search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vikravandi"

    • அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
    • 4 முனைப்போட்டி நிலவுவதால் ஒவ்வொரு கட்சியும் தீவிர பரிசீலனை.

    சென்னை, ஜூன்.11-

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 6-ந்தேதி மரணம் அடைந்ததால் அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. அதன்படி வருகிற 14-ந்தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 21-ந்தேதி கடைசி நாளாகும்.

    தேர்தலுக்கு நாள் நெருங்கி விட்ட காரணத்தால் இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகிறது.

    இதில் தி.மு.க. வேட்பாளர் யார்? என்பது நாளைக்குள் (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டு விடும் என்று அறிவாலய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதனால் தி.மு.க.வில் 'சீட்' கேட்டு அமைச்சர் பொன்முடி மகன் கவுதமசிகாமணி, மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், மாநில விவசாய பிரிவு செயலாளர் அன்னியூர் சிவா, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் ஆகிய 4 பேர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிட அமைச்சர் பொன்முடி மகன் கவுதமசிகாமணி முயற்சி செய்திருந்தும் அவருக்கு அப்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    அதனால் இடைத்தேர்தலில் நின்று எம்.எல்.ஏ.வாகி விட வேண்டும் என்ற முனைப்பில் இப்போது கவுதம சிகாமணி 'காய்' நகர்த்தி வருகிறார். ஆனால் இவரைப் போல் கட்சியில் முக்கியஸ்தராக இருக்கும் மாவட்ட அவைத் தலைவர் ஜெயச்சந்திரனும் எம்.எல்.ஏ. சீட் கேட்டு வருகிறார். இதில் ஜெயச்சந்திரனுக்கு தான் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.

    இதேபோல் அ.தி.மு.க.வில் கடந்த முறை போட்டியிட்ட முத்தமிழ்ச்செல்வனுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏனென்றால் 2021 தேர்தலில் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி 93,730 ஓட்டுகள் வாங்கி இருந்த நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வன் 84,157 வாக்குகள் பெற்று கடும் போட்டியை உருவாக்கி இருந்தார். அதாவது 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி வெற்றி பெற்றிருந்தார்.

    நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் 3,053 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

    2021 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா கட்சிகள் இணைந்திருந்தது. அதன் பிறகு இப்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது. இனி வரும் தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார்.

    எனவே இந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை நிறுத்தினாலும் பா.ம.க.வும் வேட்பாளரை களம் இறக்குகிறது.

    பா.ம.க. சார்பில் சிந்தாமணி புகழேந்தி ஏகமனதாக நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் நாம் தமிழர் கட்சியும் ஏற்கனவே போட்டியிட்ட ஷீபா ஆஸ்மியை வேட்பாளராக நிறுத்தும் என தெரிகிறது.

    விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதால் ஒவ்வொரு கட்சியும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை நிறுத்த ஆயத்தமாகி வருகிறது. அப்போதுதான் வெற்றி எளிதாக கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 72,188 வாக்குகளும், அ.தி.மு.க. 65,365 வாக்குகள், நாம் தமிழர் கட்சி 8,352 வாக்குகள் வாங்கி உள்ளது.

    இதையெல்லாம் கணக்கு போட்டு பார்க்கும்போது 4 முனை போட்டி நிலவினால் தி.மு.க., அ.தி.மு.க. இடையே தான் கடும் போட்டி நிலவும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. பா.ம.க. நிறுத்தும் வேட்பாளரை பொறுத்து அரசியல் களம் மாறுபட வாய்ப்பு உள்ளது.

    தி.மு.க. ஆளும் கட்சியாக இருப்பதால் இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க 15 அமைச்சர்கள் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் நியமிக்க கூடும் என தெரிகிறது.

    எனவே விக்கிரவாண்டி தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவுவதால் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளரை நிறுத்த தீவிர பரிசீலனையில் இறங்கி உள்ளது.

    • தி.மு.க. பட்டியல் தயார் செய்து வருகிறது.
    • விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி (தி.மு.க.) மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் 7-வது கட்டமாக ஜூன் 1-ந் தேதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் நடத்தினால் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

    அதன் அடிப்படையில் எந்த நேரத்திலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அனேகமாக நாளையே (7-ந்தேதி) தேர்தல் தேதிக்கான அட்டவணை வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் ஏற்கனவே அமலில் இருப்பதால் தேர்தலில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்களை வைத்து இடைத்தேர்தலை நடத்தி விடலாம் என தேர்தல் ஆணையம் கருதுவதாக தெரிகிறது.

    ஆனால் வெயில் அதிகமாக இருப்பதால் இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்வதற்கு முன்பு தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவு எடுக்க கூடாது என்றும் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    மே 4-ந் தேதி முதல் தமிழகத்தில் வெப்ப அலை நிலவி வருவதால் தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

    இந்த சூழ்நிலையில் எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் கட்சிகள் இடைத் தேர்தலை சந்திக்க தயாராகவே இருப்பதாக தெரிகிறது.

