search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water problem"

    திருப்பத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று அவ்வைநகர் மெயின் ரோட்டில் மறியல் செய்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகராட்சி 35-வது வார்டு அவ்வைநகரில் பாதாள சாக்கடை பணியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சப்ளை பாதிக்கப்பட்டது. இன்று வழக்கமாக வழங்கப்படும் லாரி குடிநீரும் வழங்கவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று அவ்வைநகர் மெயின் ரோட்டில் மறியல் செய்தனர். நகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிக்கு உடனே லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    ஆரணி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வேலூர்:

    ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி.ஆர். நகரில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அப்பகுதி பெண்கள் ஒரு குடம் தண்ணீருக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    குடிநீர் பிரச்சினையை போக்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டு மனுக்கள் கொடுத்தனர். ஆனால், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த எம்.ஜி.ஆர். நகர் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் ஆரணி- வாழப்பந்தல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து, மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    விருத்தாசலம் பூதாமூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் பூதாமூரில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல வீதிகள் உள்ளன. இதில் ஆர்.கே.ஆர் நகர் பகுதியில் சிதம்பரம் விருத்தாசலம் மெயின் ரோட்டில் மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இப்பகுதி மக்களின் வசதிக்காக விருத்தாச்சலம் தெற்கு பெரியார் நகர், தங்கம் நகர், பெருமாள் கோவில் பகுதியில் இருந்து ஆழ்துளை மோட்டார் மூலம் நேரடி குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் இணைப்பின் மூலம் காலை மற்றும் மாலை வேலைகளில் பொது மக்கள் குடிநீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர்.

    நேரடி இணைப்பு என்பதால் அழுத்தம் தாங்காமல் குடிநீர் வரக்கூடிய குழாய் ஆங்காங்கே சேதமடைந்து தண்ணீர் வீணாகி வந்தது.

    ஆர்.கே.நகர் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர். மேலும் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதி அடைந்தனர்.

    இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் விருத்தாசலம் சிதம்பரம் சாலையில் பூதாமூர் பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 8 மணியிலிருந்து 8.30 மணி வரை அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் கிடைத்து விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி உரிய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பெயரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    வந்தவாசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி அருகே உள்ள மும்முனி ஒத்தவாடை தெருவில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து பைப் லைன்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யபட்டு வந்தது.

    இந்நிலையில் பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கடந்த 15 நாட்களாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கபட வில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வந்தவாசி-ஆரணி சாலையில் காலிகுடங்களுடன் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாராமன் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மீஞ்சூரில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன் வாயல் பகுதி 1-வது, 2-வது, 3-வது தெருக்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு கடந்த 6 மாதமாக குடிநீர் சரவர வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    மேலும் எப்போதாவது வரும் குடிநீரிலும் கழிவுநீர் கலந்து கருப்பு மற்றும் மஞ்சள் நிறமாக காணப்படுகிறது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் அவர்கள் தவித்து வருகிறார்கள்.

    இதையடுத்து டிராக்டர் மூலம் விற்கப்படும் தண்ணீரை மட்டுமே நம்பி உள்ளனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.6 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “குடிநீர் தட்டுப்பாடு குறித்து மீஞ்சூர் பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கூடுதல் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

    இதே போல் அப்பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பால் அங்கேயே தேங்கி கிடக்கிறது. இதனால் தெருக்கள் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.

    கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்வதில்லை என்றும் பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    கடலூரை அடுத்த எம்.புதூர் கிழக்குத் தெருவை சேர்ந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    கடலூரை அடுத்த எம்.புதூர் கிழக்குத் தெருவை சேர்ந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் கலெக்டர் தண்டபாணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடலூரை அடுத்த எம்.புதூர் கிழக்குத் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இங்கு கடந்த 3 மாதமாக மின்மோட்டார் பழுதடைந்து உள்ளது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியாமல் இருந்து வருகிறது. இதனால் எங்கள் பகுதிக்கு கடந்த 3 மாதமாக குடிநீர் இல்லாமல் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறோம். இதன் காரணமாக எங்கள் பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் 2 கிலோமீட்டர் நடந்து சென்று விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் பிடித்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதே போல பண்ருட்டி அடுத்த புதுப்பாளையம் சேர்ந்த பொதுமக்கள் காலிகுடத்துடன் கடலூர் கலெக்டர் தண்டபாணியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதில் கூறியிருப்பதாவது:-

    பண்ருட்டி அடுத்த புதுப்பாளையம் பகுதியில் கடந்த 4 மாதமாக குடிநீர் குழாய் உடைந்து எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 3 கிலோமீட்டர் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் குடிநீர் பிரச்சினையை தீர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. #tamilnews
    ஒட்டன்சத்திரம் அருகே குடிநீர்கேட்டு பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே சின்னக்காம்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் பஞ்சாயத்து மூலம் சப்ளை செய்யப்படும் குடிநீரும் சீராக வினியோகம் செய்யப்பட வில்லை. நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டதால் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன் மற்றும் இடையகோட்டை போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    திண்டுக்கல் மாநகரில் மீண்டும் குடிநீர் பிரச்சினை தலை தூக்கியுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி யில் 48 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.இவர்களுக்காக ஆத்தூர் காமராஜர் அணை மூலமும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

    தற்போது பருவ மழை பொய்த்துப்போனதால் காமராஜர் அணையின் நீர் மட்டம் 2 அடிக்கும் கீழ் உள்ளது. இதனால் மாநகர் பகுதியில் 20 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. அதுவும் போதுமானதாக இல்லை.

