search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "targeted"

    வெளிநாட்டு மண்ணில் இந்தியா மட்டும் தான் தோல்வியை சந்தித்து கொண்டிருக்கிறதா? என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கேள்வி எழுப்பியுள்ளார். #IndianTeam #RaviShastri
    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி நாளை மறுதினம் (புதன்கிழமை) பிரிஸ்பேன் நகரில் நடக்கிறது.

    அங்கு நேற்று நிருபர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம், ‘தென்ஆப்பிரிக்கா (1-2) மற்றும் இங்கிலாந்தில் (1-4) டெஸ்ட் தொடரை தாரைவார்த்த நிலையில், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது எந்த அளவுக்கு இந்தியாவுக்கு முக்கியமானது’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது சற்று கோபித்துக் கொண்டார்.

    “வெளிநாட்டு தொடர்களில் இந்தியா மட்டுமே தோல்வி அடைவது போல் கேள்வி கேட்கிறீர்கள். சமீப காலமாக நடந்த வெளிநாட்டு தொடர்களை உற்று பார்த்தால், பெரும்பாலான அணிகள் வெளிநாட்டில் சோபிக்கவில்லை என்பது தெரியும். 1990-களில் ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. 2000-ம் ஆண்டு வரை அந்த அணி வெளிநாட்டிலும் வெற்றிகளை குவித்தது. அதே போல் தென்ஆப்பிரிக்காவும் சில ஆண்டுகள் அசத்தியது. இவ்விரு அணிகளையும் தவிர்த்து கடந்த 5-6 ஆண்டுகளில் எந்த அணி வெளிநாட்டில் சாதித்தது என்று சொல்லுங்கள் பார்ப்போம். பிறகு இந்தியாவை மட்டுமே ஏன் குறி வைத்து கேட்கிறீர்கள்?” என்றார்.

    மேலும் ரவிசாஸ்திரி கூறுகையில் ‘வெளிநாட்டு போட்டி தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்கிறோம். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரில் முக்கியமான தருணத்தில் கோட்டை விட்டோம். அது குறித்து அணி கூட்டத்தில் விரிவாக விவாதித்து இருக்கிறோம். இவ்விரு தொடரின் முடிவுகளும் உண்மையான தாக்கத்தை பிரதிபலிக்கவில்லை என்றே சொல்வேன். ஏனெனில் உண்மையிலேயே சில போட்டிகள் நீயா-நானா? என்று கடும் நெருக்கமாக நகர்ந்தது. சில முக்கிய கட்டத்தில் தடுமாறியதால் தொடரை இழக்க வேண்டியதாகி விட்டது’ என்றார்.

    ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாததால் ஆஸ்திரேலிய அணி பலவீனமாகி விட்டதா? என்ற இன்னொரு கேள்விக்கு பதில் அளித்த சாஸ்திரி, ‘நான் அப்படி நினைக்கவில்லை. உள்ளூரில் எந்த அணியும் வலு குறைந்தது கிடையாது என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. வெளிநாட்டு அணிகள் இந்தியாவுக்கு வரும் போது 3-4 வீரர்கள் விளையாட முடியாமல் போவது உண்டு. ஆனாலும் யாரும் இந்தியா பலவீனமான அணி என்று சொன்னது இல்லை. மற்றவர்களின் கருத்து குறித்து எனக்கு கவலை இல்லை. தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி நன்றாக செயல்பட்டால், எந்த அணிக்கு எதிராக ஆடுகிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல’ என்றார்.

    இந்திய பந்து வீச்சு குறித்து பேசிய ரவிசாஸ்திரி, ‘கடந்த காலங்களில் நாங்கள் பார்த்தது போலவே ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் இருக்கும் பட்சத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உற்சாகமாக பவுலிங் செய்வார்கள். ஒரு அணியாக அனைவரும் உடல்தகுதியுடன் இருக்க வேண்டியது முக்கியம்.

    ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (காயத்தால் அவதிப்படுகிறார்) இல்லாதது உண்மையிலேயே பின்னடைவு தான். அவர் பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்படக்கூடியவர். அவர் இருந்தால் கூடுதலாக ஒரு பந்து வீச்சாளரை சேர்த்துக் கொள்ள முடியும். இப்போது இரண்டு விதமாக யோசிக்க வேண்டி உள்ளது. அவர் விரைவில் காயத்தில் இருந்து குணமடைந்து விடுவார் என்று நம்புகிறேன். அதே சமயம் இங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் ஜொலித்தால், ஹர்திக் பாண்ட்யா இல்லாத குறை பெரிய அளவில் தெரியாது.’ என்றார்.
    ×