search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vrayyur"

    • தாயார் திருவடி சேவை வைபவம் நடைபெற்றது.
    • தாயாரின் திருவடியை பக்தர்கள் சேவித்தால் செல்வம் பெருகும்.

    திருச்சி திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில். ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில் விசேஷமானதாக கருதப்படும் நவராத்திரி உற்சவம் கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி தினமும் மாலை தாயார் மூலஸ்தானத்தில் இருந்து நவராத்திரி கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி, நவராத்திரி உற்சவத்தின் 5-ம் நாளான நேற்று வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை வைபவம் நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று மாலை 3.30 மணி அளவில் கமலவல்லி நாச்சியார் (தாயார்) மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க உள் வீதிகளில் அரையர் சேவையினை கேட்டபடி வலம் வந்தார். அப்போது கமலவல்லி நாச்சியார் சந்திர சூரியன் சவுரி கொண்டை, நெத்தி பட்டை, கலிங்க தொரா, காசு மாலை, முத்து மாலை, பவள மாலை, தங்க நெல்லிக்காய் மாலை, வைரத்தாலான பெருமாள் பதக்கம், வலது ஹஸ்தத்தில் கிளி, இடது ஹஸ்தத்தில் திருவாபரணங்கள், வைர திருமாங்கல்யம், பாத சலங்கை,தோடா (சிலம்பு) அணிந்திருந்தார்.

    பின்னர் நவராத்திரி மண்டபத்தில் பொற்பாதங்கள் (திருவடி) தெரிய மாலை 4 மணிக்கு எழுந்தருளினார். தொடர்ந்து பொதுஜனசேவை மாலை 6 மணி வரை நடைபெற்றது. பின்னர் 6.15 மணிக்கு தாயாருக்கு அமுது செய்விக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை கொலுவில் தாயார் வீற்றிருந்தார்.

    அதைத்தொடர்ந்து இரவு 8 மணி முதல் இரவு 8.45 மணி வரை வெள்ளிச்சம்பா அமுது செய்தல், தீர்த்த கோஷ்டி நடைபெற்றது. பின்னர் இரவு 9 மணிக்கு நவராத்திரி மண்டபத்தில் இருந்து தாயார் மூலஸ்தானத்துக்கு புறப்பட்டு, இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    தாயாரின் திருவடியை பக்தர்கள் சேவித்தால் செல்வம் பெருகும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும் என்பது ஐதீகம். இதனால் உறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தாயார் திருவடி சேவையை கண்டு தரிசித்து சென்றனர்.

    ×