என் மலர்
நீங்கள் தேடியது "Diwali"
- விழா காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது அரசின் தொடர் நடவடிக்கை.
- முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது.
பெரம்பலூர்:
தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரும் 24-ந்தேதி ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்படும். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
செல்போன் செயலி மூலமாக பதிவு செய்து பயணிப்பவர்களை அரசால் எதுவும் செய்ய முடியாது. அதுகுறித்து புகார் அளித்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,
விழா காலங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுவது அரசின் தொடர் நடவடிக்கை. அந்த வகையில் கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறோம். சில நேரங்களில் பஸ்கள் தேவைப்படும் வழித்தடங்களில் புதிதாக சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கும், நாள் முழுவதும் பஸ்களை இயக்கிய பணியாளர்களைக் கொண்டு மீண்டும் இயக்குவதும் பாதுகாப்பற்றது.
அதனால், முக்கியமான விழா காலங்களில் தனியார் பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையின்போது பரீட்சர்த்தா முறையில் அந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டது. அதில், எந்தவித சிரமமும் ஏற்படவில்லை.
எனவே தீபாவளி பண்டிகையின்போது, தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசின் முக்கிய நோக்கம், பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு எவ்வித சிரமமும் இன்றி செல்ல வேண்டும் என்பது தான். விழாக்களை அவர்கள் விருப்பம் போல கொண்டாடுவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.
வழக்கமாக தமிழகத்தில் 20 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருவிழா காலங்களில் கூடுதலாக 4 அல்லது 5 ஆயிரம் பஸ்கள் இயக்க வேண்டும் என்றால், அதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் பஸ்களை வாங்கி நிறுத்தி வைத்திருக்க முடியாது. அதுபோன்ற நாள்களில் ஊழியர்களையும் நியமிக்க முடியாது.
அதனால் இடைக்கால நிவாரணமாகவே தனியார் பஸ்களை அரசு ஒப்பந்த அடிப்படையில், அந்தந்த வழித் தடங்களில் இயக்கப்படுவது தவிர்க்க முடியாதது. பொதுமக்கள் தனியார் பஸ்களை விட, அதிகமாக அரசுப் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.
முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உள்ளது. எனவே பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு, இதுபோன்ற இடைக்கால ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
பேட்டியின்போது கலெக்டர் கிரேஸ் பச்சாவ், அருண் நேரு எம்.பி., பிரபாகரன் எம்.எல்.ஏ. உடனிருந்தனர்.
- மதுரையை சேர்ந்த கார்த்திக் தீபாவளி சீட்டு பிடித்து வந்தார்.
- தீபாவளி சீட்டு பணத்தில் ரூ.3 லட்சத்தை மகன் கார்த்திக்கிடம் இருந்து அவரது தந்தை லோகநாதன் வாங்கியிருந்தார்.
மதுரை, அக்.16-
மதுரை வில்லாபுரம் பகுதியில் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அப்பள கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். லோகநாதனுக்கு கார்த்திக் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் கூட்டுக்குடித்தனமாக வசித்து வந்தனர்.
சமீபத்தில் கார்த்திக் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கார்த்திக் தீபாவளி சீட்டு பிடித்து வந்தார். இதற்காக அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோரிடம் பணம் வசூலித்து வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருந்தார். அதனை தீபாவளி பண்டிகையின் பணம் வசூலித்தவர்களுக்கு பலகாரம், பரிசுப்பொருள் மற்றும் வட்டியுடன் கொடுக்க திட்டமிட்டு இருந்தார்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீபாவளி சீட்டு பணத்தில் ரூ.3 லட்சத்தை மகன் கார்த்திக்கிடம் இருந்து அவரது தந்தை லோகநாதன் வாங்கியிருந்தார். தீபாவளிக்கு முன்னதாக அந்த பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் அவர் உறுதியளித்து இருந்தார். ஆனால் தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது வரை லோகநாதன் ரூ.3 லட்சத்தை திருப்பித்தரவில்லை.
இதுதொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு அந்த பணத்தை கார்த்திக் தந்தையிடம் கேட்டபோது மீண்டும் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்திக், தந்தை என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லோகநாதனை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
பின்னர் அவர் நேராக அவனியாபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கொலையுண்ட லோகநாதன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கார்த்திக்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீபாவளி சீட்டு பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பித்தராத தந்தையை மகனே கழுத்தை அறுத்துக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
- பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
- அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தீபாவளி இனிப்புகளை வழங்கவும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
சென்னை:
சென்னை, நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அனைத்து மாவட்ட ஆவின் பொது மேலாளா்கள் மற்றும் துணைப் பதிவாளா்களுடனான ஆய்வுக் கூட்டம் பால் வளத்துறை மற்றும் கதர்த்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜ கண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இல்லாத கிராமங்களில் புதிய சங்கங்களை உருவாக்குவது, சங்க உறுப்பினா்களுக்கு கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
மேலும், பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தடையின்றி பால் விநியோகம் செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
தீபாவளியை முன்னிட்டு ஆவின் சார்பில் காஜு பிஸ்தா ரோல், காஜு கட்லி, நெய் பாதுஷா, முந்திரி அல்வா, மிக்சர், முறுக்கு உள்ளிட்ட 6 சிறப்பு பல காரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு தேவைக்கேற்ப இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டை விட நிகழாண்டில் தீபாவளி விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்கவும், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான தீபாவளி இனிப்புகளை வழங்கவும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை முதன்மைச் செயலர் சத்யபிரத சாகு, பால்வளத்துறை இயக்குநா் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநா் சு. வினீத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.
- மக்களை கவரும் வகையில் கடைகளிலும் பல்வேறு சலுகை அறிவிப்புகளும் வெளியிட்டுள்ளனர்.
- பொதுமக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்கி செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
கோவை:
தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் சில நாட்களே இருப்பதால் கோவையில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஜவுளிக்கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், நகைக்கடைகள், மளிகை கடைகள், பலகார கடைகள் உள்பட அனைத்து கடைகளிலுமே மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
மக்கள் தங்களுக்கு தேவையான புதுத்துணிகள், வீட்டு உபயோக பொருட்களை வாங்கி செல்கின்றனர். மக்களை கவரும் வகையில் கடைகளிலும் பல்வேறு சலுகை அறிவிப்புகளும் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பகல் நேரங்களில் கடைவீதிக்கு செல்ல முடியாதவர்களின் வசதியை கருத்தில் கொண்டு நள்ளிரவு 1 மணி வரை கடைகளை திறக்க கோவை மாநகர போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாநகரில் உள்ள கடைவீதிகளில் தற்போது கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கும், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன ஊழியர்களின் அன்றாட வேலை பாதிக்காத வகையில் கடைவீதிக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக கடை மற்றும் வியாபார நிறுவனங்களின் விற்பனை நேரத்தை அதிகரிப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தீபாவளி பண்டிகை வரை கோவை மாநகரில் உள்ள அனைத்து வியாபார தளங்களும் வழக்கமான நேரத்தை விட கூடுதலாக நள்ளிரவு 1 மணி வரை செயல்பட தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்கி செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலீசாரின் இந்த அறிவிப்பு வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் அனுமதிக்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
- ஆடுகளை வாங்க வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் திரண்டிருந்தனர்.
- இந்தாண்டு சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
எட்டயபுரம்:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும்.
கிராமப்புறங்களில் வளரும் ஆடுகள் இந்த சந்தைக்கு கொண்டு வரப்படுவதால், நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும்.
ரம்ஜான், தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகளை விற்பனை அதிகமாக நடக்கும்.
வருகிற 31-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதையொட்டி நேற்று காலை முதல் எட்டயபுரம் சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆடுகளை வாங்க வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் திரண்டிருந்தனர். ஆடுகள் கிலோ ரூ.800 என்ற விலையில் ரூ.7 ஆயிரம்முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனையானது.
இதுகுறித்து ஆடு வாங்க வந்த வியாபாரி உதயகுமார் கூறும்போது, ''எட்டயபுரம் சந்தைக்கு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விலையும் கடந்தாண்டை விட அதிகமாகவே உள்ளது. ரூ.7ஆயிரம் விலையுள்ள ஆடு ரூ.30 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
எட்டயபுரம் சந்தைக்கு இந்தஆண்டு வெள்ளாடுகள், நாட்டு செம்மறி ஆடுகள், மயிலம்பாடி, குறும்பை, சீனி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வியாபாரிகளும் அதிகம் வந்துள்ளனர். ஆடுகளின் விலை தான் மிகவும் அதிகமாக உள்ளது. 10 கிலோ எடையுள்ள குட்டியை ரூ.10 ஆயிரம் வரை சொல்கின்றனர். இந்தாண்டு சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்றார்.
- வாரசந்தையில் இன்று மட்டும் ஆட்டு சந்தையில் மட்டும் 3 மணிநேரத்தில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக தெரிகிறது.
