search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishnu Sahasra Nama Parayanam"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வினைப் பயன்களாலேயே இந்த வாழ்க்கை உருவாகிறது.
    • பங்குனி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர்.

    விஜயம் என்றால் வெற்றி. கடினமான சூழலில் போராட்டமான வாழ்க்கையில் இருப்பவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஏகாதசி விஜயா ஏகாதசி. இந்த ஏகாதசி விரதத்தை ராமபிரானே கடைப்பிடித்ததாக ஐதிகம்.

    வினைப் பயன்களாலேயே இந்த வாழ்க்கை உருவாகிறது. நல் வினைகளோடு பிறந்தவர்கள் வாழ்வில் நற்பயன்களையும் தீவினைகளோடு பிறந்தவர்கள் துன்பத்தையும் வாழ்வில் அனுபவிக்கின்றனர் என்கின்றன சாஸ்திரங்கள். ஆனால் அவையே இதற்கான தீர்வையும் சொல்கின்றன.

    ரிஷிகளும் ஞானிகளும் மனிதர்களின் பாவத்தைப் போக்கும் விரத நாள்களைக் கண்டு தெளிந்து அவற்றை ஒரு முறையாக வகுத்தனர். யார் எந்த தெய்வத்தை வணங்குபவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்களின் இஷ்ட தெய்வத்தை வழிபட உகந்த நாள்களை உருவாக்கி அன்று வழிபடவேண்டிய முறைமைகளையும் உருவாக்கினர்.

    பங்குனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பெயர். அன்று விரதம் இருந்து இறைவனை வழிபட்டால் எடுத்த காரியம் தடையில்லாமல் நடக்கும். எதிரிகளை வெற்றி கொள்ளலாம். மேலும், பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும்.

    இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை எப்படி மீட்பது? என்று ஸ்ரீ ராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது முனிவர் ஒருவர் அவரிடம் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார். அதன்படி விரதம் இருந்து ஸ்ரீ ராமர், சீதையை மீட்டு வந்தார் என ஏகாதசி விரத மகாத்மியம் தெரிவிக்கிறது.

    ராமச்சந்திர மூர்த்தி மனிதர்களுக்கு உதாரண புருஷராக வாழ்ந்துகாட்டியவர். மனிதர்கள் தங்கள் பாவங்கள் தீர வாழ்வில் வெற்றிபெற மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகளைத் தன் வாழ்வில் செய்துகாட்டியவர். அப்படி அவர் மேற்கொண்ட விரதங்களில் ஒன்று விஜயா ஏகாதசி.

    ராவணனுடன் போரிட இலங்கை செல்லும் முன்பு அந்தப் போரில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று வக்தால்ப்ய ரிஷியிடம் கேட்டார் ராமர். அதற்கு அந்த ரிஷியும் விஜயா ஏகாதசி விரத மகிமைகளை எடுத்துச்சொல்லி அதை மேற்கொள்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை விளக்கினார். ராம பிரானும் தவறாமல் அந்த விரதத்தைக் கடைப்பிடித்து அதன் பலனை அடைந்தார் என்கிறது புராணம்.

    விஜயா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து வழிபடுவது சிறந்தது. உப - வாசம் என்றால் அருகில் வசிப்பது என்று பொருள். இரையைத் தவிர்த்து இறைச் சிந்தனையில் மூழ்கியிருந்தால் அந்த இறைவன் நம் அருகில் வாசம் செய்வான் என்பது பொருள். எனவே முடிந்தவர்கள் முழு பட்டினி கிடந்து விரதம் மேற்கொள்வது பயன்தரும். துளசி தீர்த்தம் மட்டும் அருந்தலாம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது.

    வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் திருமாலின் திருவடியை வரைந்து வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.

    அதுவும் முடியாதவர்கள் தவறாமல் இறைவனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டிருப்பது நல்லது. விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை உரைக்கும் சகஸ்ர நாமத்தை இந்த நாளில் கேட்பது பயன்தரும். குறைந்தபட்சம் இன்று கட்டாயம் ஆலயம் சென்று பெருமாளை வழிபட்டு அங்கு அமர்ந்து விஷ்ணு சகஸ்ர நாமப் பாராயணம் செய்து வழிபடுவதன் மூலம் விஜயா ஏகாதசி விரதத்தின் பலனை முழுமையாகப் பெறலாம்.

    ×