search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "university"

    • அதிக பெண் மாணவர்களைக் கொண்ட கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை அங்கேயே நடத்தி கொள்ளலாம்.
    • ஆண் மாணவர்களின் எண்ணிக்கை பெண் மாணவர்களை விட அதிகமாக இருப்பது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த 3 தனியார் கல்லூரிகளில் சுமார் 2000 ஆண் மாணவர்கள் பெண் மாணவர்களாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுபிடித்துள்ளது.

    மேஜர் அங்கத் சிங் மகாவித்யாலயா, SBD அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி மற்றும் குல்கண்டி லாலராம் மகாவித்யாலயா ஆகிய மூன்று கல்லூரிகளில் முறைகேடுகள் நடந்ததாக பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்தார்.

    இந்த 3 தனியார் கல்லூரிகளில் நவம்பர் 21 அன்று முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை பெண் மாணவர்களை விட அதிகமாக இருப்பதும் சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது. சில தேர்வு அறைகள் முழுவதும் ஆண் மாணவர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

    அதிக பெண் மாணவர்களைக் கொண்ட கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளிலேயே செமஸ்டர் தேர்வுகளை நடத்திக்கொள்ள இப்பல்கலைக்கழகம் அனுமதித்துள்ளது. மேலும் செமஸ்டர் தேர்வுகளில் தங்கள் கல்லூரியின் ஊழியர்களையே தேர்வு கண்காணிப்பாளர்களாக கல்லூரி நிர்வாகம் நியமிக்க முடியும்.

    ஆகவே, பெண் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி காட்டி, முறைகேடுகளில் ஈடுபட்டு கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த கல்லூரி நிர்வாகிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயப்பிரகாஷ் அறிவித்துள்ளார்.

    டெல்டா மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால், பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த இளநிலை, முதுநிலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயப்பிரகாஷ் அறிவித்துள்ளார்.

    தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தற்போது துபாயில் சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
    • கல்வித்துறை வளர்ச்சிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    துபாய்:

    இந்தியா மற்றும் அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே சிறப்பான நட்புறவு நிலவி இருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் அரசுமுறை பயணமாக நேற்று அமீரகம் வருகை புரிந்தார். அவரை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் வரவேற்றார்.

    இந்த வருகையின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

    சிம்பயோசிஸ் சர்வதேச (டீம்ட் யுனிவர்சிட்டி) என்ற தனியார், நிகர்நிலை பல்கலைக்கழகம் இந்தியாவின் புனே நகரில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் பெங்களூரு, ஐதராபாத், நாசிக், நொய்டா, நாக்பூர் போன்ற பல்வேறு நகர வளாகங்களில் அமைந்துள்ளது.

    தற்போது துபாயில் சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பல்கலைக்கழகத்தை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா மற்றும் அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மாற்று எரிசக்தி, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகம் இருந்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக அமீரகத்துக்கு வந்ததையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சாதனை முயற்சியாக கூட்டு பொருளாதார ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த புதிய பல்கலைக்கழகம் துபாயில் தொடங்கப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் பணியிடங்களுக்கு ஏற்ற வகையில் இந்தியா தயாராகி வருகிறது.

    மேலும் இருநாடுகளுக்கு இடையே மின்சார வாகனம், தூய்மை மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள், மாற்று எரிசக்தி, விண்வெளி, சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மேம்பட உதவியாக இருக்கும். கல்வித்துறை வளர்ச்சிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விழாவில் அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், பல்கலைக்கழக அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து துபாய் அல் ஜடாப் பகுதியில் அமைந்துள்ள முகம்மது பின் ராஷித் நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய மந்திரி பங்கேற்று 'ஒய் பாரத் மேட்டர்ஸ்' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

    இதையடுத்து துபாய் துறைமுக பகுதியில் அமைய இருக்கும் 'பாரத் மார்ட்' என்ற வணிக வளாகத்தின் திட்டப்பணிகளை துறைமுக அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆய்வு செய்தார்.

    • 2022-ம் ஆண்டு மாதம் ஈரானில் ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • ஈரானில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிரான கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது.

    ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

    2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி 22 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டார். போலீஸ் காவலில் இருந்த போது அவர் திடீரென இறந்தார். இதையடுத்து அந்நாட்டில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிரான கடுமையான போராட்டம் நடைபெற்றது

    இந்நிலையில், அந்நாட்டில் உள்ள இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தனது ஆடைகளை களைந்து உள்ளாடைகளுடன் காணப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. பின்னர் அந்த மாணவியை பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.

    ஈரானின் கடுமையான இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாடுகளை எதிர்க்கும் விதமாக தான் அப்பெண் தனது ஆடைகளை கலைந்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

    உள்ளாடைகளுடன் காணப்பட்ட பெண் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் மனநல பிரச்சனை உள்ளதாகவும் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் அமீர் மஹ்ஜோப் தெரிவித்தார்.

    • ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார்.
    • அரசு மரியாதையுடன் ரத்தன் டாடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் உயிரிழந்தார். பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணி வகித்தவர்.