- ஆடுகள் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரித்து விற்பனை செய்தனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரசந்தை தமிழகத்தின் 2-வது பெரிய வாரசந்தையாகும். இந்த வாரசந்தையில் குண்டூசி முதல் தங்கம் வரையில் விற்பனை செய்யப்படும் முக்கிய சந்தையாகும்.
இந்த சந்தையானது ஞாயிற்றுகிழமை தோறும் கூடுவதால் இந்த சுற்றுவட்டார கிராம மக்கள் தங்களுடைய விளை நிலங்களில் வளர்க்கப்படுகின்ற தானியங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவைகளை விற்பனைக்காக கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.
இந்நிலையில் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் இந்த வார சந்தைக்கு தனி மவுசு உண்டு. இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பெரும்பாலான விவசாயிகள், வியாபாரிகள் வர்த்தக ரீதியாக ஆடு, மாடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வந்து இங்கு விற்பனை செய்வது வழக்கம்.
தற்போது இந்த வாரசந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்காக இன்று கொண்டு வந்துள்ளனர்.
செம்மறியாடு, வெள்ளாடு, மறிக்கை என சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக வியபாரிகள் கொண்டு வந்துள்ள நிலையில் அதிகாலை தொடங்கிய வார சந்தை தற்போது விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, ஈரோடு, பொள்ளாச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர்.
ஒரு கிடா ஆடு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் பெண் ஆடுகள் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரையிலும் விற்பனையானதால் ஆடு வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாரசந்தையில் இன்று மட்டும் ஆட்டு சந்தையில் மட்டும் 3 மணிநேரத்தில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதாக தெரிகிறது.
ஆடுகள் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்பதால் ஆட்டு இறைச்சியின் விலை அதிகரித்து விற்பனை செய்தனர்.
வழக்கமாக ஒரு கிலோ 750 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் தற்போது பண்டிகை காலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
சராசரியாக தற்போது தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்குவதால் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் வாரச்சந்தை நடைபெறும் இடம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
இந்த சந்தைக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு அசம்பாவிதம் ஏற்படாத வகையில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் சந்தை வளாகம் சுற்றிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
- பஸ் முனையத்திற்குள் உள்ள பஸ்கள் வெளியே போக முடியாமல் நின்றதால் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
- பஸ் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று முன்தினம் முதல் பயணத்தை தொடங்கினர். சென்னையில் இருந்து 2 நாட்களில் அரசு பஸ்களில் மட்டும் 3.5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாகவும் ஆம்னி பஸ்களில் 1 லட்சம் பேர் சென்றதாகவும் தெரிகிறது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு, மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்களும் வண்டலூர் வழியாக சென்றது. இதேபோல 1,400 ஆம்னி பஸ்களும் சேர்ந்து இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற அரசு பஸ்கள், ஆம்னி பேருந்துகள் வண்டலூரில் நெரிசலில் சிக்கின.
இரவு 9 மணி முதல் 12 மணி வரை ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ்கள் அணிவகுத்து நின்றன.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்ல முடியாமல் போனதால் எல்லா பேருந்துகளும் சென்னை-திருச்சி சாலையில் நின்றன. நெரிசல் சீராக நள்ளிரவு 12 மணி ஆனது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்குள் செல்ல ஒரே வழிதான் உள்ளது. பஸ்கள் வெளியே வர 4 வழிகள் உள்ளன. இதனால் தான் பிரச்சனை ஏற்பட்டது.
பஸ் முனையத்திற்குள் உள்ள பஸ்கள் வெளியே போக முடியாமல் நின்றதால் உள்ளே செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள். சென்னையில் இருந்து புறப்பட்ட பஸ்கள் எந்த இடத்திலும் நெரிசலில் சிக்கவில்லை. கிளாம்பாக்கத்தில்தான் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வெளிவட்ட சாலையில் பஸ்கள் நீண்ட வரிசையில் நின்றன.
பஸ் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என அரசு நடவடிக்கை எடுத்தாலும் கூட ஏதாவது ஒரு இடத்தில் எதிர்பாராமல் நடக்கும் தவறுகளால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
- எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்" என்று கூறியுள்ளார்.
- தமிழசை சவுந்தரராஜன், "மாசு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசு களை வெடித்து கொண்டாடுங்கள்" என்று கூறியுள்ளார்.
சென்னை:
தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தமிழக மக்களுக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்" என்று கூறியுள்ளார்.
முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழசை சவுந்தரராஜன், "மாசு ஏற்படாத வகையில் பசுமை பட்டாசுகளை வெடித்து கொண்டாடுங்கள்" என்று கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் எம்.பி. சரத் குமார், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.சி.சேகர், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பா.இசக்கி முத்து, மாநில தலைவர் டாக்டர் ஆ.மணிஅரசன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- கொலை செய்யப்பட்டவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள கஜுலுரு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் சின்னி, பேரன் ராஜு. இவர்கள் 3 பேரும் தலை நசுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்களுடைய கைகளில் அரிவாள்கள் இருந்தன.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரமேஷ் குடும்பத்தினருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினருக்கும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேரும் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
- பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பலர் அதிகளவில் பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.
- ஆன்லைனில் பட்டாசுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
கோவை:
கோவை மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டன. கவுண்டம்பாளையம், சாய் பாபா காலனி, கணபதி, டவுன்ஹால், பீளமேடு, ராமநாதபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் 370-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதுதவிர, ஊரக பகுதிகளில் 360-க்கும மேற்பட்ட பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த பட்டாசு கடைகளில் கடந்த வாரம் முதல் விற்பனை தொடங்கினாலும், சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் ஊதியம் வழங்க காலதாமதம் செய்தது. இதனால் தீபாவளிக்கு 4 நாட்களுக்கு முன்பு முதல் தான் பட்டாசு விற்பனை சூடுப்பிடித்தது. பட்டாசு விலையில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாத நிலையில் பெற்றோர் குழந்தைகளுடன் சென்று பட்டாசுகளை வாங்கி சென்றனர்.
சிவகாசியில் இருந்து நேரடியாக பட்டாசு கொள்முதல் செய்தவர்கள் அதிரடி சலுகை என அறிவித்து 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பனை செய்தனர். நடப்பாண்டில், பேன்சி ரக பட்டாசுகளையும், வாணவேடிக்கை பட்டாசுகளையும் பொதுமக்கள் அதிகளவில் விரும்பி வாங்கியுள்ளனர். குழந்தைகள் வழக்கம் போல் கம்பி மத்தாப்பு, தீப்பொறி மத்தாப்பு, பிஜிலி, சங்கு சக்கரம் போன்ற வெடிகளை வாங்கி சென்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பலர் அதிகளவில் பட்டாசுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. தவிர, ஆன்லைனில் பட்டாசுகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை இளைஞர்கள் பலர் வாங்கியதால், கடைகளில் பெரிய அளவில் பட்டாசு விற்பனையானது நடக்கவில்லை என கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 80 சதவீதம் பட்டாசு விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட பட்டாசு விற்பனையாளர் நலச்சங்கத்தின் நிர்வாகி கூறுகையில், "மாநகரில் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 50 கடைகளுக்கு மேல் அதிகமாக பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடைகள் அதிகரித்து இருந்தாலும், எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை நடந்தது. அதாவது கடைகளில் 80 சதவீதம் பட்டாசு வரை விற்பனை நடந்துள்ளது. பெரும்பாலான கடைகளில் பட்டாசுகள் பெருமளவில் விற்பனையாகி உள்ளது" என்றார்.
- சிறப்பு பஸ்கள் மூலம் 5.76 லட்சம் பேர் பயணம் செய்து இருந்தனர்.
- பல்வேறு நகரங்களில் இருந்து இந்த பஸ்கள் சென்னைக்கு வர உள்ளன.
சென்னை:
தீபாவளி பண்டிகை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதற்காக 12,846 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி லட்சக்கணக்கான மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். இதையொட்டி தமிழக அரசு போக்குவரத்து துறை 28-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை சிறப்பு பஸ்களை இயக்கியது. சிறப்பு பஸ்கள் மூலம் 5.76 லட்சம் பேர் பயணம் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முடித்து விட்டு இன்று முதல் அவரவர் ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் புறப்பட்டு சென்னைக்கு திரும்புவார்கள்.
இதனை கருத்தில் கொண்டு 12,846 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. குறிப்பாக பல்வேறு நகரங்களில் இருந்து இந்த பஸ்கள் சென்னைக்கு வர உள்ளன.
இந்த சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய இன்று ஒரே நாளில் 75 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு tnstc.in அல்லது TNSTC அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை பயன்படுத்தி முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும் என்றும் அதில் பதிவிட்டுள்ளார். இந்த முன்பதிவு இதுவரை இலலாத ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.