என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தல்"

    • விழுப்புரம் அருகே லாரியில் கடத்திய ரூ. 15 லட்சம் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கெங்கிராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலத்திலிருந்து விழுப்புரம், கடலூர் , காஞ்சிபுரத்திற்கு மது பாட்டில்கள் கடத்தல் உள்ளிட்டவை ஏராளமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பதவி ஏற்றதில் இருந்து மது, போதை பொருள்கள் கடத்தல் விற்பனை உள்ளிட்டவைகளை அடியோடு ஒடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  இந்நிலையில் இன்று அதிகாலை புதுவையில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் வளவனூர் கெங்கிராம்பாளையம் மதுவிலக்கு சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை போலீசார் நிறுத்த முயற்சித்த போது நிற்காமல் வேகமாக சென்றது. உடனே மதுவிலக போலீசார் சினிமா பாணியில் லாரியை துரத்தி சென்றனர். அப்போது குடுமியான்குப்பம் பகுதி அருகே லாரியை நிறுத்திவிட்டு 2 பேர் பேரும் தப்பித்து சென்றனர்.

    லாரியின் பின்னால் துரத்தி சென்ற போலீசார் சென்று பார்த்தபோது லாரி மட்டும் பள்ளத்தில் இருந்தது. உடனே மதுவிலக்கு போலீசார் சோதனை செய்ததில் லாரியின் உள்ளே நூதன முறையில் 155 அட்டைப்பெட்டியில் புதுவை மது பாட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட போலி மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே இது குறித்து தகவல் அறிந்த வளவனூர் போலீசார் மற்றும் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் விழுப்புரம் மதுவிலக்கு போலீசாரிடம் லாரியுடன் போலி மதுபான பாட்டிலும் பறிமுதல் செய்து ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து இதை கடத்தி வந்த நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

    • பசுவந்தனை போலீசார் ராஜீவ் நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • 3 பேரையும் போலீசார் கைது செய்து, 36 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்

    புதியம்புத்தூர்:

    பசுவந்தனை இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் பசுவந்தனை -கோவில்பட்டி ரோட்டில் ராஜீவ் நகர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது29), மேல முடிமன் வடக்கு தெருவை சேர்ந்த லட்சுமண பெருமாள் (42), துரைசாமி புரம் தெற்கு தெருவை சேர்ந்த அழகுராஜ் (35) ஆகியோர் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகை யிலையை கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.13,200 மதிப்புள்ள 36 கிலோ புகையிலை பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

    • ஒரு தனியார் நிறுவனத்தில் லோடு பெற்றுக்கொள்ள சிபாரிசு செய்தார்.
    • டிரைவர் போலி ஆவணங்கள் கொடுத்து தன்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்தார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அண்ணாமலைநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (52). இவர் டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 28-8-2022 அன்று ஒரு லாரி டிரைவர் அவரிடம் வந்து தனது லாரிக்கு லோடு கேட்டார். இதனைத்து அவரிடம் செல்வகுமார் ஆவணங்களை பெற்றுக்கொண்டு, ஓசூர் அருகே கதிரேப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் லோடு பெற்றுக்கொள்ள சிபாரிசு செய்தார்.

    பின்னர் அந்த லாரி டிரைவர், தனியார் கம்பெனி யிருந்து ரூ.15 லட்சத்து 33,304 மதிப்பிலான 19.5 டன் இரும்புக் குழாய்களை ஏற்றிக்கொண்டு சென்றார்.

    அந்த இரும்புக்குழாய்கள் லோடு, திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டியது ஆகும். ஆனால் இதுநாள் வரை, அந்த டிரைவர் இரும்பு குழாய் லோடை, அங்கு ஒப்படைக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி யடைந்த செல்வகுமார், சம்பந்தப்பட்ட டிரைவர் போலி ஆவணங்கள் கொடுத்து தன்னை ஏமாற்றி விட்டதை உணர்ந்தார்.

    இது குறித்து அவர் நேற்று ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை தேடி வருகிறார்கள்.இச்சம்பவம், ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் நாகூர் மீரான் (வயது 29 )
    • நாகூர் மீரான் தனது சகோதரியுடன் பேசி கொண்டு இருந்த போது 4 பேர் அவரை கடத்தி சென்றனர்.

