search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tahsildar dies"

    புதுக்கோட்டை அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற தாசில்தார், விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PudukkottaiAccident
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் பார்த்தீபன் (வயது 52). நேற்றிரவு விராலிமலை சூரியூர் பஞ்சாயத்து வில்லாரோடை கிராமத்தில் உள்ள கோரையாற்றில் மர்மநபர்கள் சிலர் மணல் கடத்துவதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் விராலிமலை வருவாய் ஆய்வாளர் முத்துக்காளை, கிராம உதவியாளர்கள் மதி, பாலுச்சாமி, டிரைவர் சரவணன் ஆகியோருடன் காரில் வில்லாரோடை பகுதிக்கு சென்றார். அங்கு சென்று பார்த்த போது மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த யாரும் இல்லை. இதையடுத்து அவர்கள் இன்று அதிகாலை அலுவலகத்திற்கு திரும்பினர்.

    விராலிமலை ராஜகிரி குளவாய்ப்பட்டி பகுதியில் வரும் போது திடீரென நிலை தடுமாறிய கார் சாலையோரமுள்ள மரத்தில் மோதியது. இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த தாசில்தார் பார்த்தீபன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். வருவாய் ஆய்வாளர் முத்துக்காளை, கிராம உதவியாளர்கள் மதி, பாலுச்சாமி, டிரைவர் சரவணன் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாசில்தாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் முன்பக்க டயர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டிரைவர் தூங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததா? அல்லது தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை கொலை செய்யும் நோக்கில் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் விரட்டியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் விபத்துக்கான காரணம் குறித்து முழு விவரம் வெளியாக வாய்ப்புள்ளது.

    விபத்தில் பலியான தாசில்தார் பார்த்தீபனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். புதுக்கோட்டை காந்திநகரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் மணல் கடத்தலை தடுக்க சென்ற அவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PudukkottaiAccident
    ×