search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Textile policy"

    • ஓவர் டைம் நேரத்தை 115 மணி நேரமாக அனுமதிக்க வேண்டும்.
    • பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 55 சதவீதம் இருக்கிறது

    திருப்பூர் :

    ஜவுளித்தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக்கொள்கை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக மாநில அளவில் இயங்கும் தொழில் அமைப்பு பிரதிநிதிகளை அழைத்து சென்னையில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஒட்டுமொத்த பின்னலாடை தொழிலில் ஏற்பட்டுள்ள சவால்களை சமாளிக்கும் வகையில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் இக்கூட்டத்தில் பல்வேறு கோரி க்கைகள் முன்வைக்கப்பட்டன.

    பின்னலாடை நிறுவனத் தொழிலாளர்கள் ஓவர் டைம் வேலை பார்த்து, கூடுதல் வருவாய் ஈட்டுவதை பெரிதும் விரும்புகின்றனர். தொழிலாளர் தயாராக இருந்தும், தொழிற்சாலைகள் உரிய ஏற்பாடுகளை செய்தாலும், சட்ட விதிமுறைகள் முட்டுக்கட்டையாக இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி ஒரு காலாண்டில் 75 மணி நேரம் ஓவர் டைம் வேலை பார்க்க அனுமதிக்கப்படுகிறது.உற்பத்தியை குறித்த நேரத்தில் முடிக்கவும், தொழிலாளர் கூடுதல் வருவாய் பெறவும் வசதியாக ஓவர் டைம் நேரத்தை 115 மணி நேரமாக அனுமதிக்க வேண்டும். மகாராஷ்டிராவில் இத்தகைய நடைமுறை 2015 முதல் அமலில் உள்ளதால் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    பின்னலாடை தொழிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளர் வருகின்றனர். திறன் பயிற்சி பெற்ற தொழிலாளரால் உற்பத்தியை நேர்த்தியாக முடிக்க முடியும். அரசு திட்டங்கள் வாயிலாக, தொழிலாளர், தொழில் முனைவோர் திறன் பயிற்சி திட்டங்களை விரிவாக்கம் செய்ய வேண்டும். தேவையான தங்குமிட வசதியை உருவாக்க வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்கள் 60 கி.மீ., தொலைவு வரையில், பஸ் இயக்கி தொழிலாளர்களை அழைத்து வருகின்றன. இதனால் ஒட்டுமொத்த உற்பத்தி செலவு எகிறிவிடுகிறது. தமிழக அரசின் போக்குவரத்துக்கழகம், தொழிலாளர் வந்து செல்லும் வழித்தடங்களை கணக்கிட்டு காலை மற்றும் மாலை நேரத்துக்கு மட்டும் பதிவு செய்த தொழிலாளருக்காக சிறப்பு பஸ் இயக்கினால் போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். தொழில்துறையினரின் செலவுகளும் கட்டுக்குள் வரும். அதாவது வாடகை வாகனங்கள் போல் போக்குவரத்து கழகமே இயக்க திட்டமிடலாம்.

    பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கான தொழில்நுட்பங்களை அமல்படுத்த வசதியாக திருப்பூரில் ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும். செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி, உப்பு குறைவாக பயன்படுத்தி சாயமிடுவது,உப்பு இல்லாமல் சாயமிடுவது, குறைந்த தண்ணீரை பயன்படுத்தி சாயமிடுவது போன்ற தொழில்நுட்பங்களை கண்டறிய வேண்டும். சென்னையில் தோல் பொருட்களுக்கான ஆய்வுக்கூடம் இருப்பது போல் திருப்பூரில் பின்னலாடைக்கான ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகை திட்டங்களை செயல்படுத்துகின்றன. தமிழகத்தில் மத்திய அரசு சலுகை பெறுவோருக்கு மாநில அரசு சலுகை கிடைப்பதில்லை. ஒடிசா, குஜராத், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநில அரசுகள் மத்திய அரசு சலுகை பெறுவோருக்கு மாநில அரசின் திட்டங்களிலும் சலுகை வழங்குகிறது. தொழில்துறை மேம்பட எவ்வித நிபந்தனையும் இல்லாமல் மத்திய, மாநில அரசு சலுகை திட்டங்களால் பயன்பெறும் வாய்ப்பை உருவாக்க வேண்டும்.

    சாயக்கழிவை சுத்திகரிக்கும் ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்துக்கு சாய ஆலைகள் அதிகப்படியாக செலவளிக்கின்றன. பொது சுத்திகரிப்பு நிலையம், தனியார் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அதிக செலவு ஏற்படுகிறது. மின் கட்டண உயர்வால் உற்பத்தி செலவில் பெரும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. அடுத்தகட்டத்துக்கு நகர வட்டியில்லா கடன் உதவி அவசியம். மின்கட்டணம் கழுத்தை நெரிப்பதாக இருப்பதால் 75 சதவீத கட்டண சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 55 சதவீதம், பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய ஊன்று கோளாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தொழில் பூங்காக்களை உருவாக்கி கூடுதல் உற்பத்தி திறனை பெற வழிவகை செய்கின்றன. சர்வதேச கண்காட்சிகளில் திருப்பூர் நிறுவனங்கள் பங்கேற்றால் மட்டுமே புதிய வர்த்தக வாய்ப்புகளை வசப்படுத்த முடியும். எனவே அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஜவுளித்தொழிலை மேம்படுத்த புதிய ரகங்களை கொண்டு வர பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதன் ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:- திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள், 30 ஆயிரத்துக்கும் அதிகமான தானியங்கி தறிகள் உள்ளன.தினமும் ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன. இந்தியாவில் 70 சதவீத காட்டன் துணி உற்பத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களில் நடந்து வருகிறது. 60 சதவீத ஸ்பின்னிங் மில்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. ரேயான், பாலி காட்டன், பாலி விஸ்கோஸ் உள்ளிட்டவை உற்பத்தியாகின்றன.

    புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய ரகங்களை அறிமுகப்படுத்தி தொழிலை மேம்படுத்த திட்டம் உள்ளது. இதற்காக விரைவில் தனியாக அலுவலகம் அமைத்து, அதற்கான பணியாளர்கள் நியமிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் தொழில்நுட்பம் சார்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன் உற்பத்தியும் பெருகும்.இங்கு உற்பத்தியாகும் துணிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு மட்டுமன்றி ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை பயன்படுத்தி தொழிலை மேலும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்று வருகிறோம்.

    ஆர்டர்களை அதிகப்படுத்தவும், வாடிக்கையாளர்களை கவரவும் ஜவுளி தொழில் சார்ந்த குறும்படம் ஒன்றையும் தயாரித்து வெளியிட்டுள்ளோம். தொழில்நுட்ப பயிற்சி பெற்ற இளைஞர்கள் மற்றும் கல்வித்திறன் கொண்ட தொழிலாளர்கள் இத்தொழிலில் அதிகரித்தால் தொழில் மேலும் வளர்ச்சி அடையும்.இவ்வாறு சக்திவேல் கூறினார்.

    ×