    திருச்சி,

    திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன். இவரது மகன் நாகூர் என்கிற நாகூர் மீரான் (வயது 29 ).இவர் சம்பவத்தன்று இ.பி.ரோடு அந்தோணியார் கோவில் தெரு ஆர்ச் அருகே தனது சகோதரி தாஜ் நிஷாவுடன் பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த திருச்சி பட்டவர்த்ரோடு பகுதியை சேர்ந்த சக்திவேல், விருமாண்டி, அரசு, டேஞ்சர் பாலா ஆகிய 4 பேரும் நாகூர் மீரானை கடத்தி சென்றனர். இதுகுறித்து நாகூர் மீரானின் சகோதரி தாஜ் நிசா கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்கு பதிந்து நாகூர் மீரானை கடத்திச் சென்ற 4 பேரையும் தேடி வருகின்றனர். பட்டப் பகலில் வாலிபர் கடத்தப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்திய கடலோர காவல்படையினர் நடவடிக்கை.
    • 4 படகுகளில் இருந்த 104 மூட்டை பீடி இலைகள் பறிமுதல்.

    மன்னார் வளைகுடாவில் வஜ்ரா கப்பல் மூலம் இந்திய கடலோர காவல்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது சர்வதேச கடல் எல்லைக்கு அருகே 4 படகுகளை கண்ட அவர்கள் அதனை வழிமறித்தனர். அந்த படகுகளில் இருந்த மீனவர்கள், கடலோர காவல்படையினரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர், அவர்களை விரட்டி பிடித்த கடலோர காவல்படையினர் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

    விசாரணையில் இரண்டு இந்திய படகுகள் மற்றும் இரண்டு இலங்கை படகுகள் மூலம் பீடி இலையை கடத்த முயன்றது தெரிய வந்தது. இந்த 4 படகுகளிலும் சுமார் 2.8 கிலோ எடை கொண்ட 104 மூட்டை பீடி இலைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்,பின்னர் உள்ளூர் அதிகாரிகளிடம் மீனவர்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகுகளையும் ஒப்படைத்தனர். அந்த மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

    • போலீசாரும், வருவாய் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தலை தடுத்து வருகின்றனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. இது தொடர்பாக போலீசாரும், வருவாய் அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கடத்தலை தடுத்து வருகின்றனர்.

    நேற்று தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் பரசேரி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக ஒரு ஜீப் வேகமாக வந்தது.

    அந்த ஜீப்பினை நிறுத்தும்படி அதிகாரிகள் கை காட்டினர். ஆனால் ஜீப் நிற்காமல் சென்றது. இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் விரட்டிச் சென்று ஜீப்பை மடக்கினர். அப்போது ஜீப்பை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    இதனை தொடர்ந்து வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் மற்றும் ஊழியர்கள் ஜீப்பை சோதனை செய்தனர். அப்போது ஜீப்பில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி மறைத்து வைத்து கேரளாவுக்கு கடத்துவது தெரியவந்தது.

    இதையடுத்து வாகனத்து டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கபட்டது. ஜீப் வட்ட வழங்கல் அலுவல கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது

    • ராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் வந்து பார்த்த போது மாணவியை காணவில்லை.
    • மேல்பட்டாம்பாக்கம் தமிழ்செல்வன் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது

    கடலூர்:

    விழுப்புரம் ஜி.ஆர். பி. நகரை சேர்ந்த 17 வயது இளம்பெண்மேல் பட்டாம்பாக்கம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்நேற்று தனது அண்ணனுடன் பஸ்சில் ஏறினார். அப்போது விழுப்புரம் செல்லும் போது அண்ணன் முன்பக்கமும், மாணவி பின் பக்கமும் உட்கார்ந்து சென்றனர். ராசாப்பாளையம் பஸ் நிறுத்தம் வந்து பார்த்த போது மாணவியை காணவில்லை.

    இவரை ஓடும் பஸ்சில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் தமிழ்செல்வன் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாயார் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) வழக்கு பதிவு செய்து கடத்திச் செல்லப்பட்ட மாணவியை வலை வீசி தேடி வருகிறார்.

    • செங்கிப்பட்டி அருகில் உள்ள முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை அருகே கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
    • இதன் மதிப்பு சுமார் 1,80,000 ருபாய் ஆகும். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சை -திருச்சி சாலையில் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி கொண்டு வந்து கொண்டிருப்பதாக செங்கிப்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன் மேற்பார்வையில், செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்இன்ஸ்பெக்டர் ரெத்தினசாமி மற்றும் போலீசார் தஞ்சை -திருச்சி சாலையில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தினர்.

