என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fine"

    • காரில் பெட்ரோல் நிரப்பியபிறகு அங்கிருந்த கழிவறைக்கு ஜெயகுமாரி சென்றார்.
    • பத்தினம்திட்டா நுகர்வோர் கோர்ட்டில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் எழம்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமாரி. பள்ளி ஆசிரியையான இவர், கடந்த ஆண்டு மே மாதம் 8-ந்தேதி தனது காரில் காசர்கோட்டில் இருந்து எழம்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரவு 11 மணியளவில் கோழிக்கோடு பய்யோலி தேனாங்கல் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றார்.

    காரில் பெட்ரோல் நிரப்பியபிறகு அங்கிருந்த கழிவறைக்கு ஜெயகுமாரி சென்றார். ஆனால் அவரை கழிப்பறையை பயன்படுத்த பங்க் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து பத்தினம்திட்டா நுகர்வோர் கோர்ட்டில் ஜெயகுமாரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்துவந்த நிலையில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டது.

    வாடிக்கையாளரை கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்காததால் பெட்ரோல் பங்கின் உரிமையாளரான பாத்திமா ஹன்னாவுக்கு ரூ1.65 லட்சம் அபராதம் விதித்து ஆணைய தலைவர் பேபிச்சன் வெச்சச்சிரா, உறுப்பினர் நிஷாத் தங்கப்பன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அதில் ரூ1.50 லட்சத்தை இழப்பீடாகவும், ரூ.15 ஆயிரத்தை கோர்ட்டு செலவுக்காகவும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    • கடந்த 2023-24ம் ஆண்டில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 2.16 கோடி பயணிகள் பிடிபட்டுள்ளனர்.
    • அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மூலம் ரெயில்வே ரூ.562 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் 2023-24-ம் ஆண்டில் டிக்கெட் இன்றி பிடிபட்ட பயணிகள் எண்ணிக்கை மற்றும் பிற தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு மக்களவையில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

    கடந்த 2023-24-ம் ஆண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த சுமார் 2.16 கோடி பயணிகளை இந்திய ரெயில்வே கண்டறிந்தது. அந்தப் பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.562.40 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட் கேமராக்கள், ஏ.ஐ. அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மூலம் டிக்கெட் இல்லாத பயணிகளைக் கண்டறியும் விகிதம் உயர்ந்துள்ளது.

    முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அபராத வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட் எடுக்காத பயணிகள் பதிவாகியுள்ளனர். டிக்கெட் இல்லாத பயணம் ரெயில்வேக்கு ஏராளமான நிதி இழப்பை ஏற்படுத்துகிறது.

    உள்ளூர் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அல்லது ரெயில்வே அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, மண்டல ரயில்வேக்களால் அவ்வப்போது சிறப்பு டிக்கெட் சரிபார்ப்பு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

    டிக்கெட் சரிபார்ப்பு செயல்பாடு மற்றும் சிறப்பு டிக்கெட் சரிபார்ப்பு பிரசாரங்களை நடத்துவது இந்திய ரெயில்வேயில் தொடர்ச்சியான பயிற்சியாகும். இந்த நடவடிக்கைகள் முறைகேடுகளைக் குறைக்கவும், ரெயில்வே வருவாயை மேம்படுத்தவும் உதவுகின்றன என தெரிவித்தார்.

    • இம்ரான் கானை ஆதரித்ததாக அமீர் ஜமாலுக்குப் பாகிஸ்தான் ரூபாயில் 1.4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
    • இதன் காரணமாகத்தான், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் சேர்க்கப்படவில்லை.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அமீர் ஜமால், தனது டெஸ்ட் தொப்பியில் '804' என்ற எண்ணை எழுதியதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் அவருக்குச் சுமார் 1.4 மில்லியன் அபராதம் விதித்திருக்கிறது.

    முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது, அமீர் ஜமால் 804 என்ற நம்பர் எழுதியிருந்த தொப்பியை அணிந்திருந்தார். இந்த 804 என்ற எண்ணானது, சிறையிலிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தானுக்கு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானின் கைதி நம்பரைக் குறிக்கிறது.

    இதனால், கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டுவந்து இம்ரான் கானை ஆதரித்ததாக அமீர் ஜமாலுக்குப் பாகிஸ்தான் ரூபாயில் 1.4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகத்தான், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தங்கள் வீரர்கள் மீது இவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது இது முதல் முறையல்ல.

