search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vajpayee RIP"

    எளிமை, நேர்மை, கண்ணியம் போன்றவற்றால் இளைஞர்களுக்கு வாஜ்பாய் ஊக்கசக்தியாக திகழ்ந்தார் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். #AtalBihariVajpayee #PMModi
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஈடு, இணையற்ற பேச்சாளர், அரிதான நகைச்சுவை உணர்விலிருந்து மிகஉயர்ந்த தொலைநோக்குக்கு எளிதாக மடைமாற்றம் செய்துகொள்பவராகவும், மக்களோடு இயல்பாக தொடர்புகொள்ளும் அரிய திறனோடும், அவர்கள் தன்னம்பிக்கை கொள்வதற்கு ஊக்கம் தருபவராகவும், உயரிய கருத்துக்கு கொண்டு செல்பவராகவும் இருந்தார்.

    தமது அரசியல் நம்பிக்கைகளில் உறுதியாக இருந்த அவர், மற்ற கருத்துகளுக்கு இடம் கொடுத்து மரியாதை தந்து நாடாளுமன்ற விவாதத்திற்கான அளவுகோலை நிர்ணயித்தார். எளிமை, நேர்மை, கண்ணியம், பதவி மீதான தனிப்பட்ட பற்றின்மை ஆகியவற்றால் நாட்டின் இளைஞர்களுக்கு வாஜ்பாய் ஒரு ஊக்கசக்தியாக இருந்தார்.

    வாஜ்பாயை பொறுத்தவரை, ‘வளர்ச்சி என்பது பலவீனமானவர்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பது, ஒடுக்கப்பட்டவர்களை தேசிய நீரோட்டத்திற்குள் இணைப்பது’. இந்த தொலைநோக்கு தான் தொடர்ந்து நமது அரசின் கொள்கையாக உள்ளது.

    21-ம் நூற்றாண்டில் உலக அளவிலான தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா தயாராவதற்கான அடித்தளத்தை அமைத்தார் வாஜ்பாய். எதிர்காலத்துக்கான அவரது பொருளாதார கொள்கைகள் மற்றும் அவரது அரசின் சீர்திருத்தங்கள், பல இந்தியர்களின் வளத்தை உறுதி செய்தது. அடுத்த தலைமுறைக்கான உள்கட்டமைப்பிற்கு அவர் முன்னுரிமை கொடுத்தார்.

    வாஜ்பாய், உலக அளவில் மாற்றமுடியாத அளவுக்கு இந்தியாவின் இடத்தை உறுதி செய்தார். நாட்டின் தயக்கம், உலகின் எதிர்ப்பு தனிமைப்படுத்தப்படும் அச்சம் ஆகியவற்றை கடந்து இந்தியாவை அணு ஆயுத வல்லரசு நாடாக அவர் உருவாக்கினார். இந்த முடிவை அவர் சாதாரணமாக எடுக்கவில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கான சவால்கள் அதிகமாகி வருகின்றன என்பதால் அதன் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்தார்.

    அடித்தள மக்களும் நமது அண்டை நாட்டினரும் முன்னுரிமையாக கொண்ட மனிதராக வாஜ்பாய் திகழ்ந்தார். அண்டை நாட்டினருக்கு முன்னுரிமை என்ற நமது கொள்கைக்கு அவர் பல வழிகளில் ஆதர்சமாகவும், முன்னோடியாகவும் விளங்கினார். அமைதியைத் தேடி அவர் லாகூருக்கு பயணம் மேற்கொண்டார். இயல்பாகவே நம்பிக்கையும், உறுதியான குணமும் கொண்டவர் வாஜ்பாய்.


    தனிப்பட்ட முறையில் ஒரு சித்தாந்தவாதியாகவும், குருவாகவும், முன்மாதிரியாகவும் என்னை ஆழமாக கவர்ந்தவர் வாஜ்பாய். குஜராத்திலும் அதேபோல் தேசிய அளவிலும் எனது பொறுப்புகள் மீது அவர் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஒரு நாள் மாலை என்னை அழைத்த அவர், ‘குஜராத்துக்கு முதல்-மந்திரியாக செல்லுங்கள்’ என்று கூறினார்.

    ‘நான் எப்போதும் அமைப்பில் இருந்துதான் பணி செய்திருக்கிறேன்’ என்று கூறியபோது ‘மக்களின் எதிர்பார்ப்புகளை என்னால் நிறைவேற்ற முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதாக’ அவர் தெரிவித்தார். என் மீது வாஜ்பாய் வைத்த நம்பிக்கை மிகவும் பெருமைக்குரியது.

    நமது இளைஞர்களின் சக்தியுடன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்கிற, மாற்றத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிற, அதை சாதிக்கின்ற நம்பிக்கையுள்ள, தூய்மையான பொறுப்புமிக்க நிர்வாகத்திற்காக பாடுபடுகின்ற, இந்தியர்கள் அனைவருக்கும் வாய்ப்பளித்து, அனைவரையும் உள்ளடக்கிய எதிர் காலத்தை கட்டமைக்கின்ற தற்சார்புள்ள தேசமாக இன்று நாம் விளங்குகிறோம்.

    உலகத்தில் சமத்துவமும், அமைதியும் நிலவ நாம் பாடுபடுவோம். கோட்பாடுகளுக் காக நாம் பேசுகிறோம். மற்றவர்களின் விருப்பங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். நம்மை கொண்டுசெல்ல வாஜ்பாய் விரும்பிய பாதையில் நாம் பயணம் செய்கிறோம்.

    ஒரு ஒளி மறையும்போது ஏற்படுகின்ற துயரத்தை வைத்து ஒருவரின் வாழ்க்கை மதிப்பிடப்படுவதில்லை. வாழ்ந்த காலத்தில் மக்களின் வாழ்க்கையில் ஒருவரின் தாக்கம் எவ்வளவு நீடித்திருந்தது என்பதை வைத்தே அளவிடப்படுகிறது. இந்த காரணத்தால் வாஜ்பாய் உண்மையிலேயே பாரதத்தின் ரத்னாவாக இருந்தார். அவரது கனவுகளுடன் புதிய இந்தியாவை நாம் உருவாக்க, அவரது உணர்வுகள் நமக்கு தொடர்ந்து வழிகாட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AtalBihariVajpayee #RIPVajpayee #PMModi #Modi
    ×