search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vara Lakshmi"

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் விமர்சனம். #Sarkar #SarkarReview
    தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த விஜய், அமெரிக்காவில் பெரிய கார்ப்ரேட் சி.இ.ஓ.வாக இருக்கிறார். இவர் மீண்டும் சென்னைக்கு வருகிறார். இதையறிந்த பல கார்ப்ரேட் நிறுவனங்கள் பயப்படுகிறார்கள். ஆனால் விஜய்யோ தான் ஓட்டு போடுவதற்காக வந்தேன் என்று கூறுகிறார். ஓட்டு போட போன இடத்தில் இவரது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிடுகிறார்கள்.

    முதலமைச்சராக இருக்கும் பழ.கருப்பையாவின் ஆட்கள் தான் கள்ள ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்பதை விஜய் அறிந்துக் கொள்கிறார். மேலும் பலருடைய ஓட்டுகளும் கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது. இதை ஏன் மக்கள் கேட்கவில்லை என்று விஜய் ஆவேசப்படுகிறார். 



    விஜய்க்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வழக்கு தொடர, பழ.கருப்பையாவால் முதலமைச்சர் பதவிக்கு போகமுடியாமல் போகிறது. இதனால் கோபமடையும் பழ.கருப்பையா விஜய்யை பழிவாங்க நினைக்கிறார். ஆனால், விஜய்யோ பழ.கருப்பையாவை எதிர்த்து தமிழ்நாட்டை ஒழுங்குபடுத்த நினைக்கிறார்.

    இறுதியில், விஜய்யை பழ.கருப்பையா பழிவாங்கினாரா? பழ.கருப்பையாவை விஜய் எப்படி சமாளித்து எதிர்த்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    துறுதுறுவென இருக்கும் மிகவும் இளமையான விஜய்யை இப்படத்தில் பார்க்க முடிகிறது. நடனம், நடிப்பு, வசனம், ரொமான்ஸ் என அனைத்திலும் தெறிக்க விட்டுள்ளார். வசனங்கள் எல்லாம் தியேட்டரில் அனல் பறக்கிறது. குறிப்பாக கள்ள ஓட்டு போட்டவுடன் மக்களுடன் பேசுவது, பழ.கருப்பையாவுடன் நேருக்கு நேர் பேசும் காட்சிகள் விசில் பறக்கிறது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் மிரளவைத்திருக்கிறார்.



    நாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், விஜய்யை பார்த்தவுடன் காதல் வசப்படுவது, அவருடன் பயணிப்பது என அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். பழ.கருப்பையாவிற்கு மகளாக வரும் இவர், தந்தைக்கு அறிவுரை கூறுவது, விஜய்யை எதிர்ப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார். 
    முதலமைச்சராக வரும் பழ.கருப்பையாவின் நடிப்பு அபாரம். மிகவும் சாதாரணமாக நடிப்பை வெளிப்படுத்தி விட்டு செல்கிறார். இவருக்கு உதவியாளராக வரும் ராதாரவி, விஜய்யை தூண்டி விடுவது, பின்னர் அவர் யார் என்று தெரிந்தவுடன் பயப்படுவது என ரசிக்க வைத்திருக்கிறார்.

    தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், கள்ள ஓட்டு விவகாரம், கந்து வட்டி பிரச்சனை என அனைத்தையும் அலசியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். யாரை வைத்து என்ன சொன்னால் எப்படி படம் வரும் என்று கணித்து வைத்திருக்கிறார் இயக்குனர். விஜய்யிடம் அழகாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக வசனங்கள் கைத்தட்டல் பெற்றிருக்கிறது. 



    ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவுடன் பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. விஜய்யை மிகவும் அழகாக காண்பித்திருக்கிறார் கிரீஷ். பல இடங்களில் இவரது கேமரா விளையாடி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘சர்கார்’ நின்னு ஜெயிப்பான். 
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் அவரது வேடத்தில் யார் நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. #THEIRONLADY
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் படமாக எடுக்க முயற்சிகள் நடந்து வந்தன.

    இயக்குனர்கள் பாரதிராஜாவும் விஜய்யும் தனித்தனியாக இதற்கான அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களோடு இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனரான பிரியதர்ஷினியும் களத்தில் இறங்கினார். ஆனால் பிரியதர்ஷினிக்கு அந்த வாய்ப்பு கிடைத்து உள்ளது.

    வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ‘சக்தி’ என்ற படத்தை இயக்கியவர் பிரியதர்ஷினி. படம் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக இயக்கி, தயாரிக்கப் போவதாக அறிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    இந்த படத்தில் ஜெயலலிதாவின் இளவயது நடிகை வாழ்க்கை முதல் மருத்துவமனை இறுதி நாட்கள் வரை அனைத்தும் படமாக்கப்பட உள்ளன. அவரது சினிமா வாழ்க்கையை காட்டுவதற்காக அவர் நடித்த காலத்தில் கோடம்பாகத்தில் இருந்த சினிமா ஸ்டூடியோக்களை செட் போட்டு உருவாக்க இருக்கிறோம்.

    சினிமா முதல் அரசியல் வரை அவருடன் பயணித்தவர்கள் வேடங்களில் நடிக்க முக்கிய நடிகர்கள், நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஒரு மனிதருக்கு, குறிப்பாக ஒரு பெண்ணுக்கு, அதிலும் தனித்து வாழும் பெண்ணுக்கு இந்த வாழ்க்கை எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தும்.

    அந்தக்களத்தை மன உறுதியோடு போராடி, தன் ஒப்பற்ற ஆளுமையால் தடைகளைத் தகர்த்துக்காட்டி, என்றும் வழிகாட்டியாய் வாழ்ந்து, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய மக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்ட இரும்புப் பெண்மணியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பது பெருமையாக இருக்கிறது.



    ஒரு பெண்ணாக, வரலாறு கண்ட மாபெரும் தலைவியின் வரலாற்றை இயக்குவதற்கான இந்த வாய்ப்பை கடமையாகவே உணர்கிறேன். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகும் இந்தப் படத்தை ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி தொடங்க திட்ட மிடப்பட்டு இருக்கிறது.

    இந்த படத்தில் நடிக்க சில முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். எல்லோருமே பயந்தனர். ஆனால் நித்யா மேனன் மட்டும்தான் துணிச்சலுடன் ஒப்புக்கொண்டார். வரலட்சுமி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரியதர்ஷினி இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு நேற்று வெளியிடப்பட்டது. ‘தி அயர்ன் லேடி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். விரைவில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் நடக்கும் என்று படத்தின் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா வேடத்தில் வரலட்சுமி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×