search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "U.S. walks away"

    ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால், பெட்ரோல், டீசல் விலை உயரும். பணவீக்கமும் அதிகரிக்கும். #IranNuclearDeal #PetrolDieselPrice
    ஹாங்காங்:

    ஈரான், வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா நேற்று முன்தினம் விலகியது. அத்துடன் ஈரான் மீது பொருளாதார தடைகளையும் விதிக்கிறது.

    இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

    இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு இறக்குமதியையே சார்ந்து உள்ளது. ஈராக், சவுதி அரேபியாவை தொடர்ந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக ஈரான் திகழ்ந்து வருகிறது.



    இப்போது ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிப்பதால், ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது பாதிக்காது. ஏனென்றால், அமெரிக்காவை போன்று ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்காதது வரையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்காது.

    ஈரானிடம் இருந்து வாங்குகிற கச்சா எண்ணெய்க்கான விலையை ஐரோப்பிய வங்கிகள் வழியாகத்தான் இந்தியா கொடுத்து வருகிறது. அவற்றை தடை செய்யாத வரையில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடரும்.

    தற்போது ஈரானில் இருந்து இந்தியா நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.

    ஈரான் அதிபர் ரூஹானி சமீபத்தில் இந்தியா வந்து சென்றபோது, 2018-19 ஆண்டில் நாள் ஒன்றுக்கு 3 லட்சத்து 96 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

    அமெரிக்காவின் பொருளாதார தடையால் ஏற்பட்டு உள்ள இழப்புகளை ஈடுகட்டுவதற்காக, ஈரான் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும்.

    ஏற்கனவே அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி விடும் என்ற எதிர்பார்ப்பில், கச்சா எண்ணெய் ஒப்பந்த விலை உயரத் தொடங்கி விட்டது. கடந்த 3½ ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த விலை உயர்வு அமைந்து உள்ளது.

    கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 80 டாலர் அளவுக்கு (சுமார் ரூ.5,200) உயரும் என்ற பேச்சு உள்ளது.

    நேற்று ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்துக்கு அதிகமாக உயர்ந்தது.

    அமெரிக்கா விலகலுக்கு முன்பாகவே எரிபொருள் விலை 20 சதவீத அளவுக்கு உயரும் என்று உலக வங்கி கணித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் நிலை உருவாகி உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்கிறபோது, அது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    ஏற்கனவே இதுவரை இல்லாத வகையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.43 ஆகவும், டீசல் விலை ரூ.69.56 ஆகவும் உள்ளது. இந்த விலை மேலும் உயர்கிறபோது, அது சங்கிலித்தொடர்போல ஒவ்வொன்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பண வீக்கம் எகிறும் எல்லா பொருட்களின் விலைகளும் உயரும். நாட்டின் பொருளாதாரத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.  #IranNuclearDeal #PetrolDieselPrice  #Tamilnews

    ×