    கடந்த ஆண்டு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தாமதமாக வந்ததற்காக சைம் அயூப், சல்மான் அலி அகா, அப்துல்லா ஷஃபிக் உட்படப் பல பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது, தாமதமாக வந்ததற்காக சுபியான் முகீம், அப்பாஸ் அஃப்ரிடி, உஸ்மான் கான் ஆகியோருக்குத் தலா 200 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

    • முதல் டி20 போட்டியின் போது நியூசிலாந்து பந்துவீச்சாளரை வேண்டுமென்றே மோதியுள்ளார்.
    • குஷ்தில் ஷாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில், போட்டி விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஸகாரி ஃபால்க்ஸை வேண்டுமென்றே மோதியதாக குஷ்தில் ஷா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை கள நடுவர்களும் உறுதிசெய்தனர்.

    இது ஐசிசி விதிகளுக்கு எதிரானது என்பதால், குஷ்தில் ஷாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், மூன்று கரும்புள்ளிகளையும் அபராதமாக விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

    அதேசமயம் சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோல் விதிமுறையை மீறும் வீரர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இரண்டாம் தர குற்றங்களில் ஈடுபடும் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 முதல் 100 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குஷ்தில் ஷா கடந்த 24 மாதங்களில் செய்த முதல் குற்றம் இது என்பதால் அவருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு ரெயில்வே நிர்வாகம் தான் பொறுப்பு.
    • அபராதம் விதிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் பணம் தர முன்வரவில்லை.

    திருவனந்தபுரம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரூவை சேர்ந்தவர் ஜெம்ஷீத். தொழில்நுட்ப வல்லுனரான இவர், கேரள மாநிலம் கோட்டக்கல் அருகே உள்ள திருரூருக்கு செல்ல யஷவந்த்பூர்-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தட்கல் முறையில் முன்பதிவு செய்து டிக்கெட் பெற்றுள்ளார்.

    பயணநாளில் பெங்களூரூ ரெயில் நிலையம் வந்த அவர் தான் செல்ல வேண்டிய ரெயிலில் இரவு ஏறி, தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சென்ற போது அங்கு முன்பதிவு செய்யாத 5 பயணிகள் இருப்பதை பார்த்துள்ளார். அவர்களிடம் இது தனது இருக்கை என்று ஜெம்ஷீத் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் நகரவில்லை.

    இதனை தொடர்ந்து 10 மணி நேர பயணத்தை ஜெம்ஷீத் இரவில் நின்று கொண்டே சென்றுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அவர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.4 லட்சம் ரெயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார்.

    இந்த வழக்கு பல மாதங்கள் நடைபெற்ற நிலையில், ஜெம்ஷீத்துக்கு இழப்பீடாக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவுகளுக்காக ரூ.5 ஆயிரமும் ரெயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இது பற்றி ஜெம்ஷீத் கூறும் போது, நான் பாதிக்கப்பட்ட போது ரெயில்வே போலீசாரிடம், தெரிவித்தேன். அவர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்கச் சொன்னார்கள்.

    அவரிடம் கூறியும் பலன் கிடைக்காததால் ரெயில்வே உதவி எண் 139-க்கு தொடர்பு கொண்டேன். ஆனால் அது பயனற்றதாக இருந்தது. ரெயில்வே செயலியும் கை கொடுக்காததால் திருரூரை அடைந்ததும் ரெயில் நிலைய மேலாளரிடம் புகார் அளித்தேன்.

    ஐ.ஆர்.சி.டி.சியின் பாலக்காடு மற்றும் பெங்களூரூ ரெயில்வே பிரிவுகளுக்கு புகார் கொடுத்தும் பலன் கிடைக்காததால் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன் என ஜெம்ஷீத் தெரிவித்தார்.

    பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்கும், டிக்கெட் பெற்ற பயணிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்ட படுக்கைகளை வழங்குவதற்கும் இந்திய ரெயில்வே தான் பொறுப்பு என்று நுகர்வோர் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    ரெயில் பயணிகள் தங்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களுக்கு ரெயில்வே துறையை பொறுப்பேற்க வைக்க வேண்டும். ரெயில்களில் கொசுக்கள் கடித்தால் கூட ரெயில்வே நிர்வாகம் மீது நாம் வழக்கு தொடர முடியும் என்றும் ஜெம்ஷீத் கூறியுள்ளார்.

    தற்போது இந்த வழக்கில் ரெயில்வேக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் பணம் தர முன்வரவில்லை. எனவே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    • கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திற்குரிய அபராதத் தொகையை செலுத்திய பின் வாகனங்கள் விடுவிக்கப்படும்.

