search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the BJP"

    மோடியின் பெயர், வளர்ச்சி, பாகிஸ்தானில் புகுந்து நடத்திய விமான தாக்குதல் ஆகியவை வெற்றியை பெற்றுத்தரும் என்று பாஜக நம்புகிறது. மொத்தத்தில், வெற்றியை ருசிக்க கடினமாக களப்பணியாற்ற வேண்டிய நிலையில் பாஜக இருப்பது தெளிவாகிறது. #BJP #PMModi
    பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், ஏப்ரல் 23-ந்தேதி பாராளுமன்ற மக்களவை தேர்தல் நடக்கிறது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில், மோடி அலை வீசியதை பயன்படுத்தி, குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், அந்த நிலைமை மாறி விட்டது.

    கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜகவுக்கு கடும் போட்டியை கொடுத்தது. அதற்கு முந்தைய 2012-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றிருந்தது. அதே சமயத்தில், பாஜகவின் பலம், 115-ல் இருந்து 99 ஆக குறைந்தது.

    கடந்த 30 ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சி பெற்ற அதிகபட்ச வெற்றி இதுவே ஆகும். அதன்பிறகு, இருதரப்பிலும் ஒருவரை ஒருவர் இழுக்கும் பணி நடந்தது. அதனால், இந்த பாராளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

    கடந்த 2017-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பார்த்தால், 8 மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி, பாஜகவை விட 14 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 68 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக பெற்றிருந்தது.

    இந்த 8 மக்களவை தொகுதிகளில், 7 தொகுதிகள் சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் ஆகிய பிராந்தியங்களில் அமைந்துள்ளன. எனவே, அந்த பிராந்தியங்களில் பாஜக பலவீனமாக இருப்பது உறுதியாகி உள்ளது. மேற்கண்ட 8 தொகுதிகளில், 2 தொகுதிகளில் மட்டும் தற்போதைய எம்.பி.க்களுக்கு பாஜக மீண்டும் ‘சீட்’ கொடுத்துள்ளது. ஒரு தொகுதியில் புதுமுகத்தை நிறுத்தி உள்ளது. மீதி 5 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. எனவே, பாஜக தடுமாறுவது போல் தோன்றுகிறது.



    சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து, சவுராஷ்டிரா பிராந்தியத்தில், செல்வாக்கு மிக்க சாதி தலைவர்களையும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் வளைக்கும் பணியை பாஜக தொடங்கியது. இதற்கு ‘மிஷன் தாமரை’ என்று பெயர் சூட்டப்பட்டது.

    இதன்படி, சவுராஷ்டிரா பிராந்தியத்தில், பிற்படுத்தப்பட்ட சமுதாய தலைவர் குன்வர்ஜி பவாலியா பாஜகவுக்கு இழுக்கப்பட்டு, மந்திரி பதவி அளிக்கப்பட்டது. 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், பாஜகவுக்கு தாவினர். இன்னும் 6 பேர் தாவ தயாராக இருப்பதாக தெரிகிறது. சவுராஷ்டிரா பகுதியில் அதிகமாக வாழும் அகிர் சமுதாயத்தினரிடையே செல்வாக்கு மிக்க மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜவகர் சாவ்டாவையும் பாஜக இழுத்து விட்டது. அதுபோல், வடக்கு குஜராத்தில் செல்வாக்கு மிக்க பிற்படுத்தப்பட்ட சமுதாய இளம் தலைவர் அல்பேஷ் தாகோருக்கும் குறி வைத்துள்ளது. இதன்மூலம், சவுராஷ்டிரா, வடக்கு குஜராத் பிராந்தியங்களில் நிலவும் பலவீனத்தை சரிக்கட்ட போராடி வருகிறது.

    பிரதமர் மோடியும் தன் பங்குக்கு பட்டிதார் சமூகத்தினரின் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதுவும், நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்த மத்திய அரசின் முடிவும் பட்டிதார் சமூகத்தின் ஓட்டுகளை பெற்றுத்தரும் என்று பாஜக கருதுகிறது.

    பாஜகவின் வியூகத்தை உணர்ந்த காங்கிரஸ் கட்சி, மூத்த தலைவர் அகமது படேலை குஜராத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஏற்பட்ட எழுச்சியை குன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சாவ்டா தைரியமாக கூறி வருகிறார்.

    பாஜக, பிரதமர் மோடியின் கவர்ச்சியையே பெரிதும் நம்பி இருப்பதாக தெரிகிறது. மோடியின் பெயர், வளர்ச்சி, பாகிஸ்தானில் புகுந்து நடத்திய விமான தாக்குதல் ஆகியவை வெற்றியை பெற்றுத்தரும் என்று பாஜக நம்புகிறது. மோடியின் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு மக்கள் வாக்களிப்பார்கள் என்று மாநில பாஜக தலைவர் ஜித்து வகானி உறுதிபட தெரிவித்தார். மொத்தத்தில், வெற்றியை ருசிக்க கடினமாக களப்பணியாற்ற வேண்டிய நிலையில் பாஜக இருப்பது தெளிவாகிறது. #BJP #PMModi

    ×