search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VIP treatment"

    பெங்களூரு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள சசிகலா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார். #Sasikala #VIPtreatment
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா, 2017-ம் ஆண்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு செய்தபோது சசிகலாவுக்கு சிறை விதிகளை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் கூறினார். மேலும் இதற்காக அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

    இதுகுறித்து விசாரிக்க கர்நாடக அரசு ஒரு குழு அமைத்தது. அந்த குழு விசாரணை நடத்தி மாநில அரசிடம் அறிக்கை வழங்கியது. அதில், டி.ஐ.ஜி. ரூபா கூறிய அனைத்து புகார்களும் உண்மை என்றும், சசிகலாவுக்கு 5 அறைகளும், சமையல் கூடமும் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. மேலும் சிறையை விட்டு சசிகலா வெளியில் சென்றது உண்மை தான் என்றும், இந்த விஷயத்தில் சிறை அதிகாரிகள் சட்டத்தை மீறி தவறு செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



    இதுகுறித்து கருத்து தெரிவித்த ரூபா, “தான் கூறிய புகார்கள் அனைத்தும் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது. தவறு செய்தவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும்” என்றார்.

    இது குறித்து கர்நாடக மாநில போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “பரப்பன அக்ரஹாரா சிறையில் எழுந்த புகார் குறித்து விசாரணை குழு அரசிடம் அறிக்கை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள அம்சங்களை கவனித்தேன். ஊடகங்களிலும் இதுபற்றி வெளியானதை பார்த்தேன். சட்டத்துக்கு மேலானவர்கள் யாரும் இல்லை. சசிகலா விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். #Sasikala #VIPtreatment
    ×