    கோவில்பட்டி:

    நெல்லை துணை போக்குவரத்து கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின்படி, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ் செழியப்பாண்டியன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ்விஸ்வநாத் மற்றும் அலுவலக பணியாளர்கள் கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது தகுதிச் சான்று இல்லாமல் அதிக ஆட்கள் ஏற்றிச் சென்ற அனுமதிச் சீட்டு இல்லா சரக்கு வாகனம், தகுதிச் சான்று இல்லாமல் இயங்கிய சுற்றுலா கார், சாலை வரி மற்றும் தகுதிச் சான்று இல்லாமல் சென்ற தனியார் பள்ளி வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து சரக்கு வாகனத்திற்கு ரூ.12 ஆயிரத்து 900-ம், சுற்றுலா காருக்கு ரூ.16 ஆயிரம், தனியார் பள்ளி வாகனத்திற்கு சாலை வரி ரூ. 66 ஆயிரம், அபராதம் ரூ. 29 ஆயிரத்து 900 என மொத்தம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 400 அபராதமும் விதித்தனர்.

    இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திற்குரிய அபராதத் தொகையை செலுத்திய பின் வாகனங்கள் விடுவிக்கப்படும். வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனத்திற்குரிய அனைத்து வரியினங்களையும் முறையாக செலுத்தி ஆவணங்களை நடப்பில் வைத்துக் கொண்டு வாகனங்களை இயக்கும் படி கேட்டுக் கொண்டார்.

    • மாத்தூர் வயல்வெளி பகுதியில் வலை வைத்து மடையான் பறவைகளை வேட்டையாடினர்.
    • வழக்குப்பதிவு செய்து இருவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வனசரகத்திற்கு உட்பட்ட வயல்வெளிகள், சமவெளிப் பகுதிகளில் மடையான், கொக்கு பறவைகளை வேட்டையாடியவர்களை பிடிக்க திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் உத்தரவின் பேரில் சீர்காழி வன சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் தனி குழு அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தரங்கம்பாடி வட்டம் ஆக்கூர் புங்கையன் தோப்பு மாத்தூர் வயல்வெளி பகுதியில் வலை வைத்து மடையான் பறவைகளை வேட்டையாடியவர்களை பிடித்து வனத்துறையினர். விசாரணை செய்ததில் ஆக்கூர் புங்கையன் தோப்பு பகுதியை சேர்ந்த சத்தியராஜ் (40) மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் (37) என்பது தெரிய வந்தது.

    வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்த வனத்துறையினர் தலா ரூ.20 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரம் இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து வலைகள் மற்றும் பறவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து வாங்கி நாள்தோறும் வரும் வாங்கி வாகனங்கள் மூலம் நகராட்சி குப்பை கிடங்கில் கொண்டு கொட்டுகின்றர்.
    • நாள்தோறும் இந்த குப்பைகளை அகற்றினாலும் குப்பைகள் அகற்றிய உடனே பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில் பல்வேறு இடங்களில் நகராட்சி சார்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம்பிரித்து வைத்து எடுத்து செல்லும் வகையில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் நகராட்சி சார்பில் வீடு, வீடாக தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து வாங்கி நாள்தோறும் வரும் வாங்கி வாகனங்கள் மூலம் நகராட்சி குப்பை கிடங்கில் கொண்டு கொட்டுகின்றர்.

    இந்நிலையில் சீர்காழி நகராட்சி 14வது வார்டில் உள்ள கல்யாணி சீனிவாசபுரம் செல்லும் பகுதியில் முகப்பில் குப்பைகள் அதிக அளவு கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சி யளிக்கிறது. நாள்தோறும் இந்த குப்பைகளை அகற்றினாலும் குப்பைகள் அகற்றிய உடனே பொதுமக்கள் சிலர் குப்பைகளை கொட்டி செல்கின்றனர்.

    அதன்படி சீர்காழி நகராட்சி சார்பில் அப்பகுதியில் பொது இடத்தில் குப்பை கொட்ட தடை விதித்து, மீறினால் நடவடிக்கை அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாக

    சார்பில் எச்சரிக்கை விடுக்கும் எச்சரிக்கை பலகை தயார் செய்யப்பட்டு அப்பகுதியில் வைக்கப்பட்டது. இந்தப் பணியை நகர மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு மற்றும் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.

    • சாலையில் திரிந்த மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பிடித்து அபராதம் விதித்தனர்.
    • மாடுகளை சாலைகளில், தெருக்களில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று எச்சரித்து ஒப்படைத்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர்பகுதியில் சிவகங்கை ரோடு, ராமேசுவரம் செல்லும் நான்கு வழிசாலை, பழைய பஸ்நிலையம், சுந்தரபுரம், கடைவீதி, சிவகங்கை ரோடு, தாயமங்கலம்ரோடு, கன்னார் தெரு, சிப்காட், மூங்கில் ஊரணி ஆகிய பகுதிகளில் ஏராளமான வீடுகளில் உள்ள பசுமாடுகளை இரவு-பகலாக அதன் உரிமையாளர்கள் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகின்றனர்.

