search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tondiarpet student kidnap"

    தண்டையார்பேட்டையில் 9-ம் வகுப்பு மாணவனை கடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை கருணாநிதி நகரை சேர்ந்தவர் ஞானபிரகாசம். அவருடைய மனைவி ஜெனிபர். இவர்கள் மகன் சிம்சோன் (14). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று மதியம் 2 மணியளவில் 3 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது டிப்டாப் வாலிபர் ஒருவர் அங்கு வந்தார்.

    குறைந்த விலையில் எண்ணை விற்பதாகவும், ஒரு கிலோ பாமாயில் விலை 30 ரூபாய்தான் என்று கூறினார். அவருடைய பேச்சை நம்பி ஞானபிரகாசமும், அந்த பகுதியில் உள்ள சிலரும் எண்ணை வாங்குவதற்காக பணம் கொடுத்தனர்.

    எண்ணை வாங்குவதற்காக வாலிபரிடம் மொத்தம் ரூ.1200 கொடுக்கப்பட்டது. உடனே அந்த வாலிபர் தன்னுடன் மாணவன் வந்தால் எண்ணை பாக்கெட்டுகளை எடுத்து வரலாம் என்று கூறி சிம்சோனை ஆட்டோவில் அழைத்துச் சென்றார்.

    2 மணிக்கு சென்ற மாணவன் மாலை 6 மணி வரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் தங்கள் மகன் கடத்தப்பட்டதாக தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

    இரவு 7 மணியளவில் கடத்தப்பட்ட மாணவனை போன்ற ஒருவர் ராயபுரம் பகுதியில் நிற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்றனர்.

    அப்போது மாணவன் சிம்சோன் அங்கு சுய நினைவை இழந்த நிலையில் நின்று கொண்டு இருந்தார். அவனை போலீசார் மீட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகே மாணவனுக்கு நினைவு திரும்பியது.

    விசாரணையில் ஆட்டோவில் மாணவனை அழைத்துச் சென்றவர் தனது சட்டையை மாணவனுக்கு அணிவித்து விட்டு மாணவன் சட்டையை வாங்கிக் கொண்டார். போலீசார் தேடுதல் வேட்டையை தீவிப் படுத்தியதால் கடத்திய மாணவனை ராயபுரத்தில் விட்டுச் சென்றார் என்பது தெரியவந்தது. எண்ணை வியாபாரி போல வந்தவர் யார்? மாணவனை கடத்தியது ஏன்? என்பது தெரியவில்லை.

    இந்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவனை கடத்தியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ×