search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veera Narayana Perumal Temple"

    • 108 திவ்ய தேசங்களில் ஒன்று அல்ல.
    • இத்தல பெருமாளை தரிசித்தாலே அனைத்து திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களை தரிசிக்க வேண்டியது மிக அவசியம் என்று சொல்வார்கள். அப்படி திவ்ய தேசங்களை நாம் தரிசிக்க தொடங்குவதற்கு முன்பாக முதலில் வழிபட வேண்டிய ஆலயமாக, காட்டுமன்னார்குடியில் உள்ள வீர நாராயணப் பெருமாள் கோவில் திகழ்கிறது.


    இந்த ஆலயம், 108 திவ்ய தேசங்களில் ஒன்று அல்ல. ஆனால் அதனினும் சிறப்புமிக்கது. 108 திவ்ய தேசங்களையும் ஸ்ரீமந் நாதமுனிகள் மூலம், பெருமாள் வெளிக்காட்டிய கோவில் இதுவாகும்.

    சில கோவில்கள் அதன் தல சிறப்பால் பேசப்படுவது போல, சில கோவில்கள் அங்கு நடைபெற்ற நிகழ்வுகளால் பேசப்படுவதுண்டு.

    ஆழ்வார்கள் மகாவிஷ்ணுவைப் பற்றி மனமுருகி பாடிய பாடல்களின் தொகுப்பே 'நாலாயிர திவ்யப்பிரபந்தம்'. வைணவத்தின் வேதமாகக் கருதப்படும் இந்நூல், இவ்வாலயத்தில் அரங்கேற்றப்பட்டதால் பாடல்பெற்ற திவ்ய தேசங்களைவிட முதன்மை தலமாக போற்றப்படுகிறது.

    எனவே 108 திவ்ய தேசங்களையும் தரிசிக்க முடியாதவர்கள், காட்டுமன்னார் கோவிலில் உள்ள மரகதவல்லி தாயார் உடனாய வீரநாராயணப் பெருமாள் கோவிலை தரிசித்தாலே, அனைத்து திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஒரு முறை மேலக்கோட்டை திருநாராயணபுரத்தில் இருந்து இவ்வாலயத்திற்கு வந்த சிலர், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாளைப் பற்றி குருகூர் சடகோபன் (நம்மாழ்வார்) பாடிய பத்து பாசுரங்களை இசையுடன் கலந்து (அரையர் சேவை) பாடினர்.


    அதைக் கேட்டு மயங்கிய நாதமுனிகள், 'பத்து பாசுரங்களே இப்படி மனதை வயப்படுத்துகிறதே.. மீதமுள்ளதையும் பாடக்கூடாதா?' எனக் கேட்டார்.

    அதற்கு அவர்கள், 'மீதி பாசுரங்கள் எங்களுக்குத் தெரியாது. தாமிரபரணி கரையில் திருக்குருகூரில் வசிக்கும் நம்மாழ்வாரின் சீடர் பராங்குசதாசனுக்குத் தெரியும்' என்றனர்.

    இதையடுத்து பராங்குசதாசனைத் தேடி திருக்குருகூருக்கு சென்றார், நாதமுனிகள். ஆனால் பராங்குச தாசனோ, 'எல்லாம் நம்மாழ்வாருக்குத்தான் தெரியும்' என்று கைவிரித்தார்.

    எனவே ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வார் பிறந்த புளியமரத்தின் அடி பகுதிக்கு வந்த நாதமுனிகள், நம்மாழ்வாருக்காக மதுரகவி ஆழ்வார் பாடிய 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' என்ற பாசுரத்தை பன்னிரண்டாயிரம் முறை பாடினாா்.

    இதையடுத்து அவருக்கு காட்சி தந்த நம்மாழ்வார், மற்ற ஆழ்வார்கள் பாடிய 4 ஆயிரம் பாடல்களையும், ஆறுவிதமான அஷ்டாங்க சித்தி முறைகளையும் எடுத்துரைத்தார். அவற்றை ஆயிரம் ஆயிரமாகப் பிரித்து இசையுடன் பாடும்படி அமைந்த இசைப்பாக்களை 3 தொகுப்புகளாகவும், இயற்பாக்களை தனித்தொகுப்பாகவும் வகைபடுத்தினார்.


    அந்த பாடல்கள் அனைத்தையும், கனவில் இத்தல பெருமாளுக்கு பாடிக் காட்டி இயற்றினார். அப்படி நாலாயிர திவ்யபிரபந்தமும் இங்கே அரங்கேற்றப்பட்டது.

    இவ்வாலயத்தின் மூலவர் வீர நாராயணப் பெருமாள். தாயார் மரகதவல்லி. உற்சவ மூர்த்திகள் ராஜகோபாலன் மற்றும் ருக்மணி- சத்யபாமா. உற்சவ தாயார் செங்கமலவல்லி. நித்ய உற்சவராக உபய நாச்சியார்களுடன் அழகியமன்னார் எனப்படும் காட்டுமன்னார் (சுந்தர கோபாலன்), பிரார்த்தனை பெருமாளாக உபய நாச்சியார்களுடன் செண்பக மன்னார் ஆகியோரும் அருள்கின்றனர்.

    கோவிலில் எதிரே உள்ள வேதபுஷ்கரணி, ஆலய தீர்த்தமாக உள்ளது. ஆலயத்தின் தல விருட்சம், நந்தியாவட்டை ஆகும்.


    ஆலய அமைப்பு

    ஊரின் நடுவில் ஐந்துநிலை கோபுரத்துடன் கிழக்கு திசை நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. ஏழு பிரகாரங்களைக் கொண்ட இக்கோவிலுக்குள் 5 கிணறுகளும், விரிந்த தோட்டமும் உள்ளன. முன் மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம் மற்றும் கருடாழ்வார் சன்னிதி உள்ளது.

    அதனைத் தொடர்ந்த கல்ஹாரத்துடன் கூடிய வாசலைத் தாண்டினால் மண்டபத்தில் சேனை முதல்வர், மணவாளமாமுனிகள், பிள்ளை லோகாச்சாரியார், கிடாம்பி ஆச்சாரி ஆகியோரது சன்னிதிகள் தென்முகம் நோக்கியும், கருடாழ்வார் சன்னிதி மேற்கு நோக்கியும் இருக்கிறது.

    மகாமண்டபத்தில் ஜெயன், விஜயன் காவல்புரிய, கருவறையில் ஸ்ரீதேவி - பூதேவி உடனாய வீரநாராயணப் பெருமாள் அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தின் தென்புறத்தில் தனி சன்னிதியில் நரசிம்மரும், வராகரும், வடபுறத்தில் நாதமுனிகளும், அவரின் இருபக்கத்திலும் திருமங்கைஆழ்வார், நம்மாழ்வார், தொண்டரடி பொடியாழ்வார் ஆகியோரும் உள்ளனர்.

    அமைவிடம்

    இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள இந்த ஆலயம், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ளது.

    ×