search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Putulavan Scheme"

    • கல்வி தான் திருட முடியாத சொத்து.
    • தமிழ்நாட்டில் 234 தொகுதியும் என்னுடைய தொகுதிதான்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    அங்குள்ள கபாலீசுவரர் கலை-அறிவியல் கல்லூரியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாணவ-மாணவிகள் 748 பேருக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று 10 மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    அத்துடன் இக்கல்லூரிக்கு 3 உதவி பேராசிரியர், 1 உடற்கல்வி இயக்குனர், 1 கண்காணிப்பாளர் ஆகியோ ருக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றி வந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வருகிறபோது என்னையே அறியாமல் ஒரு உற்சாகம், ஒரு ஊக்கம் ஒரு எழுச்சி ஏற்படுகிறது. கொளத்தூருக்கு வந்தாலே ஒரு புது எனர்ஜி ஏற்படுகிறது.

    எனக்காக கொளத்தூரை பாதுகாக்க கூடியவராக என் சார்பில் அமைச்சர் சேகர்பாபு இருந்து வருகிறார். கொளத்தூர் தொகுதியை பொறுத்தவரை முன் மாதிரி தொகுதியாக மாற்றி கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதியும் என்னுடைய தொகுதிதான்.

    அது ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, கூட்டணி கட்சியாக இருந்தாலும் எல்லா தொகுதியையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன்.

    அந்த அடிப்படை யில்தான் கொளத்தூர் தொகுதியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம், புதிய காவல் துணை ஆணையர் அலுவலகம், புதிய காவல் நிலையம், புதிய தீயணைப்பு நிலையம், புதிய சார்பதி வாளர் அலுவலகம் ஆகியவை விரைவில் அமைய இருக்கிறது.

    இது கொளத்தூர் தொகுதிக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டின் பல தொகுதி களுக்கு வர இருக்கிறது. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தொகுதிக்கு அவசரமாக நிறைவேற்ற தேவையான 10 திட்டங்களை கொடுக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன்.

    அது ஆளும் கட்சி மட்டு மல்ல 234 தொகுதியிலும் உள்ள சட்டமன்ற உறுப்பி னர்களும் இதை தருமாறு கேட்டுக் கொண்டேன். அதில் எதை இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றி தர முடியுமோ அதை நிறைவேற்றி தருகிறோம் என்று சொல்லி அந்த பணியை செய்து கொண்டிருக்கிறோம்.

    எந்த விருப்பு வெறுப்பின்றி எதிர்க்கட்சி தொகுதிகளுக்கும் முக்கியத் துவம் தந்து, திட்டங்களை எல்லாம் நாம் வரிசைப் படுத்தி செயல்படுத்தி வரும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. சட்டமன்ற தேர்தல் முடிந்து ஆட்சி பொறுப்பேற்ற நேரத்தில் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு நான் சொன்ன போது, இந்த ஆட்சி ஏதோ எங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்காக மட்டுமல்ல. ஓட்டு போட தவறியவர்களுக்கும் சேர்த்து எங்கள் ஆட்சி இருக்கும் என்று அன்றே சொன்னேன். அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

    பல்வேறு திட்டங்கள் அதில் குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் சேர்ந்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

    இதுவரை 1400-க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்திய ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்களை மீட்டுள்ளோம்.

    கோவில்கள் சார்பில் 10 கல்லூரிகளை உருவாக்கி இருக்கிறோம். இறைப்பணி யோடு சேர்த்து கல்விப் பணியையும் அறநிலையத் துறை செய்து வருகிறது.

    அறநிலையத் துறையாக மட்டுமல்லாமல் இது அறிவு துறையாகவும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் 748 மாணவர்-மாணவிகளுக்கு கல்வி கட்டணமும், கல்விக்கு தேவையான கருவிகளையும் வழங்கி இருக்கிறோம்.

    உங்களுக்கு மட்டுமல்ல கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் நாள் இந்த கல்லூரியை திறந்து வைத்ததில் இருந்து கடந்த 3 வருடத்தில் 1405 மாணவ-மாணவி களுக்கு இதேபோல் கல்வி கட்டணம் மற்றும் கருவிகளை வழங்கி இருக்கிறோம்.

    சாதி, மதம், பொருளாதாரம், சமுதாயச் சூழல் ஆகிய இது எதுவுமே ஒருவரின் கல்விக்கு தடையாக இருக்க கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம்.

    கல்விதான் உங்களிடம் இருந்து யாரும் திருட முடியாத சொத்து. இதைத் தான் நான் மாணவர்களிடம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். படிப்பு, படிப்பு, படிப்பு இது மட்டும்தான் உங்கள் கவனத்தில் இருக்க வேண்டும். அதற்காகத்தான் எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்படுத்தி கொண்டு வருகிறது.

    முக்கியமாக அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு வரும் மாணவி களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கக் கூடிய புதுமைப் பெண் திட்டம். இத்திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 73 ஆயிரம் மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர்.

    அடுத்து இதே போல் மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்க கூடிய தமிழ்ப் புதல்வன் திட்டம். அது வருகிற 9-ந்தேதி கோவையில் நான்தான் சென்று தொடங்கி வைக்க இருக்கிறேன்.

    நமது திராவிட மாடல் அரசு ஏற்படுத்தி தரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும். பேச்சுத் திறமை, எழுத்து திறமை, படைப்பு திறமை, நிர்வாக ஆற்றல், அறிவியல் பூர்வமான சிந்தனை புதிய கண்டு பிடிப்பு என மாணவ சமுதாயம் வளர வேண்டும். பட்டங்களோடு சேர்த்து அனைத்து திறமைகளையும் கொண்டவர்களாக நீங்கள் வளர வேண்டும்.

    அண்மையில் டாக்டர் குழும தலைவர் சந்திரசேகர் ஒரு பேட்டியில் குறிப்பிட்ட போது, உடல் நலத்தை பற்றி அக்கரையோடு அவர் பேசியிருக்கிறார். மாணவர்கள், இளைஞர்களுடைய ஒபிசிடி எனப்படும் உடல் எடை கூடி வருவதாக சொல்லி உள்ளார்.

    சாப்பாட்டு பழக்க வழக்கங்கள் துரித உணவுகள்தான் இதற்கு காரணம் என்று அவர் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

    சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். எனவே உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் படிக்க முடியும். திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில்தான் மாணவர்களும் இளைஞர்களும் விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    தமிழ்நாட்டு இளைய சமுதாயமானது கல்வியிலும், தனித்திறமைகளிலும், விளையாட்டிலும், உடல் நலத்திலும், சிறந்தவர்களாக வளர்ந்து மாபெரும் சக்தியாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×