    உயிரிழந்த ரத்தன் டாடா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து மும்பையில் உள்ள வொர்லி மயானத்திற்கு எடுத்துவரப்பட்டது. அங்கு ரத்தன் டாடா உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

    இந்நிலையில், மறைந்த ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்திற்கு ரத்தன் டாடா பெயர் சூட்டப்படுவதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

    அதன்படி இப்பல்கலைக்கழகம் இனிமேல் ரத்தன் டாடா மகாராஷ்டிர மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும்.

    • BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • நாடு பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 இல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.  இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

     

    தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

     

    இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

     

    பல்கலைக்கழகம் மட்டுமின்றி தலைநகர் டாக்காவிலும் மற்றைய பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. டாக்காவில் உள்ள BTV தொலைக்காட்சியின் தலைமையகத்துக்கு வெளியில் போலீசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. BTV அலுவலகத்தின் வரவேற்பு கட்டிடத்துக்கும் பார்க்கிங்கில் நின்றிருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிடத்துக்குள்ளே பலர் சிக்கினர்.

     

    இதனைத்தொடர்ந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிகிறது. இதுபோன்று நேற்று பல்வேறு இடங்களில் நடந்த போராட்ட்டத்தில் மேலும் சுமார் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரை நடந்த போராட்டங்களில் ஒட்டுமொத்தமாக பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

    போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு பல்வேறு நகரங்களில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரகள் மீது ரப்பர் குண்டுகளையும், ஒலியெழுப்பும் கிரைனைடுகளையும் போலீசார் உபயோகித்து வருகின்றனர்.

     

    தலைநகரில் உள்ள மெட்ரோ நிலையங்கள் சேவையை நிறுத்தியுள்ளன. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டவர எல்லை பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். வங்காளதேசத்தில் வசிக்கும் இந்தியர்களை கவனமுடன் இருக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

    • வெப்பநிலை அதிகரிப்பு நிலத்தடி நீரை சார்ந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளை கடுமையாக பாதிக்கக்கூடும்.
    • ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும்.

    உலகளவில் நிலத்தடி நீரின் வெப்ப நிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.1 முதல் 3.5 டிகிரி செல்சியஸ் வரை நிலத்தடி நீரின் வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் நடந்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள நியூகேஸ்டில் மற்றும் சார்லஸ் டார்வின் பலக்லைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்கிய உலகளாவிய நிலத்தடி நீர் வெப்பநிலை மாதிரி மூலம் நடந்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.




     


    முக்கியமாக மத்திய ரஷியா, வடக்கு சீனா மற்றும் வட அமெரிக்கா, அமேசான் மழைக்காடுகள் ஆகிய பகுதிகளில் அதிகப்படியாக நிலத்தடி நீர் வெப்ப நிலை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழ்தலுக்கு நிலத்தடி நீர் இன்றியமையாததாக உள்ளது. வெப்பநிலை அதிகரிப்பு நிலத்தடி நீரை சார்ந்துள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளை கடுமையாக பாதிக்கக்கூடும்.


     



    நிலத்தடி நீர் முக்கிய குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வரும் நிலையில் இந்த வெப்ப நிலை அதிகரிப்பு அதன் பாதுகாப்பு தன்மையை சீர்குலைக்கக்கூடும். 2099 வாக்கில் உலகம் முழுவதும் உள்ள சுமார் 59 முதல் 588 மில்லியன் மக்கள் அருந்தும் நிலத்தடி நீர் அதிக வெப்பநிலை கொண்டதாக மாறியிருக்கும். அதிக வெப்பம் கொண்ட நிலத்தடி நீரில் நோய்க்கிருமிகள் வளரும் சாத்தியக்கூறுகளும் இருப்பதால் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடாக அமையும்.

    ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும். நிலத்தடி நீரை சார்ந்துள்ள விவசாயம், உற்பத்தி ஆகியவை பாதிக்கப்படும். அதிக வெப்பநிலை கொண்ட நீரில் கரைந்தநிலை ஆக்சிஜன் குறைவாக இருக்கும் என்பதால் நிலத்தடி நீரை ஆதாரமாக கொண்டுள்ள நதிகளில் உள்ள மீன்கள் உயிர்வாழமுடியாது.

    இதுபோன்ற பல்வேறு ஆபத்துகளை உள்ளடக்கிய நிலத்தடி நீர் வெப்ப நிலை அதிகரிப்பு புவி வெப்பமயமாதல் மற்றும் கால நிலை மாற்ற விளைவுகளை மனிதர்கள் தீவிரமானதாக எடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது என்பதை உணர்த்துகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலப் பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் கடும் நிதி நெருக்கடி நிலவிவருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன.
    • பல்கலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் துணைவேந்தர் ஒருவரே ராஜினாமா செய்யும் அளவிற்கான அவலநிலை உருவாகியுள்ளது.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    துணைவேந்தர்களை ராஜினாமா செய்யத் தூண்டும் அளவிற்கு பல்கலைக்கழகங்களில் நிலவும் கடும் நிதி நெருக்கடிகள்-இளைய சமுதாயத்தின் எதிர் காலத்தை வளப்படுத்தும் பல்கலைக் கழகங்களை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில் அப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் குமார், அண்மையில் தமிழக ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, சென்னைப் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் என தமிழகத்தில் இருக்கும் மாநிலப் பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் கடும் நிதி நெருக்கடி நிலவிவருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் என அனைவருக்கும் மாத ஊதியம் கூட வழங்க இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு உரிய தீர்வு காண வேண்டிய அரசு, கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது கடும் கண்டனத்திற்குரியது.

