search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "voting issue"

    எங்களின் வாக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திருமாவளவனுக்கு மட்டும் தான் என்று கமல்ஹாசனுக்கு மாணவி அனிதாவின் அண்ணன் பதில் அளித்துள்ளார். #LokSabhaElections2019 #KamalHaasan
    சென்னை:

    கமல்ஹாசன் சமூக வலைதளங்கள் மூலமாக பிரசார வீடியோ வெளியிட்டு வருகிறார். நேற்று ஒரு வீடியோவை வெளியிட்ட அவர், ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகளை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார்.

    அதில், ‘மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற பெயரில் ஒரு பெண்ணை கொலை செய்தார்களே அந்தப் பெண்ணோட அப்பா அம்மாகிட்ட கேளுங்க. அவங்க சொல்வாங்க யாருக்கு ஓட்டு போடணும்னு” என்று கூறியிருந்தார்.

    கமலின் இந்தக் கேள்விக்கு அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அண்ணன் கமலின் உண்மையான ரசிகன் நான். நடிப்புக்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞர், மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதைச் செய்யும் துணிச்சல்காரர்.

    ரசிகர் மன்றங்களைக் கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவர். அவரைப் பார்த்துதான் 18 முறை ரத்ததானம் செய்துள்ளேன். உடல்தானம் செய்துள்ளேன்.

    புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமலுக்கும் மக்கள் நீதி மய்யத்துக்கும் என் வாழ்த்துகள். அண்ணன் கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் நானும், எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம்.



    அனிதா இறந்தபோது ‘திருமாவளவன் இதைச் சும்மா விடக்கூடாது’ என்றார். அதே திருமாவளவன்தான் எங்கள் தொகுதியின் வேட்பாளர். மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட ஒரே கட்சி தி.மு.க மட்டுமே.

    தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது அது எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது, ஆதலால், எங்களின் வாக்கு தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் திருமாவளவனுக்கு மட்டும் தான்.”

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அனிதாவின் தந்தை சண்முகம் கூறும்போது, கமல்ஹாசனின் பேச்சுக்கு அனைத்து கட்சிகளும் அதிருப்தி தெரிவித்து உள்ளன. ஆனால் அவரது பேச்சு சரியானதுதான். ஆனாலும் எங்களது குடும்பம் தி.மு.க. கூட்டணிக்குதான் ஓட்டு போடுவோம் என்றார். #LokSabhaElections2019 #KamalHaasan
    ×