search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu Districts"

    காற்றழுத்த தாழ்வு பகுதியால் அதிதீவிர கனமழை பெய்யும் என வெளியிடப்பட்ட எச்சரிக்கை திரும்ப பெறப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #RedAlert #RedAlertWithdrawn #TNRains #IMD
    சென்னை:

    அரபிக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறும் என்றும், இதன் காரணமாக 7-ம் தேதி தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதிகள் மற்றும் கர்நாடக பகுதிகளில் அதிதீவிர கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில், தற்போதைய வானிலை  நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-



    நேற்று உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் இருக்கிறது. எனவே, நாளை அதி தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை. எனவே, தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்ப பெறப்படுகிறது.

    எனினும், இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் 8-ம் தேதி வரை அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.  

    கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு இன்று முதல் 8-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #RedAlert #RedAlertWithdrawn #TNRains #IMD 
    ×