search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu government job"

    உடல் உறுப்பு தானம் செய்ய முன்வருபவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் சலுகைகளில் முன்னுரிமை அளிக்க திட்டம் உள்ளது’ என்று டெல்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #OrganDonate #GovernmentJob #MinisterVijayaBaskar
    புதுடெல்லி:

    தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு சார்பில், 9-வது இந்திய உறுப்பு தான நாள் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    அந்த வகையில் முதலிடத்துக்கான விருது தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரிகள் அஷ்வின்குமார் சவுவே மற்றும் அனுபிரியா பட்டேல் ஆகியோரிடம் இருந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உறுப்பு தானத்துக்காக ஏற்கனவே 3 முறை தமிழக அரசு விருது பெற்று இருக்கிறது. தற்போது தொடர்ச்சியாக 4-வது முறையாக விருது பெற்றதில் பெருமைப்படுகிறோம்.

    உறுப்பு தானத்தில் 1,198 கொடையாளர்கள் மூலம் 6,886 பேர் மறுவாழ்வு பெற்று இருக்கிறார்கள். இருதயம், கல்லீரல், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை அதிகமாக மேற்கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

    உலக அளவில் சொற்பமாக நடைபெறக்கூடிய கைகள் மாற்று அறுவை சிகிச்சையும் தமிழகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் 2 கைகளையும் இழந்த ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் எந்தவித கட்டணமும் இல்லாமல் கைகள் பொருத்தப்பட்டன.

    தற்போது தமிழ்நாட்டில் 4,674 பேர் மாற்று சிறுநீரகத்துக்காக காத்திருக்கிறார்கள். 416 பேர் கல்லீரல் மாற்றுக்காகவும், 40 பேர் இருதய மாற்றுக்காகவும், 33 பேர் நுரையீரல் மாற்றுக்காகவும் காத்திருக்கிறார்கள். 2 கைகள் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து 14 பேர் கைகள் மாற்று அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

    இந்த எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். உறுப்புகள் தானம் அதிகமாகும்போது, உறுப்புகளுக்காக காத்திருப்பவர்களுக்கான மறுவாழ்வை உறுதிப்படுத்த முடியும். உறுப்புதானம் செய்ய முன்வருபவர்களை அரசு சார்பில் பாராட்டி கவுரவிக்கிறோம். அவர்களை வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகளில் முன்னுரிமை பட்டியலில் கொண்டுவரவும் ஒரு திட்டம் உள்ளது. இது உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் புயல் பாதித்த மாவட்டங்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத மாணவர்களுக்கு உதவுவதற்காக, விண்ணப்பிக்கும் தேதியை (கடைசி தேதி நவம்பர் 30-ந்தேதி) நீட்டிக்க கோருவீர்களா? என்ற கேள்விக்கு, அதுபற்றி “முதல்-அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம்” என்று பதில் அளித்தார்.

    தமிழகத்தில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி கேட்டதற்கு, “மதுரையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். அதற்கான நிதி ஒப்புதல் ஏற்கனவே பெறப்பட்டு விட்டது. ஏற்கனவே கூறியபடி, மந்திரிசபை ஒப்புதலுக்கான நடவடிக்கைகள் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்” என அமைச்சர் கூறினார். #OrganDonate #GovernmentJob #MinisterVijayaBaskar
    ×