    சாலையில் சுற்றி திரியும் இந்த மாடுகளால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. நகராட்சி நிர்வாகம் மாடுகளை சாலை மற்றும் தெருபகுதியில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் மாடுகள் ரோட்டில் திரிந்தன. நகராட்சி ஆணையாளர் சக்திவேல் உத்தரவின்படி சுகாதார ஆய்வாளர் தங்கதுரை மற்றும் பணியாளர்கள் கடைவீதி மற்றும் சாலையில் திரிந்த 10-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை பிடித்து நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டிபோட்டனர்.

    அந்த மாடுகளுக்கு தண்ணீர், புல், கீரைகளை வழங்கினர். மாடுகளை தேடி வரும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மீண்டும் மாடுகளை சாலைகளில் , தெருக்களில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்று எச்சரித்து ஒப்படைக்கப்படும்.

    • சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.
    • ரூ.1600 கோடியில் புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் வேதாரண்யம் நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும்.

    கடைவீதிகளிலில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து மயிலாடுதுறை கோசாலை பகுதிக்கு கொண்டுவிட்டு, அதன் செலவையும் வசூலித்து அவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இதற்கு பதிலளித்து நகர மன்ற தலைவர் பேசுகையில்:-

    வீதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தற்போது தமிழக அரசால் தலைஞாயிறு பகுதிக்கு ரூ.1600 கோடியில் புதிதாக கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

    இதில் வேதாரண்யம் நகராட்சியையும் இணைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் வரும் 2 ஆண்டுகளில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கப்படும்.

    மேலும் தற்போது உள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டமும் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • வேட்டை தடுப்பு காவலர்கள் இரவு நேரத்தில் டி.என். புதுக்குடி வனப்பகுதிகளில் ரோந்து வந்தனர்.
    • 2 பேரும் காட்டுப்பன்றியை வேட்டையாடி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி டி.என். புதுக்குடி பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டுப் பன்றியை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    காட்டுப்பன்றி வேட்டை

    அதனைத் தொடர்ந்து சங்கரன்கோவில் வனசரக அலுவலர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் வனவர்கள் மகேந்திரன், குமார், வனக்காப்பாளர்கள் முத்துப்பாண்டி, முருகேசன், அனிதா, வேட்டை தடுப்பு காவலர்கள் மாரியப்பன், தாசன் ஆசிர்வாதம் ஆகி யோர் இரவு நேரத்தில் டி.என். புதுக்குடி வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சிந்தா மணியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சண்முகராஜ் (வயது 27), புளியங்குடியை சேர்ந்த கணேசன் மகன் மகேஷ்குமார் (26) ஆகியோர் காட்டுப் பன்றியை வேட்டையாடி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். அவர்களை மடக்கி பிடித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ரூ. 50 ஆயிரம் அபராதம்

    இதைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் 2 பேருக்கும் ரூ 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • விதிகளை மீறி செயல்பட்ட 21 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
    • வெளிநாடுகளில் இருந்த இறக்குமதி செய்யப்படும் பொட்டலப்பொருட்களில் உரிய விபரங்கள் இல்லாமல் விற்பனை செய்பவர்கள் மீதும் சட்ட விதகளின்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகள், எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகம் செய்யும் கிடங்குகள், பேக்கரி, பால் மற்றும் பால் பொருட்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட், லைட்டர் ஆகியவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி தலைமையில் எடையளவு ஆய்வாளர்கள் திவாகரன், சாந்தி, தேவேந்திரன், சம்பத் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டர். இந்த ஆய்வானது 59 நிறுவனங்களில் நடைபெற்றது. இதில் 21 நிறுவனங்கள் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் சட்டமுறை எடையளவுகள் விதிகளுக்கு முரண்பாடாக பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த 21 நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மேற்படி நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மூர்த்தி கூறியதாவது:- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் மூலம் உரிய உரிமம் பெறாமல் பொருட்களை பொட்டலமிட்டு விற்பனை செய்பவர்கள் மீதும், மின்னணு தராசுகள் உட்பட அனைத்து விதமான எடை அளவைகள் உரிய காலத்தில் மறு முத்திரையிடாமல் பயன்படுத்துபவர்கள் மீதும், அதிகபட்ச சில்லறை விற்பனைக்கு கூடுதலாக விற்பனை செய்பவர்கள் மீதும், எடைக்குறைவாக விற்பனை செய்பவர்கள் மீதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்த இறக்குமதி செய்யப்படும் பொட்டலப்பொருட்களில் உரிய விபரங்கள் இல்லாமல் விற்பனை செய்பவர்கள் மீதும் சட்ட விதகளின்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று விற்பனை நிறுவன உரிமையாளர்களிடம் எச்சரிக்கை விடுத்தார்.


    ×