search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallur Districts"

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்துள்ளது. இன்று காலையிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
    சென்னை:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்துள்ளது.

    திருவள்ளூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, செம்பரம்பாக்கம், அம்பத்தூர், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.

    இன்று காலை முதல் விடாமல் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்படக்கூடிய மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டில் 50 மி.மீட்டர் மழையும், குறைந்தபட்சமாக செங்குன்றத்தில் 5 மி.மீட்டர் மழையும் பெய்தது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்:- (மி.மீட்டரில்)

    பள்ளிப்பட்டு 50
    தாமரைப்பாக்கம் 47
    செம்பரம்பாக்கம் 43
    பூண்டி 31.40
    சோழவரம் 27
    ஆர்கே பட்டு 27
    திருவள்ளூர் 27
    ஊத்துக்கோட்டை 21
    பூந்தமல்லி 21
    அம்பத்தூர் 20
    திருவாலங்காடு 19
    பொன்னேரி 12
    திருத்தணி 12
    கும்மிடிப்பூண்டி 10
    செங்குன்றம் 5

    மொத்தம் 372.40 மி.மீட்டர். மழை பெய்தது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்தது. இன்று காலை மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் லேசான தூறல் பெய்து வருகிறது.

    இன்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்:-

    உத்திரமேரூர் 31
    செங்கல்பட்டு 9
    காஞ்சிபுரம் 47.30
    ஸ்ரீபெரும்புதூர் 43.60
    தாம்பரம் 8.10
    மதுராந்தகம் 33
    செய்யூர் 9.50
    திருக்கழுக்குன்றம் 10.20
    மாமல்லபுரம் 46.40
    திருப்போரூர் 23
    வாலாஜாபாத் 5
    சோழிங்கநல்லூர் 40
    ஆலந்தூர் 32

    மாவட்டத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக காஞ்சீபுரத்தில் 47.30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக வாலாஜாபாத்தில் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 338.10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    சென்னையிலும் நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. அதிகாலை 4 மணிக்கு சுமார் 30 நிமிட நேரம் பலத்த மழை பெய்ததால் ரோட்டில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.

    தாம்பரம், தி.நகர், ஆதம்பாக்கம் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் அந்த வழியாக செல்பவர்கள் சிரமப்பட்டு சென்று வந்தனர்.

    அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், வண்டலூர், கூடுவாஞ்சேரி, குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், அடையார், துரைப்பாக்கம், கந்தன்சாவடி, சென்ட்ரல், கோயம்பேடு, எழும்பூர் உள்பட பல பகுதிகளில் பரவலாக 1 மணி நேரம் கன மழை பெய்ததால் ரோடுகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முக்கிய கடலோர பகுதிகளான முட்டுக்காடு, கானாத்தூர், கோவளம், நெம்மேலி, சூலேரிக்காடு, தேவநேரி, மாமல்லபுரம், கல்பாக்கம், சதுரங்கபட்டினம், புதுப்பட்டினம், கூவத்தூர் பகுதிகளில் நேற்று மாலை பெய்ய துவங்கிய மழை இன்று காலை வரை பெய்து வந்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்வோரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தின் முக்கிய பகுதிகளான கிழக்கு ராஜ வீதி, கலங்கரை விளக்கம் சாலை, ஒத்தவாடை தெரு, கடற்கரை சாலை, ஐந்துரதம் பகுதிகளில் போதிய வடிகால் வசதியின்றி மழைநீர் குளம் போல் தேங்கி வாகனங்கள் ஊந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி கூறுகையில், “வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை பெய்து வருவதாகவும், இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற உள்ளதால் இன்னும் 2 நாட்களுக்கு மழை எதிர்பார்க்கலாம்” என்றும் தெரிவித்தார்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் 18.8 மி.மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 24 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்தார்.

    ×