிறது. விவசாய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை பிரதமர் மோடி அதிகரித்துள்ளார். மீனவர்களின் நலனுக்காக தனி இலாகாவை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

    பசுக்களை கொன்றவர்களை சித்தராமையா அரசு பாதுகாத்தது. சிறுபான்மையினரின் ஓட்டுகளை கவர திப்பு ஜெயந்தி விழாவை நடத்தினர். விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த சித்தராமையா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது. நாட்டின் பிரதமராக இருந்த நேரு முதல் மன்மோகன்சிங் வரை காங்கிரஸ் ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. நெருக்கடி நிலை வந்தபோது நாட்டை பாதுகாத்தது ஆர்.எஸ்.எஸ். ஆகும். இந்த அமைப்பை பற்றி விமர்சிக்க சித்தராமையாவுக்கு தகுதி இல்லை. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஜாமீனில் வெளியே உள்ளனர்.

    சித்தராமையா ஆட்சியில் அர்க்காவதி லே-அவுட் அமைத்ததில் முறைகேடு நடந்தது. மாணவர் விடுதிகளுக்கு மெத்தை, தலையணை கொள்முதல் செய்ததிலும் முறைகேடு நடந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அரசியல் செய்வது இல்லை. அது நாட்டின் நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து சிந்திக்கிறது. வருகிற சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரி ஆகலாம் என்று கனவு காண்கிறார். அந்த கனவு நனவாகாது.

    இவ்வாறு நளின்குமார் கட்டீல் பேசினார்.
    ×