search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Test batsman"

    ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். #ViratKohli
    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் சோபிக்காவிட்டால் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழக்க நேரிடும் என்ற நெருக்கடியான சூழலில் விராட் கோலி அந்த டெஸ்டில் 123 ரன்கள் விளாசினார். இதன் மூலம் கூடுதலாக 14 புள்ளிகளை சேகரித்த கோலி மொத்தம் 934 புள்ளிகளுடன் முதலிடத்தை வலுப்படுத்தியுள்ளார். நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் 915 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்திலும் (892 புள்ளி) தொடருகிறார்கள். மற்றொரு இந்திய வீரர் புஜாரா 2-வது டெஸ்டில் ரன் குவிக்க தவறியதால், 30 புள்ளிகளை பறிகொடுத்துள்ளார். ஆனாலும் 816 புள்ளிகளுடன் மாற்றமின்றி 4-வது இடத்தை தக்கவைத்துள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சதங்கள் அடித்து தங்கள் அணியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்டெடுத்த இலங்கை வீரர்கள் குசல் மென்டிசும், மேத்யூசும் கணிசமான ஏற்றம் கண்டுள்ளனர். மேத்யூஸ் 24-வது இடத்தில் இருந்து 16-வது இடத்துக்கு வந்துள்ளார். குசல் மென்டிஸ் 18-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இதே டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 264 ரன்கள் குவித்து மலைக்க வைத்த நியூசிலாந்து வீரர் டாம் லாதம் 15 இடங்கள் எகிறி 22-வது இடத்தை பெற்றுள்ளார்.

    இந்தியாவின் ரஹானே 15-வது இடத்திலும் (3 இடம் ஏற்றம்), ரிஷாப் பான்ட் 48-வது இடத்திலும் (11 இடங்கள் அதிகரிப்பு), ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா 12-வது இடத்திலும் (ஒரு இடம் உயர்வு), டிம் பெய்ன் 46-வது இடத்திலும் (9 இடம் முன்னேற்றம்) இருக்கிறார்கள்.

    பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் டாப்-6 இடங்களில் மாற்றம் இல்லை. தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா (882 புள்ளி) முதலிடமும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது இடமும் (874 புள்ளி) வகிக்கிறார்கள். 3 முதல் 6 இடங்களில் முறையே பிலாண்டர் (தென்ஆப்பிரிக்கா), முகமது அப்பாஸ் (பாகிஸ்தான்), ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் (இருவரும் இந்தியா) ஆகியோர் இருக்கிறார்கள்.

    பெர்த் டெஸ்டில் மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 7 இடங்கள் உயர்ந்து 7-வது இடத்தை பிடித்துள்ளார். 4 விக்கெட்டுகள் வீழ்த்திய மற்றொரு ஆஸ்திரேலிய பவுலர் ஹேசில்வுட் 11-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் 8-வது இடத்திலும், மிட்செல் ஸ்டார்க் 15-வது இடத்திலும் உள்ளனர். டாப்-15 இடத்திற்குள் 4 ஆஸ்திரேலிய பவுலர்கள் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

    2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை அள்ளிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2 இடம் அதிகரித்து 21-வது இடத்தை பெற்றுள்ளார். இஷாந்த் ஷர்மா 26-வது இடத்திலும், பும்ரா 28-வது இடத்திலும் உள்ளனர்.  #ViratKohli
    ×