search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallur GH"

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டதில் சில பிரிவுகளில் முறைகேடு நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. #TNGovtHospitals #VigilanceRaid
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளிடம், சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பதற்கு ஊழியர்கள் பணம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    டாக்டர்கள் ஒப்புதல் சீட்டு இல்லாமல் மருந்து - மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு இருப்புகளை குறைவாக ஆவணங்களில் பதிவு செய்து இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.



    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி ஆஸ்பத்திரி, காஞ்சீபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், தஞ்சை, மதுரை, கடலூர், கோபிசெட்டிபாளையம், ஓமலூர் ஆகிய 10 அரசு ஆஸ்பத்திரிகளில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

    ஆஸ்பத்திரியில் உள்ள மருந்து, மாத்திரைகள் வழங்கும் இடம், எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் பகுதி, அறுவை சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் வைக்கும் இடம், உணவு இருப்பு ஆகியவற்றில் சோதனை செய்தனர். ஊழியர்கள் பதிவேடு, ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது உள்நோயாளிகள், புறநோயாளிகளிடம் ஆஸ்பத்திரி ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது.

    சென்னை அரசு ஆஸ்பத்திரியில் 11 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தபோது 3 ஊழியர்களிடம் கணக்கில் வராத தலா ரூ.1000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை அவர்கள் நோயாளிகளிடம் லஞ்சமாக பெற்றது தெரிய வந்தது.

    இதே போல் திருவல்லிக்கேணி கஸ்தூரிபா மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக வரும் பெண்களின் உறவினர்களிடம் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது.

    அங்கு நடந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கும் ஊழியர்களிடம் இருந்து லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் அறையில் முதலில் சோதனையிட்டனர்.

    பச்சிளம் குழந்தைகள் வார்டு, மருந்தகம், பிணவறையிலும், கண் சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, மருந்து கிடங்கு, சமையல் அறை உள்ளிட்ட மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு செய்தனர்.

    இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றது. பின்னர் முக்கிய ஆவணங்களை லஞ்ச போலீசார் எடுத்துச்சென்றனர்.

    புற நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து குறித்து 4-ந்தேதிக்குப் பிறகு ஆவணத்தில் கணக்கு எழுதாதது, சமையல் செய்ய பொருட்கள் வாங்கியது பதிவை சமையல் ஒப்பந்ததாரர் புத்தகத்தில் எழுதாதது ஆகியவை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    கண் சிகிச்சைப் பிரிவில் கண்கள் பாதிப்புக்காக பயன்படுத்தப்படும் லென்ஸ் 350-க்கும் மேல் இருந்தது. ஆனால் இருப்பு கணக்குப்பதிவின்படி 150 லென்ஸ்தான் உள்ளது. இதனால் கண் லென்சில் முறைகேடு நடந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சோதனையில் சில பிரிவுகளில் முறைகேடு நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள், சமையல் ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

    காஞ்சீபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு, ஸ்கேன் சென்டர், எக்ஸ்ரே பிரிவு, விபத்து பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை நடந்தது.

    இதில் ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடலூர் நெல்லிக்குப்பம் மெயின் ரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் அங்குள்ள மகப்பேறு பிரிவு, எக்ஸ்-ரே பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கும் அவர்கள் சென்று சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனை இரவு 7.30 மணி வரை நடந்தது. சோதனை முடிவில் கணக்கில் வராத ரூ.6 ஆயிரம் மற்றும் உதவித்தொகை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

    ஈரோடு மாவட்டம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் மதியம் தொடங்கிய சோதனை இரவு 9.30 மணி வரை நீடித்தது.

    சோதனையின்போது கணக்கில் வராத ரூ.1000 கைப்பற்றப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #TNGovtHospitals #VigilanceRaid

    ×