search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN School department"

    திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 19-ந்தேதி வெளியாகும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்துக்கு யாரும் வரத்தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. #Plus2 #Plus2Result
    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு வருகிற 19-ந்தேதி புனித வெள்ளி அன்று வெளியாகிறது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 8 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுதினார்கள். வினாத்தாள் திருத்தப்பட்டு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி நிறைவு பெற்றது. மதிப்பெண் பட்டியலும் தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி அன்று வெளியிடுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் கொல்லப்படும் தினத்தை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் பெரிய வெள்ளி அன்று அரசு விடுமுறை விடப்படுகிறது.

    அன்று தேர்வு முடிவு வெளியிடுவதை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. திட்டமிட்டபடி 19-ந்தேதி காலை 9.30 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் அரசு தேர்வுத்துறை ஈடுபட்டு வருகிறது.

    பிளஸ்-2 தேர்வு முடிவு குருந்தகடு (சிடி) ஆகவோ, கம்ப்யூட்டரில் பிரிண்ட் செய்து பள்ளிகளுக்கும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பத்திரிகை, செய்தி நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் ஆன்லைன் வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது.

    அந்த முறையை இந்த வருடமும் பின்பற்றி தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படுகிறது. அதேபோல மாணவர்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தேர்வு முடிவு தெரிவிக்கப்படுகிறது.



    இதனால் பள்ளிகளோ, மாணவர்களோ தேர்வு முடிவை தெரிந்துகொள்ள கல்வி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை மதிப்பெண், ரேங்க் வாரியாக தெரிவிக்கும் முறை கடந்த 2 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறை கொண்டு வரப்பட்டது.

    இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி கூறியதாவது:-

    பிளஸ்-2 தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப் படும். மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும்.

    பள்ளிகளுக்கும் ஆன்லைன் வழியாக மாணவர்களின் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் அனுப்பி வைக்கப்படும். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருப்பதால் பேட்டியோ, அறிவிப்போ வெளியிட இயலாது. பத்திரிகை, டிவி செய்தி நிறுவனங்களுக்கும் இணைய தளம் வழியாக தேர்வு முடிவு அனுப்பப்படும். அதனால் யாரும் நேரில் வரத்தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Plus2 #Plus2Result
    ×