search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vasishtasana"

    • ஆசனங்களை செய்யும் போது சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.
    • ஒவ்வொரு ஆசனத்தையும் 5 முறை செய்யவும்.

    வயிறு மற்றும் பிற உடல் பாகங்களில் சேரும் அதிகப்படியான கொழுப்பு, வாழ்க்கை முறை தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. பல நேரங்களில் தைராய்டு அல்லது பி.சி.ஓ.டி., பி.சி.ஓ.எஸ்., வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிற நோய்களால் எடை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்குகிறது.


    அதிக எடை மற்றும் இடுப்பில் சேரும் கொழுப்பு நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே அதை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். உடல் எடையை குறைக்க ஜிம்மில் மணி கணக்கில் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்து டயட்டை பின்பற்றுகிறோம். ஆனால் இன்னும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

    உடல் எடையை யோகா பயிற்சி மூலம் குறைக்க முடியும். தொடர்ந்து யோகா செய்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். மேலும் ஆசனங்களை ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது காலை மற்றும் மாலை என இருமுறை செய்ய முயற்சிக்கவும்.

    இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் 15 நாட்களுக்குள் உங்களில் வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள். யோகா ஆசனங்களை செய்யும் போது சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். சிறந்த முடிவுகளுக்கு ஒவ்வொரு ஆசனத்தையும் 5 முறை செய்யவும்.


    புஜங்காசனம்

    புஜங்காசனம் என்பது இரண்டு வார்த்தைகளால் ஆனது. புஜங் என்றால் பாம்பு என்றும் ஆசனம் என்றால் தோரணை என்றும் பொருள். இதை செய்யும் போது உடல் பாம்பு போல மாறும். எனவே இது கோப்ரா போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. புஜங்காசனம் செய்வதால் வயிற்று தசைகள் விரிவடையும். உடல் எடை மற்றும் தொப்பை குறைய உதவுகிறது.

    செய்முறை:

    முதலில் தரையை பார்த்து படுத்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தோள்களுக்கு கீழே வைக்க வேண்டும். பாதங்களை ஒன்றாக வைக்க வேண்டும்.

    இப்போது மூச்சை உள் இழுத்துக்கொண்டு பின்தலை, தோள்கள் இவர்றை 30 டிகிரி கோணத்தில் உயர்த்த வேண்டும்.

    வயிற்றுப்பகுதி தரையில் இருப்பதையும், தோள்கள் அகலமாகவும், தலை சற்று உயர்த்தப்பட்டதாகவும் இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    அதன்பிறகு கால் விரல்களுக்கு அழுத்தம் கொடுங்கள். ஆசனத்தை 10 வினாடிகள் வைத்திருந்து பின்னர் மெதுவாக தலையை கீழே கொண்டு வந்து பிறகு மூச்சை வெளியே விட வேண்டும்.


    வசிஷ்டாசனம்

    இந்த ஆசனம் செய்யும் போது உடலின் சமநிலை ஒரு கை மற்றும் உள்ளங்காலில் செய்யப்படுகிறது. இப்படி செய்வதால் வயிற்று தசைகள் நீட்டப்படும். இது கலோரிகளை எரிக்க உதவுகிறது.

    செய்முறை:

    சமநிலை ஆசனத்துடன் தொடங்க வேண்டும். இடது உள்ளங்கையை தரையில் உறுதியாக வைத்துக்கொண்டு வலது கையை தரையில் இருந்து உயர்த்த வேண்டும். முழு உடலையும் வலது பக்கம் திருப்ப வேண்டும்.

    வலது பாதத்தை தரையில் இருந்து தூக்கி இடது பாதத்தின் மேல் வைக்க வேண்டும். வலது கையை உயர்த்தி, விரல்களை மேல்நோக்கி வைக்க வேண்டும்.

    முழங்கால்கள், குதிகால் மற்றும் பாதங்கள் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்பில் இருப்பதையும், கைகள் மற்றும் தோள்கள் இரண்டும் நேர் கோட்டில் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    சிறிது நேரம் இதே நிலையில் இருக்க வேண்டும். அதேபோன்று இந்த யோகாவை இடதுபக்கம் செய்ய வேண்டும்.


    ஷலபாசனம்

    இதை செய்யும் போது உடல் ஒரு பூச்சியை போல் மாறும். எனவே இது வெட்டுக்கிளி தோரணை என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடையும், கொழுப்பும் வேகமாக குறையும். மேலும் தசைகள் வலுவடைந்து மலச்சிக்கல் நீங்கும்.

    செய்முறை:

    முதலில் நேராக படுத்துக்கொள்ள வேண்டும். உள்ளங்கைகளை தொடைகளுக்கு கீழே வைக்க வேண்டும். மூச்சை முழுமையாக உள்ளிழுத்து மூச்சை பிடித்து பின்னர் கால்களை ஒன்றாக உயர்த்த வேண்டும்.

    முழங்கால்கள் நேராகவும், பாதங்கள் ஒன்றாகவும் இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் கன்னம், நெற்றியை தரையில் வைக்க வேண்டும். 10 வினாடிகள் ஆசனத்தில் இருக்க வேண்டும். கால்களை மெதுவாக கீழே இறக்கி பின்னர் மூச்சை வெளியே விட வேண்டும்.

    ×