search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "virugambakkam government arts college"

    விருகம்பாக்கத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க கோரி அமைச்சருக்கு வி.என்.ரவி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    சென்னை:

    சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தில் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    விருகம்பாக்கம் தொகுதி 3 லட்சத்து 5 ஆயிரம் வாக்காளர்களை கொண்ட தொகுதி. விருகம்பாக்கம் தொகுதியிலே அரசு மேல்நிலைப்பள்ளி, உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, சென்னை மேல்நிலைப்பள்ளி, தனியார் மேல்நிலைப்பள்ளிகள் என சுமார் 40 பள்ளிகளுக்கு மேலாக உள்ளன.

    வசதி இல்லாத ஏழை-எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரசு கல்லூரிகளை நம்பி இருக்கின்றார்கள். அந்த வகையிலே, விருகம்பாக்கம் தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லூரி தர வேண்டும் என்று அமைச்சரை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியானது சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பகுதியிலேயே அமைந்து இருக்கிறது.

    சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 14 அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளும், 18 சுயநிதி கலைக்கல்லூரிகளும் என்று 39 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

    கடந்த கல்வி ஆண்டில் 7 அரசு கலைக் கல்லூரிகளில் சேர்க்கை இடங்கள் ஒப்பளிக்கப்பட்டதில், 1,485 இடங்கள் காலியாக இருக்கின்றன. ஆகவே தான், மேற்கண்ட விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியிலே புதியதாக ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேவை எழவில்லை.

    ஒரு கல்லூரி புதியதாக தொடங்குவதற்கு ரூ. 12 கோடியே 77 லட்சம் தேவைப்படுகின்ற சூழ்நிலையில் உறுப்பினர் விருகம்பாக்கம் தொகுதியிலே ஒரு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்குவது குறித்து கோரிக்கை வைத்திருப்பதால் விருகம்பாக்கம் தொகுதியிலே ஒரு புதிய கலைக்கல்லூரி தொடங்குவது குறித்து தேவைக்கேற்ப ஆராய்ந்து, இந்த அரசு பரிசீலிக்கும் என்றார்.

    ×