search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thambidurai அரசு ஊழியர்கள்"

    ஓய்வூதிய திட்டத்துக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த பங்களிப்பு தொகை அவரவரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என தம்பிதுரை கூறியுள்ளார். #Thambidurai #ADMK
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கரூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 95 சதவீதம் அளவுக்கு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி விட்டனர். உயர்நீதிமன்றம் வேலை நிறுத்தம் தீர்வாகாது என்று தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசும் தனது நிதி நிலை குறித்து தெளிவாக மக்களிடம் எடுத்து கூறியுள்ளது. எதுவாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால் மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். மேலும் தேர்தலும் வர உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

    ஓய்வூதிய திட்டத்துக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த பங்களிப்பு தொகை குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. பிடித்தம் செய்த தொகை அவரவரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



    முன்னதாக கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கம்பநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் தேவை இல்லாதது. உயர்நீதிமன்ற வழிகாட்டலை மதித்து பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நம்புகிறோம். கோரிக்கைகளை முன்வைக்கட்டும், போராடட்டும். ஆனால் வேலை நிறுத்தம் தேவையில்லை. மாணவர்களின் படிப்பு பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளது.

    தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தேவைப்பட்டால் கூட்டணி குறித்து முடிவெடுக்கவே அ.தி.மு.க. சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி அ.தி.மு.க. என எந்த இடத்திலும் அவர்களும் சொல்லவில்லை. அ.தி.மு.க.வும் கூறியதில்லை. நட்பின் அடிப்படையில் பல கோரிக்கைகளை பா.ஜ.க. அரசிடம் முன் வைத்தோம்.

    குறிப்பாக ஜி.எஸ்.டி. நிலுவை தொகையான ரூ.5 ஆயிரம் கோடியை கேட்டோம். தரவில்லை. கஜா புயலுக்கு ரூ.15 ஆயிரம் கோடி கேட்டோம். அதுவும் வந்தபாடில்லை. தமிழகத்துக்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி என முதல்வர் கூறியுள்ளார். பா.ஜ.க. ஏதாவது நல்லது செய்துள்ளதா?. இதுவரை செய்யவில்லை.

    ரூ. 8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு மத்திய அரசு வரி விலக்கு அளிக்குமா?. பா.ஜ.க. தமிழகத்தில் கட்சியை வளர்க்க திட்டம் கொண்டு வந்தால் மட்டும் போதாது. தமிழகத்தில் திராவிடர்களின் கலாச்சாரத்தை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்காகத்தான் ஆசிரியர்கள். ஆசிரியர்களுக்காகவே மாணவர்கள் என்று வந்து விட்டால் கல்வி சீரழிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #ADMK
    ×