என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "thunder attack"
- மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின
- மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
மழைக்கு முன்னதாக பலத்த காற்று வீசியதில் புழுதி கிளம்பி, பொதுமக்கள் கண்ணில் விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் விடிய, விடிய இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சி, மங்களாபுரம் பகுதியில் நேற்று இரவு பெய்த மழையின் போது இடி தாக்கி வாழைமரங்கள் பாதியாக முறிந்து விழுந்தன. மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மின் சாதன பொருட்கள் என வெடித்து சிதறியது.
இதில் பல்பு, டி.வி. உள்ளிட்ட பொருட்கள் பழுதானது. ஒரு சில வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பானதால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர்.
அதேபோல் கண்ணமங்கலம் அடுத்த கானமலை ஊராட்சி, இருளம்பாறை அடுத்த முத்தாண்டி குடிசையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் கூரை வீட்டின் மீது இடி விழுந்து தீ பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
இருப்பினும் குடிசை வீடு முழுவதும் தீப்பிடித்து எறிந்து துணிகள், வீட்டு உபயோக பொருட்கள், நகை மற்றும் பணம் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமானது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி, பார்பரம்மாள்புரம், நம்பியாறு உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
நாங்குநேரி அருகே உள்ள பார்பரம்மாள்புரம் கிராமத்தில் மழை பெய்தபோது அந்த பகுதியை சேர்ந்த முத்து என்ற விவசாயி காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால், ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றார். அப்போது அவரை இடி தாக்கியது. இதில் முத்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
இடி தாக்கியதில் பரப்பாடி பாரதிநகரை சேர்ந்த முத்து செல்வி , செல்வகுமார் ஆகியோரது வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து அவர்கள் விஜயநாராயணம் போலீஸ் நிலையம் மற்றும் நாங்குநேரி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நம்பியாற்றில் 55 மில்லி மீட்டரும், ராதாபுரம் பகுதியில் 16 மில்லி மீட்டரும், சிவகிரி பகுதியில் 14 மில்லி மீட்டரும் மழை பெய்திருக்கிறது.
கருப்பாநதி, அம்பை, அடவிநயினார் பகுதியில் தலா 10 மில்லிமீட்டரும், சங்கரன்கோவில், சேரன்மகாதேவியில் தலா 4 மில்லிமீட்டரும், சேர்வலாறு, மணிமுத்தாறு, ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் தலா 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. ஆனாலும் நீர்மட்டம் உயரவில்லை. பாபநாசம் அணையில் 82.30 அடியாகவும், சேர்வலாறு அணையில் 86.88 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் 89.80 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 49 மில்லிமீட்டரும், சாத்தான்குளத்தில் 12 மில்லிமீட்டரும், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் தலா 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
கோவை:
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. நேற்று மாலையும் கோவை நகரில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கியது. லங்காகார்னர், அவினாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், பேரூர், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், ஆழியார் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக நொய்யல் ஆறு, பவானி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. முத்தண்ணன் குளத்துக்கு அதிக தண்ணீர் வந்ததால் பூசாரிபாளையம் அருகே சாய கழிவு நீர் கலந்து நுரை பொங்க காட்சியளித்தது.
வடவள்ளி பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இடிதாக்கி தொழிலாளி ஒருவர் பலியானார். அவரது பெயர் இளைய ராஜா (வயது 25). கோவை சோமையம்பாளையத்தை சேர்ந்த இவர் அப்பகுதியில் நடைபெற்று வரும் தனியார் நிறுவன கட்டுமான பணியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை முதல் மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது இடி தாக்கியதில் இளையராஜா உடல் கருகினார். சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆலாந்துறையை அடுத்த இருட்டுப்பள்ளம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மழை அடிவாரத்தில் பட்சிணாம் பதி கிராமம் உள்ளது. இங்கு 80-க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் குடியிருந்து வருகின்றனர். நேற்று இப்பகுதியில் பெய்த கனமழையால் மேற்கு தொடர்ச்சி மழையில் உருவான காட்டாற்று வெள்ளம் பட்சிணாம்பதி கிராமம் வழியாக வெளியேறியது.
இதனால் அங்கிருந்த குடிசை வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று மக்களை மீட்டு முகாமில் தங்க வைத்தனர். அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சியை அடுத்த ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்டது கருங்குன்று கிராமம். இந்த கிராமத்திற்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள சாலையில் சிறிய பாலம் உள்ளது. இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் ஓடைகள், சிற்றோடைகள் போன்றவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய பாலத்தின் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உடைந்தது . இதனால் கருங்குன்று கிராம மக்கள் தவிப்புக்குள்ளாகினர். கனமழை காரணமாக காரமடை அருகே உள்ள பெல்லாதி குளத்தின் கரையில் மண்அரிப்பு பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.
இதனால் கரை உடைப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதால் குளத்தின் கரை பகுதியில் உள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான ஆனைமலை, கோட்டூர், நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பலத்த மழை பெய்தது.
மழை காரணமாக ஆழியாறு அருகே உள்ள குரங்கு நீர் வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.
மங்கலம்பேட்டை:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எடைசித்தூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ரேகா (வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த தனது அண்ணன் மனைவி கஸ்தூரி (30), பரமசிவம் (41) உள்பட 39 பேர் நூறுநாள் திட்டத்தில் எடைசித்தூர் எல்லையில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென இடி-மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதில் ரேகா, கஸ்தூரி மற்றும் பரமசிவம் ஆகியோரை இடி தாக்கியது. இதில் ரேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கஸ்தூரி, பரமசிவம் ஆகிய 2 பேர் பலத்த காயம் அடைந்தார். இதைப்பார்த்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மங்கலம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பலத்த காயம் அடைந்த கஸ்தூரி, பரமசிவத்தை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி தமிழரசன் மங்கலம்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னிமலை:
சென்னிமலை அருகே உள்ள வடமுகம் வெள்ளோடு அடுத்த கொம்ம கோவில் ஆதி திராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). இவர் ஆடு மேய்த்து பிழைத்து வருகிறார். இவர் 13 பெரிய செம்பறி ஆடுகள், 17 குட்டிகள் வளர்த்து வருகிறார். இந்த கால்நடைகளை பெருமாள் நேற்று மாலை கொம்ம கோவில் அருகில் உள்ள பாலமுருகன் குடியிருப்பு பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக பலத்த இடி ஒன்று ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த இடத்தில் விழுந்தது. இந்த இடி தாக்குதலில், காட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 6 பெரிய செம்பறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. தனது வெள்ளாடுகள் இறந்ததை பார்த்து பெருமாளும் அவரது மனைவி பாப்பாவும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. கொம்மகோவில் பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தும்மக்குண்டை அடுத்துள்ள டி.பெருமாள் பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 29).
ராணுவ வீரரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை வீட்டின்மாடியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது. இதில் இடி தாக்கியதில் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்