    இந்நிலையில் செங்கிப்பட்டி அருகில் உள்ள முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை அருகே கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து போலீஸாரை பார்த்ததும் காரில் இருந்த இரண்டு பேர் காரை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதனையடுத்து காரை போலீஸார் சோதனை மேற்கொண்ட போது அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

    கார் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதன் மதிப்பு சுமார் 1,80,000 ருபாய் ஆகும். இது குறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் தப்பி ஓடிய இருவரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அதிகாரிகள் மடக்கினர்
    • காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலத்திற்கு குமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் இருந்து ரேஷன் பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வருவாய் அதிகாரிகளும், போலீசாரும் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது சோதனையில் கடத்தல் தடுக்கப்பட்டு ரேஷன் பொருட்கள் மீட்கப்படுவதோடு கடத்தல் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    நேற்று விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு ஆற்றூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தே கத்துக்கு இடமாக சொகுசு கார் வந்தது.

    அந்த காரை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் குழு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று மாறப்பாடி பகுதியில் காரை மடக்கியது.

    அப்போது காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து அதி காரிகள் காரை சோதனை செய்தனர்.அப்போது காருக்குள் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    தொடர்ந்து காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. கடத்த லுக்கு பயன்படுத்திய கார் வட்டாட்சியர் அலுவலக த்தில் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? ரேஷன் அரிசியை கடத்தியது யார்? என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • கடத்தல் பிரிவில் (இந்திய தண்டனை சட்டம் 366 ஏ) வழக்குப் பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மணவாளக்குறிச்சி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி நாகர்கோவில் அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வருகிறார்.

    கடந்த 7-ந்தேதி இவர் வழக்கம்போல் கல்லூ ரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. வீட்டினர் உறவினர் மற்றும் நண்பர் கள் வீடுகளில் தேடியும் மாணவி குறித்து தகவல் கிடைக்கவில்லை. தொடர்ந்து மாணவி குடும் பத்தினர் துப்பு துலக்கியதில், அவர் தூத்துக்குடி மேற்கு கதிர்வேல் நகரை சேர்ந்த உறவினர் அருண் (24) என்பவர் கடத்தி சென்றதாக தெரிய வந்தது.

    உடனே மாணவி குடும்பத்தினர் தூத்துக்குடி சென்று அருண் வீட்டில் கேட்டபோது, அவர்கள் மாணவி அங்கு இல்லை என கூறி மாணவியை மறைத்து வைத்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவியின் தந்தை குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தூத்துக்குடியை சேர்ந்த அருண், அவரது தாய், தந்தை மற்றும் சகோதரர் ஆகிய 4 பேர் மீது கடத்தல் பிரிவில் (இந்திய தண்டனை சட்டம் 366 ஏ) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு வாரத்தில் 447 குவிண்டால் ரேசன் அரிசி கடத்தல்.
    • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்கள் பறிமுதல்,

    தமிழக அரசின் பொது விநியோகத் திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் உணவு பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று வருவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.

    இதை தடுக்கும் வகையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு, ரேசன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 14.11.2022 முதல் 20.11.2022 வரையிலான ஒரு வார காலத்தில் கள்ளச் சந்தையில் விற்பதற்காக கடத்தப்பட இருந்த ரூ, 53,71,209/- மதிப்புள்ள 9447 குவிண்டால் ரேசன் அரியை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    மேலும் 25 லிட்டர் ரேசன் மண்ணெண்ணெய், 144 கிலோ கோதுமை, இலவச எரிவாயு திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருந்த 41 எரிவாயு உருளைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட 193 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர்.
    • மது பாட்டில்கள் சாராயம் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலத்திலிருந்து வானூர் மரக்காணம் திண்டிவனம் விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாராயம், மது பாட்டில் கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் விதமாக போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றார். நேற்று இரவு புதுவையில் இருந்து மயிலம் அருகே ரங்கநாதபுரம் மெயின் ரோட்டில் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. உடனே போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை மடக்கி அதில் சோதனை செய்தனர்.சோதனையில் மோட்டார் சைக்கிளில் 20 லிட்டர் அளவுள்ள 4 சாராயப் பாக்கெட்டுகள் மற்றும் 25 லிட்டர் சாராயக்கேன் இருப்பது தெரியவந்தது.

    உடனே போலீசார் சாராய கேன் மற்றும் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வாலிபரிடம் விசாரணை செய்ததில் அவர் புதுவை மாநிலம் சந்தை புது குப்பம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (வயது 37) சாராய வியாபாரி என்பதும் தெரிய வந்தது. இவர் புதுவையில் இருந்து சாராயம், மது பாட்டில்களை பலமுறை கடத்தி வந்தது தெரியவந்தது. புதுவை மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் மது பாட்டில்கள் சாராயம் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர். 

    ×