search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tasmac Shop owners"

    கடலூர் மாவட்ட பகுதியில் சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்வதை கண்டறிந்தால் உரிமையாளர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கடலூர்:

    புதுவை மாநிலத்திலிருந்து கடலூர் மாவட்டத்துக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் புது புது வடிவில் கடத்தல் காரர்கள் கடத்தி வருகின்றனர். இதனால் தமிழக பகுதியில் சாராயம் மற்றும் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றது.

    எனவே கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பனை அதிகரிக்காமல் குறைந்தளவே விற்பனையாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி தடை செய்யப்பட்ட சாராயம் கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் ஏகபோகமாக விற்பனையாகி வருகிறது.

    இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்ட பகுதியில் இனிவருங்காலங்களில் புதுவை மாநில சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்வதை கண்டறிந்தால் அதற்கு உடந்தையாக இருக்கும் சாராயக்கடை மற்றும் மதுகடை உரிமையாளர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

    மேலும் முன்பு மது கடத்தல் சம்பந்தமாக போடப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை செய்து அதில் சாராயக்கடை மற்றும் மது கடை உரிமையாளர்கள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தால் குற்றப்பத்திரிகையில் அவர்களின் பெயர் சேர்க்கப்படும் அதன் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும் 20 பழைய வழக்குகளில் மதுக்கடை மற்றும் சாராய கடை உரிமையாளர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    புதுவை மாநிலத்தில் இருந்து தமிழகப்பகுதிக்கு மற்றும் சாராய கடைக்கு வருபவர்கள் பிடிபட்டால் அவர்களை மட்டுமே போலீசார் கைது செய்து வாகனம் மற்றும் மதுவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர். தற்போது மதுக்கடத்தலை தடுப்பதற்கு புதுவை மாநில சாராயக்கடை மற்றும் மது கடை உரிமையாளர்களை கைது செய்யப்படுவார்கள். என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் அறிவித்திருப்பதால் புதுச்சேரி மாநில பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
    ×