    பா.ம.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணியின்றி இப்போது தனித்தனியாக இருப்பதால் தேர்தலில் தமக்கு சாதகமான நிலை காணப்படுவதாக தி.மு.க. கருதுகிறது. இதனால் இப்போதே யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று தி.மு.க. பட்டியல் தயார் செய்து வருகிறது.

    இந்த தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் தலைமையை அணுகி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெயச் சந்திரன் விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, மறைந்த புகழேந்தி எம்.எல்.ஏ.வின் மருமகள் பிரசன்னா தேவி (கோலியனூர் முன்னாள் சேர்மன்) ஆகியோர் `சீட்' பெறுவதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர்.

    அ.தி.மு.க.வில் ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.எம். பன்னீர், முன்னாள் பொதுக் குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் உள்பட நிர்வாகிகள் போட்டியிட ஆர்வம் காட்டி அ.தி.மு.க. மேலிடத்தை அணுகி வருகின்றனர்.

    பா.ம.க.வில் மாவட்டத் தலைவர் புகழேந்திக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் ஏற்கனவே பிரபலமான முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி.சம்பத் உள்ளார்.

    இவர் பா.ஜனதா கட்சி யில் இருப்பதால் பா.ம.க. ஆதரவுடன் அவர் களம் காணுவாரா? என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை அறிவிப்பதை பொறுத்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும்.

    • தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவை தொழிற்சாலை உள்ளது.
    • மக்கள் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் அருகே வேடம்பட்டில் மருத்துவ கழிவு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய விஷக்காற்றால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 20 பெண்கள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விழுப்புரம் அடுத்த வேடம்பட்டில் தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவை தொழிற்சாலை உள்ளது. இன்று அதிகாலை 1 மணி அளவில் இப்பகுதியில் இருந்து வெளியேறிய நச்சு காற்றால் அருகில் இருந்த வேடம்பட்டு காலனி பொதுமக்கள் இக்காற்றை சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு அதிகாலை 1 மணி முதல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வேடம்பட்டை சேர்ந்த அங்காளவள்ளி, ஜெயலட்சுமி, சவுமியா, மாரியம்மாள், சுசிலா, ரேணுகா, மதன், கடலூர் சுரேஷ், உள்ளிட்ட 17 பேரும், காணை அரசு மருத்துவமனையில் 13 பேர்களும் என மொத்தம் 20 பெண்கள் உள்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதனால் வேடம்பட்டு கிராமத்தில் பதட்டம் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இப்பிரச்சனை தொடர்பாக வேடம்பட்டு காலனி மக்கள் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
    • அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.

    விக்கிரவாண்டி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    இதற்காக வேட்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் முன்னதாகவே வருகை தந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகைக்கு காத்திருந்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்பு மேடையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. புகேழந்தி மயக்கம் ஏற்பட்டு மேடையிலேயே மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் புகழேந்திக்கு முதல் உதவி செய்தனர்.

    இதையடுத்து லட்சுமணன் எம்.எல்.ஏ. பதட்டத்துடன் அங்கு ஓடி வந்து மேடைக்கு கீழே அமர்ந்திருந்த அவரது மகன் செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்து மேடைக்கு அழைத்தார்.

    பின்னர் புகழேந்தி எம்.எல்.ஏ.வை கைத்தாங்கலாக அழைத்து சென்று முதலமைச்சருக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு ஏ.சி. அறையில் ஓய்வெடுக்க வைத்தனர். ஆனாலும் அவருக்கு சரியாகாததால் பின்னர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை 10.35 மணியளவில் புகழேந்தி எம்.எல்.ஏ. பரிதாபமாக உயிரிழந்தார்.

    மரணம் அடைந்த புகழேந்திக்கு கடந்த 4 வருடங்களாகவே கல்லீரல் பிரச்சனை இருந்து வந்தது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பிறகுதான் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில்தான் அவர் மேடையில் மயங்கி விழுந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

    புகழேந்தி எம்.எல்.ஏ. தற்போது விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.

    புகழேந்தி எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததை அறிந்ததும் அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அங்கு அவரது உடலை பார்வையிட்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

    விக்கிரவாண்டி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் அரசு பஸ்சில் பயணியிடம் ரூ.16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    விக்கிரவாண்டி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கு வதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணி நிலை கண்காணிப்பு குழு அலுவலர் நாகராஜன் தலைமையில் ஏட்டுகள் துரைவேந்தன், பாலமுருகன், சத்யபிரியா ஆகியோர் நேற்று கஞ்சனூர் போலீஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வேலூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    பஸ்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்து 890 வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர் விக்கிரவாண்டி செ.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த அய்யனார் (வயது 26) தனியார் பைனான்ஸ் கம்பெனி பிரதிநிதியாக இருப்பது தெரியவந்தது.