    மாநிலப் பல்கலைக் கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளை களைய உயர்கல்வித்துறையால் அமைக்கப்பட்ட உயர் மட்டக்குழுவும் மாநில அரசைப் போலவே உறங்கிக் கொண்டிருப்பதன் விளைவாக, பல்கலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் துணைவேந்தர் ஒருவரே ராஜினாமா செய்யும் அளவிற்கான அவலநிலை உருவாகியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மத்திய பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கு கியூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
    • மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இதற்கிடையே புதிய கல்வி கொள்கையின்படி மத்திய பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கு கியூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

    அதன்படி இந்த கல்வியாண்டிற்கான (2024-25) பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய படிப்புக்கான கியூட் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. தேர்வு முடிவு கடந்த 13-ந் தேதி வெளியானது. இதன்படி புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 2024-25 கல்வியாண்டிற்கான பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கான சேர்க்கைக்கு மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியானது.

    இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய படிப்புகளுக்கு மாணவர்கள் மத்திய பல்கலைக்கழக இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்க முடியவில்லை. இணைய தளம் முடங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்கலைக்கழக உதவி எண்களை தொடர்பு கொண்டால் யாரும் பதிலளிக்கவில்லை. இதனால் மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    • போட்டி முடிவுகளை வெளியிடுவதில் நடுவர்களாக இருந்த சிலர் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது.
    • சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கண்டோன்மெண்ட போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் இளைஞர் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் அணி அணியாக கலந்து கொண்டனர். இதில் போட்டி முடிவுகளை வெளியிடுவதில் நடுவர்களாக இருந்த சிலர் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இதன் காரணமாக பல போட்டிகள் நிறுத்தப்பட்டன.

    தொடர்ந்து நடுவர்களின் போன்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் நீதிபதி ஷாஜி என்பவரது போனுக்கு இடைத்தரகர்கள் தொடர்பு கொண்டிருப்பது தெரிவயவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கண்டோன் மெண்ட போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், லஞ்சம் புகாரை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து மார்க்கம்களி நீதிபதி ஷாஜி (வயது52), காசர்கோடு ஜோமெட் (33), மலப்புரம் சூரஜ் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து பதுங்கி வருகின்றனர்.
    • ஹமாஸ் அமைப்பின் இந்த சுரங்கங்கள் இஸ்ரேலுக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது.

    டெல் அவிவ்:

    காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    காசா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் 10 கி.மீ. நீளத்திற்கு ஒரு பெரிய சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.

    காசா முனையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய வகையில், பூமிக்கடியில் பயங்கரவாத நெட்வொர்க் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, அந்த சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதிகளை இஸ்ரேல் படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்பின் அதனை ஆய்வு செய்து, நெட்வொர்க்கின் பெரும் பகுதியையும் அழித்தனர்.

    காசாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இயங்குவதற்காக இந்த சுரங்க நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த அமைப்பு, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கோடிக்கணக்கான மதிப்பிலான நிதியை செலவிட்டு உள்ளது.

    இதன்படி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் கீழே சுரங்க நெட்வொர்க் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

    • தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
    • தமிழக அரசோ இதை பல்கலைக்கழகத்தின் பிரச்சினையாகக் கருதி, எந்த உதவியும் செய்யாமல் ஒதுங்கி நிற்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ரூ.500 கோடி வரை உபரி நிதி இருந்தது. ஆனால், பல்கலைக்கழகத்தின் செலவுகளுக்கு தமிழக அரசு போதிய நிதி, மானியத்தை வழங்கத் தவறியது தான் நிதிநிலை மோசமடைந்ததற்கு காரணம் ஆகும். அதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இந்நிலையிலிருந்து பல்கலைக்கழகம் மீளவும் அரசு தான் உதவ வேண்டும். ஆனால், தமிழக அரசோ இதை பல்கலைக்கழகத்தின் பிரச்சினையாகக் கருதி, எந்த உதவியும் செய்யாமல் ஒதுங்கி நிற்கிறது. இது பெரும் தவறு.

    தமிழ்நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம். பெருந்தலைவர் காமராசரால் உருவாக்கப்பட்டு, பின்னாளில் அவரது பெயரையே தாங்கி நிற்கும் கல்வி நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம். தமிழ்நாட்டின் அடையாளங்களாக திகழும் இந்த இரு பல்கலைக்கழகங்களும் முடங்கி விடாமல் காக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.

    எனவே, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியிலிருந்து மீட்கவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்கவும் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×