search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veterinary Research Institute"

    • இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பணிகள் நிறைவடையும்.
    • விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

    சென்னை:

    மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோட்டில் தொடங்கப்பட்ட கால்நடைப் பூங்கா இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படவில்லை என குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து சில விவரங்களைத் தெரிவிக்கிறேன்.

    தலைவாசலில் அமைந்து உள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1866.28 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த பல்துறை பல்நோக்குடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையம் ரூ.564.44 கோடி திட்ட முதலீட்டில் அமைக்க 2019 ம் ஆண்டில் திட்டமிடப்பட்டது.

    இந்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப்பணிகள், குடிநீர் வழங்கும் பணிகள், 2021-ல் கழக ஆட்சி பொறுப்பேற்ற போது 50 சதவிகித பணிகள் கூட முடிவடையாத நிலையே இருந்தது.

    உலகத் தரத்தில் உயர் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் இடம் அதற்கு ஏற்ற இடம்தானா என்பது குறித்த ஆராய்ச்சி முதலில் நடைபெற்றிருக்க வேண்டும்.

    அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, சரியான திட்டமிடுதல் இல்லாமல், அவசர கதியில், மக்களின் வரிப்பணத்தில் அதிக பொருட்செலவில் இந்நிலையத்தை தொடங்கி உள்ளார்கள்.

    கால்நடை பராமரிப்பு என்பது அதிக அளவில் தண்ணீர் தேவையுடைய தொழிலாகும். தினசரி 11 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் ஒரு நிலையத்தை நீராதாரமே இல்லாத இடத்தில் அமைத்தது எந்த வகையான திட்டமிடல் எனத் தெரியவில்லை.

    எனினும், கடந்த 7.5. 2021-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக ஆட்சி அமைந்த பிறகு இந்நிலையத்தை சீரிய முறையில் கட்டமைத்து கால்நடை வளர்ப்போர் உண்மையாகவே பயன் பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடந்த 2021-ம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா நோய்த் தொற்று, 2023-ம் ஆண்டு, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவை காரணமாக ஜனவரி 2024-ல் முடிக்கப்படவேண்டிய பணிகள் சிறிது தாமதமாக முடிக்கப்பட்டு வருகின்றன.

    அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை தொடர்ந்து அனைத்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு நிலையம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×