    அவரிடம் பணத்தை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணம் இல்லை.

    இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து 15 லட்சத்து 90 ஆயிரத்து 890 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    விக்கிரவாண்டி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரனிடம், தாசில்தார் சுந்தர்ராஜன் முன்னிலையில் தேர்தல் பறக்கும் படையினரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

    பின்னர் விழுப்புரம் கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.  #LokSabhaElections2019

    விக்கிரவாண்டி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்க வரிமையம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் நாராயணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்பொழுது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனை செய்தனர். லாரியில் இருந்தவரிடம் விசாரணை செய்தபோது, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை சேர்ந்த முட்டை வியாபாரி முருகேசன் (41) என்பது தெரியவந்தது. அவரிடம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் இருந்தது. அந்த பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரிடமிருந்து அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மோகன் தலைமையில் ஏட்டுகள் பிரபாகரன், சசிகுமார், முருகானந்தம் ஆகியோர் மதுரபாக்கம் அடுத்த எம். குச்சிபாளையம் பகுதியில் விழுப்புரம் திருக்கனூர் சாலையில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது திருக்கனூர் பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது காரில் இருந்தவரிடம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது. விசாரணையில் அவர் திருக்கனூர், பிடாரி பட்டை சேர்ந்த முறுக்கு வியாபாரி மலைசாமி (39) என்பது தெரிந்தது.

    அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நாராயணன், மோகன் ஆகியோர் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் விக்கிரவாண்டி தாசில்தார் சுந்தர் ராஜன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.#LokSabhaElections2019

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 19). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் பரமசிவம்(19) இவர்கள் 2 பேரும் ஏ.சி.மெக்கானிக் படித்து விட்டு வேலை பார்த்து வந்தனர்.

    விக்னேஷ், பரமசிவம் இருவரும் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று அவர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் கண்டமங்கலத்தில் இருந்து மேல்மலையனூர் நோக்கி புறப்பட்டனர்.

    மோட்டார் சைக்கிளை விக்னேஷ் ஓட்டி சென்றார். பரமசிவம் பின்னால் அமர்ந்திருந்தார். விக்கிரவாண்டி அருகே ஒரத்தூர் லட்சுமிபுரம் கூட்டுசாலை வளைவில் விக்னேஷ் மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது அந்த வழியாக செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக திடீரென்று விக்னேசின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட விக்னேசும், பரமசிவனும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விக்னேஷ், பரமசிவம் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் வாலிபர்கள் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews

    விக்கிரவாண்டி அருகே கடனாக கொடுத்த நகை-பணத்தை திருப்பி கேட்ட தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி அருகே வி.மாத்தூர் கிராமத்ததை சேர்ந்தவர் குமார் (வயது 35). இவரும், அவரது மனைவி சுமதியும் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்தனர். இந்நிலையில் செங்கல் சூளை உரிமையாளர் செங்கேணி என்கிற கோவிந்தன் (38) என்பவர் குமாரிடம் கடனாக நகை மற்றும் பணத்தை வாங்கியுள்ளார்.

    நீண்ட நாட்களாகியும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் குமார் தனது மனைவி சுமதியுடன் சென்று கடனாக கொடுத்த நகை மற்றும் பணத்தை கேட்டார். இதில் ஆத்திரமடைந்த செங்கேணி சாதி பெயரை குறிப்பிட்டு தகாதவார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இது குறித்து குமார் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து கோவிந்தனை கைது செய்தார்.

    விக்கிரவாண்டி அருகே கொடுத்த கடனை கேட்ட தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய செங்கல்சூளை அதிபரை போலீசார் கைது செய்தனர்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது35). இவரது மனைவி சுமதி(30). இவர்கள் 2 பேரும் அருகில் உள்ள கோவிந்தன்(38) என்பவரது செங்கல் சூளையில் வேலை பார்த்துவருகிறார்கள்.

    குமாரிடம் செங்கல்சூளைஅதிபர் கோவிந்தன் கடனாக ரூ. 20 ஆயிரம் வாங்கி இருந்தார். அதன்பின்னர் அவர் கடன் வாங்கிய பணத்தை திருப்பிகொடுக்கவில்லை. இதனைதொடர்ந்து குமார், கடனாககொடுத்த பணத்தை கோவிந்தனிடம் கேட்டார்.

    அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கோவிந்தன் தொழிலாளி குமாரை திட்டி தாக்கினார். இதனை தடுத்த குமாரின் மனைவி சுமதியையும் தாக்கினார்.

    இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசில் குமார் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து கணவன்- மனைவியை தாக்கிய கோவிந்தனை கைது செய்தார்.
    ×