    எனவே நகர் பகுதியில் தினசரி எங்கு பார்த்தாலும் காலிக்குடங்களுடன் மக்கள் அலைந்து திரியும் நிலை உருவாகியுள்ளது. கோடை காலத்தைப போல் இப்போது குடிநீர் பிரச்சினை மீண்டும் தலை தூக்கியுள்ளதால் திண்டுக்கல் நகர மக்கள் விரக்தியில் உள்ளனர்.

    மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் சப்ளை செய்தாலும் மக்கள் திருப்தியடைந்த பாடில்லை. எனவே பருவ மழை கைகொடுத்தால்தான் காமராஜர் அணைக்கு தண்ணீர் வந்து சேரும். இல்லையென்றால் இன்னும் குடிநீர் பிரச்சினை அதிக அளவில் தலைவிரித்தாடும் என்பதில் அய்யமில்லை.

    உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #waterproblem

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது லிங்கப்பநாயக்கனூர். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்தப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் ஆழ்துளை குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. இதனால் இந்தப்பகுதி மக்கள் அணைப்பட்டி கூட்டுக்குடிநீரையே நம்பி உள்ளனர்.

    ஆனால் கடந்த 6 மாதமாக கூட்டுக்குடிநீர் தண்ணீர் இந்தப்பகுதியில் வினியோகிக்கப்பட வில்லை. மேலும் போர்வெல் தண்ணீரும் கிடைக்காததால் இந்தப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர்.

    பெண்கள் சில கிலோ மீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவலம் இருந்து வந்தது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி லிங்கப்ப நாயக்கனூர் கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    நாளுக்கு நாள் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடவே ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று காலை லிங்கப்பநாயக்கனூருக்கு வந்த 3 அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிகாரிகளை கண்டித்து கோ‌ஷமிட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த உத்தப்பநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

    இதையடுத்து 2 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த சிறைபிடிப்பு போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டனர். #waterproblem

    தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடிநீர் குழாயை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #waterproblem

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தினமும் வெளிநோயாளியாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், உள் நோயாளியாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருபவர்கள் அவர்களது உடல்நிலைக்கு ஏற்றவாறு வார்டுகளில் அனுமதிக்கபட்டு அவர்களுக்கான சிகிச்சையை டாக்டர்கள் அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மருத்துவக் கல்லூரியில் பயின்று முடித்த முன்னாள் மாணவர் சங்கத்தினர், பல தன்னார்வலர் தொண்டுகள் மற்றும் சில தனியார் அமைப்புகள் மருத்துவக் கல்லூரிக்கு அன்பளிப்பாக தேவையான பொருட்கள் வழங்குவது வழக்கம். சமீபத்தில் ஒரு தனியார் தொண்டு அறக்கட்டளை சார்பில் பொதுமக்கள் பயன்படும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் குடிதண்ணீர் தொட்டி வைத்துள்ளனர். நோயளிகள் மற்றும் பொதுமக்கள் அவர்களது உறவினர்கள் என பலரும் குடிதண்ணீர் சிரமமின்றி இதை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அதில் உள்ள குடிதண்ணீர் தொட்டியில் உள்ள குடிநீர் குழாய்கள் தற்போது சேதமடைந்து பயன்பாடற்ற நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்கள் நீண்ட நேரமாக காத்திருந்து தண்ணீர் பிடித்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

    மேலும் அந்த குழாயில் காலை நேரத்தில் மட்டுமே குடிநீர் வருவதாகவும் பின்னர் நின்று விடுவதாக புகார்கள் தெரிவித்துள்ளனர்.

    எனவே மருத்துவமனை நிர்வாகமும், அன்பளிப்பாக வழங்கிய தனியார் தொண்டு அறக்கட்டளையும் சேதமாகி உள்ள குடிநீர் குழாய்களை சீரமைத்து மீண்டும் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் சரிசெய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    செந்துறை அருகே இன்று குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Waterproblem

    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முதுகுளம் கிராமத்தில் கடந்த 6 மாதமாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 3மாதத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதன்படி அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் குறைந்த அடியில் அமைக்கப்பட்டதால் அதில் இருந்து சரியாக தண்ணீர் வரவில்லை.

    இதனால் முதுகுளம் பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட வில்லை.

    இந்தநிலையில் இன்று காலை அப்பகுதி பொது மக்கள் முதுகுளத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்திற்கு தளவாய் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். #Waterproblem

    மதுராந்தகம் அருகே குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #waterproblem

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள தண்டரைபேட்டை கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடி தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிஅடைந்தனர்.

    இதுபற்றி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை அரசு பஸ்சை சிறை பிடித்து காலி குடங்களுடன் தண்டரைப்பேட்டை- மதுராந்தகம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் மதுராந்தகம போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மறியலில ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிராம மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #waterproblem

    ×